பூங்காவாக மாறிய புதர் மண்டிய காவல்நிலையம் - இன்ஸ்பெக்டர் மாற்றத்தால் வருந்தும் வடலூர்! | Cuddalore Vadalur Inspector transferred

வெளியிடப்பட்ட நேரம்: 11:20 (18/02/2019)

கடைசி தொடர்பு:11:20 (18/02/2019)

பூங்காவாக மாறிய புதர் மண்டிய காவல்நிலையம் - இன்ஸ்பெக்டர் மாற்றத்தால் வருந்தும் வடலூர்!

கடலூர் மாவட்டம் வடலூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் அம்பேத்கார். இவர் வடலூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்று 40 நாள்கள்தான் ஆகிறது. இவர் எந்தக் காவல் நிலையத்துக்குச் சென்றாலும் தான் பணிபுரியும் இடம் சுத்தமாக, அழகாக இருக்க வேண்டும் என நினைப்பவர். அப்படித்தான் இதற்கு முன்பு பணியாற்றிய சிதம்பரம் தாலுகா காவல் நிலையத்தை அழகுபடுத்தியவர்.

அம்பேத்கார்

அங்கிருந்து வடலூர் வந்தவுடன் இங்கும் அந்தப் பணி தொடங்கியது. காவல் நிலைய வளாகத்தில் விபத்து வாகனங்களும், பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களும், பின் பகுதியில் முட்புதர்களும் மண்டி கிடந்தது. முதலில் இவற்றைச் சுத்தப்படுத்த நடவடிக்கை எடுத்தார். அதன் பின்பு காவல் நிலையத்துக்கு அருகில் மத்திய தபால் துறைக்குச் சொந்தமான இடத்தில் குப்பைகள் கொட்டப்பட்டு சுகாதார சீர் கேடுகளின் பிறப்பிடமாக இருந்ததையும் சுத்தம் செய்தார். அரசு காவல் நிலையக் கட்டடத்துக்கு வெள்ளை அடித்துக் கொடுக்க காவல் நிலையத்தின் முன்பு பகுதியில் சிமென்ட் தளம் அமைத்து அழகு படுத்தினார்.

அம்பேத்கார்

அதேபோல் இன்ஸ்பெக்டர் அறை, காவல் நிலையத்தின் உட்புறம் என அனைத்து இடங்களையும் அழகுபடுத்தப்பட்டது. காவல் நிலையத்தின் முன்புறம் இருந்த மரங்கள் அழகாக ஒழுங்குபடுத்தப்பட்டு, ஆங்காகங்கே அழகு தரும் பூச்சட்டிகள், அழகு செடிகள் வைக்கப்பட்டு, இன்று பளிச் காவல் நிலையமாக வடலூர் காவல் நிலையம் மாற்றப்பட்டது.  நகரில் கஞ்சா, வழிப்பறி, செயின் பறிப்பு, சாலை ஓர ஆக்கிரமிப்பு, கட்டப் பஞ்சாயத்து என அனைத்தையும் செய்து வந்த சமூக விரோதிகள் மீது எடுத்த கடுமையான நடவடிக்கை மூலம் சட்டம் ஒழுங்கை நிலை நாட்டினார்.

அம்பேத்கார்

இவரின் திட்டமிட்ட செயலால் சமீபத்தில் லட்சக்கணக்கானவர்கள் கூடிய வடலூர் வள்ளலார் தைப்பூசத் திருவிழாவில் சிறிய அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல், போக்குவரத்தையும் அழகாக ஒழுங்கிப்படுத்தினார். வடலூரில் சமூக விரோதிகளுக்குச் சிம்ம சொப்பனமாகவும், பொதுமக்களிடம் அன்பாகவும் இருந்த இன்ஸ்பெக்டர் அம்பேத்கார் விழுப்புரம் மாவட்டத்துக்கு இடம் மாறுதல் செய்யப்பட்டுள்ள செய்தி வடலூர் பகுதி மக்கள் கவலையடைய செய்துள்ளது.


[X] Close

[X] Close