இரவில் டாஸ்மாக் ஊழியரை பதறவைத்த இருவர்! - சில மணி நேரத்தில் போலீஸ் காட்டிய அதிரடி | Two persons were arrested in Dharamapuri for tasmac money robbery

வெளியிடப்பட்ட நேரம்: 12:00 (18/02/2019)

கடைசி தொடர்பு:12:00 (18/02/2019)

இரவில் டாஸ்மாக் ஊழியரை பதறவைத்த இருவர்! - சில மணி நேரத்தில் போலீஸ் காட்டிய அதிரடி

தர்மபுரி, கிருஷ்ணகிரி திருவண்ணாமலை மாவட்டங்களில் டாஸ்மார் ஊழியர்களைத் துப்பாக்கியால் சுட்டு பணத்தைக் கொள்ளையடிக்கும் கும்பலைத் தருமபுரி போலீஸார் கைது செய்துள்ளனர்.

தர்மபுரி மாவட்டம், சிக்கலூர் டாஸ்மாக் கடையில் விற்பனையாளர் மகரஜோதி கடந்த 16-ம் தேதி இரவு விற்பனை முடித்துவிட்டு, டாஸ்மாக் கடையில் வசூலான ரூ.1.30 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு இரு சக்கர வாகனத்தில் திரும்பியுள்ளார். அப்போது மகரஜோதியைப் பின்தொடர்ந்த இருவர், நரிப்பள்ளியில் பெட்ரோல் பங்கு கடந்து சென்றபோது அவரைத் தடுத்து நிறுத்தினர். 

டாஸ்மாக் ஊழியர் மகரஜோதி

இந்தக் கொள்ளைச் சம்பவம் கண்ணிமைக்கும் நேரத்தில் முகமூடி அணிந்திருந்த அந்தக் கொள்ளைக் கும்பலில் ஒருவன் துப்பாக்கியால் மகரஜோதியைச் சுட்டுள்ளான். அதிர்ச்சி அடைந்த மகரஜோதி கையால் தடுத்துள்ளார். அப்போது துப்பாக்கிக் குண்டு மகரஜோதியின் தோள் பட்டைப் பகுதியில் பாய்ந்துள்ளது. இதில் ரத்த வெள்ளத்தில் மகரஜோதி சரிந்து விழுந்துள்ளார். பிறகு அந்த கொள்ளைக் கும்பல் மகரஜோதி பையில் வைத்திருந்த ரூ.1.30,000 பணத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். 

கொள்ளையன் வெங்கசேடன்

இந்தக் கொள்ளை சம்பவம் குறித்து தகவல் அறிந்த கோட்டப்பட்டி போலீஸார் மகரஜோதியை மீட்டு அரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அங்கு மகரஜோதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

கொள்ளையன் பரதன்

உடனடியாக கொள்ளைச் சம்பவத்தில் விசாரணை மேற்கொண்ட தருமபுரி எஸ்.பி மகேஷ்குமார், மூன்று தனிப்படைகள் அமைத்துத் தேடுதல் வேட்டையை நடத்தியுள்ளார். அப்போது அரூர் வனப்பகுதியில் பதிவு எண் இல்லாமல் வந்த மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை மடக்கிப்  பிடித்து போலீஸார் விசாரணை செய்தபோது முன்னுக்குப் பின் முரணாகப் பதில் கூறியுள்ளனர். அவர்களைச் சோதனை செய்தபோது மோட்டார் சைக்கிளில் ரூ.1,30,000 பணமும், கைத்துப்பாக்கி, 4 தோட்டாக்களை போலீஸார் எடுத்துள்ளனர். இரண்டு பேரையும் அரூர் காவல் நிலையம் அழைத்துச் சென்று  விசாரணை நடத்தியுள்ளனர்.
 
விசாரணையில் இருவரும், கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையைச் சேர்ந்த சின்னதுரை மகன் வெங்கடேசன், நாகேஸ்வரன் மகன் பரதன் என்பதும், இருவரும் கூட்டாக டாஸ்மாக் ஊழியரைத் துப்பாக்கியால் சுட்டு பணத்தைக் கொள்ளையடித்து வந்ததை ஒப்புக் கொண்டுள்ளனர். இதுதவிர கடந்த டிசம்பர் மாதம் ஊத்தங்கரையிலும், ஜனவரி மாதம் திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்திலும் டாஸ்மாக் ஊழியர்களைத் தாக்கி கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டுள்ளனர்.


[X] Close

[X] Close