தறிகெட்டு ஓடிய போலீஸ் `கார்'! - பறிபோன 3 உயிர்கள் | 3 persons died by mk stalin security force car hits

வெளியிடப்பட்ட நேரம்: 12:15 (18/02/2019)

கடைசி தொடர்பு:13:59 (18/02/2019)

தறிகெட்டு ஓடிய போலீஸ் `கார்'! - பறிபோன 3 உயிர்கள்

ஸ்டாலின் பாதுகாப்புக்கு சென்றபோது தறிகொட்டு ஓடிய போலீஸ் கார்

தி.மு.க தலைவர் ஸ்டாலின் பாதுகாப்புக்குச் சென்ற காவல்துறை வாகனம் மோதி மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் விழுப்புரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போலீஸ் வேன் மோதி பலியானவர்

விழுப்புரம் மாவட்டம், ரிஷிவந்தியம் தொகுதியின் எம்.எல்.ஏ வசந்தம் கார்த்திகேயனின் இல்லத் திருமணம் நேற்று கள்ளக்குறிச்சியில் நடந்தது. அந்த விழாவில் பங்கேற்ற தி.மு.க-வின் தலைவர் ஸ்டாலின், புதுச்சேரியில் ஆளுநர் கிரண் பேடிக்கு எதிராக முதல்வர் நாராயணசாமி நடத்தி வரும் போராட்டத்துக்கு நேரில் ஆதரவு தெரிவிக்கச் சென்றார். அப்போது அவரின் பாதுகாப்புக்காக விழுப்புரத்தில் இருந்து சி.ஆர்.பி.எப் வீரர்கள் ஜீப்பில் சென்றனர். ஆயுதப்படை பிரிவைச் சேர்ந்த சரவணன் என்பவர் அந்த ஜீப்பை ஓட்டிச் சென்றார்.     போராட்டக் களத்தில் முதல்வர் நாராயணசாமியை சந்தித்து ஆதரவு தெரிவித்த ஸ்டாலின் கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்னை புறப்பட்டுவிட்டதால், சி.ஆர்.பி.எப்.வீரர்கள் விழுப்புரம் திரும்பினர்.

விபத்தில் பலியானவர்

விழுப்புரம் – புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் மதகடிப்பட்டை அடுத்திருக்கும் கெங்கராம்பாளையம் மதுவிலக்கு சோதனைச் சாவடி அருகே செல்லும்போது ஜீப், ஓட்டுநர் சரவணனின் கட்டுப்பாட்டை இழந்து வலதுபுறம் சென்றது. அப்போது விழுப்புரத்திலிருந்து புதுச்சேரிக்கு சென்று கொண்டிருந்த மூன்று இரு சக்கர வாகனங்கள் மற்றும் அங்கு சைக்கிளில் நின்று கொண்டிருந்த ஒருவர் மீதும் மோதிய ஜீப் அங்கிருந்த சாலையோர பள்ளத்தில் இறங்கியது. அந்த விபத்தில் சைக்கிளில் நின்று கொண்டிருந்த வளவனூர் மாங்குப்பத்தைச் சேர்ந்தமண்ணாங்கட்டி, தனித்தனி இருசக்கர வாகனங்களில் சென்ற விழுப்புரம் கொண்டங்கி பாலு, உளுந்துர்பேட்டை தொப்பையன் குளம் திருமுருகன் ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர்.

போலீஸ் கார் மோதி தூக்கிவீசப்பட்ட பைக்குகள்

காவல்துறையின் ஜீப்பில் வந்த அனைவரும் மது குடித்துவிட்டு போதையில் இருந்ததுதான் இந்த விபத்துக்குக் காரணம் என்றும் அவர்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்கு உடனே விரைந்த விழுப்புரம் மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை அங்கிருந்து கலைந்து போகச் சொன்னார். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த வளவனூர் காவல்துறையினர் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய காவலர் சரவணனை சஸ்பெண்டு செய்து விழுப்புரம் மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் உத்தரவிட்டுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close