`ஏழு முறை மனு அளித்தும் பலனில்லை!- ஆட்சியர் அலுவலகத்தில் மகனுடன் பெண் தீக்குளிக்க முயற்சி | a lady tried to attempt suicide withe her son in collector office campus

வெளியிடப்பட்ட நேரம்: 13:05 (18/02/2019)

கடைசி தொடர்பு:13:05 (18/02/2019)

`ஏழு முறை மனு அளித்தும் பலனில்லை!- ஆட்சியர் அலுவலகத்தில் மகனுடன் பெண் தீக்குளிக்க முயற்சி

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏழு முறை மனு அளித்தும் எந்த உதவியும் கிடைக்காத மன அழுத்தத்தில் இருந்த பெண் ஒருவர் தன் மகனுடன் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.   

தீக்குளிக்க முயற்சி செய்த பெண்

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த ஓராண்டுக்கு முன்பாக இசக்கிமுத்து என்பவர் தன் மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் மண்ணெண்ணெய் ஊற்றித் தீவைத்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் பின்னர், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் காவல்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்ட பின்னரே பொதுமக்களை உள்ளே செல்ல அனுமதித்து வருகின்றனர். 

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்துக்குள் நுழைய ஒன்பது வாயில்கள் இருந்தன. அவை அனைத்தும் அடைக்கப்பட்டு தற்போது இரு நுழைவாயில்கள் மட்டுமே உள்ளன. அவற்றில் போலீஸார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். அவர்களின் பலத்த சோதனைக்குப் பின்னரே பொதுமக்களால் உள்ளே நுழைய இயலும். இத்தகைய சோதனைகளுக்கு மத்தியிலும் கூட, அடிக்கடி மண்ணெண்ணெய் கேனுடன் வந்து தற்கொலைக்கு முயற்சி செய்யும் சம்பவங்கள் நடந்து வருகின்றன.

மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கோரிக்கை மனுக்களுடன் பொதுமக்கள் இன்று வந்த நிலையில், கரிவலம்வந்தநல்லூர் அருகே உள்ள மணலூர் கிராமத்தைச் சேர்ந்த மாரியம்மாள் என்பவர் தன் 7 வயது மகனுடன் வந்திருந்தார். யாரும் எதிர்பார்க்காத நிலையில், திடீரென தனது பையில் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய் கேனை எடுத்து மகன் மீது ஊற்றியதுடன் தன் மீதும் ஊற்றிக்கொண்டு தீவைத்துக்கொள்ள முயன்றார். 

அருகில் இருந்தவர்கள் அவரைத் தடுத்து நிறுத்தினார்கள். உடனடியாக போலீஸார் அவரை வாகனத்தில் ஏற்றிச் சென்று விசாரித்தனர். அப்போது பேசிய அவர், ``எனது கணவர் ஆறுமுகம் என்னைக் கைவிட்டுச் சென்று விட்டார். என் மகனுக்கு 7 வயதான போதிலும், மனநலம் குற்றிய நிலையில் இருப்பதால், அவனைக் கவனிக்க மிகவும் சிரமப்பட வேண்டியதிருக்கிறது. அவனை விட்டுவிட்டு தனியார் நிறுவனங்களுக்கு வேலைக்குச் செல்ல முடியவில்லை. அதனால் குடும்பத்தை நடத்தவே மிகுந்த சிரமப்பட்டு வருகிறேன். 

தீக்குளிக்க முயன்ற 7 வயது சிறுவன்

நான் தலையாரி வேலைக்கு விண்ணப்பித்திருந்தேன். ஆனால், எனக்கு வேலை கிடைக்கவில்லை. எனது நிலையை விளக்கமாகச் சொல்லி மாவட்ட ஆட்சியரிடம் ஏழு முறை மனு கொடுத்தும் எந்த உதவியும் இதுவரை கிடைக்கவில்லை. அதனால்தான் ஆட்சியர் அலுவலகம் முன்பாக தற்கொலை செய்யும் முடிவுடன் வந்தேன்’’ எனத் தெரிவித்தார். அவருக்கு போலீஸார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தார்கள். ஆட்சியர் அலுவலக வாயிலில் மகனுடன் பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. 


[X] Close

[X] Close