பிப்.15-ல் முகிலனின் செல்போன் உபயோகத்தில் இருந்தது, ஆனால்... வைகோ அதிர்ச்சி தகவல் | mdmk vaiko talks about social activist mugilan

வெளியிடப்பட்ட நேரம்: 14:41 (18/02/2019)

கடைசி தொடர்பு:14:41 (18/02/2019)

பிப்.15-ல் முகிலனின் செல்போன் உபயோகத்தில் இருந்தது, ஆனால்... வைகோ அதிர்ச்சி தகவல்

``போராளி முகிலன் என்கவுண்டர் செய்து சுட்டுக் கொல்லப்பட்டிருப்பார், இல்லையென்றால் கடத்தப்பட்டிருப்பார்'' என அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ.

வைகோ

நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக தஞ்சாவூர் வந்திருந்த ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், ``ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி 22 ஆண்டுகாலம் போராடினோம். 2010-ம் ஆண்டு நான் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி வழக்கு தொடுத்தேன். இதில் உயர்நீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டது. அடுத்த நாளே ஸ்டெர்லைட் நிர்வாகம் உச்ச நீதிமன்றம் சென்று ஆலையை மூடுவதற்கு ஸ்டே ஆர்டர் வாங்கியது.

அதன் பிறகு தொடர் போராட்டங்கள்  நடைபெற்றன. கடந்த வருடம் நடந்த போராட்டத்தில் திட்டமிட்டு 13 பேர் படுகொலை செய்யப்பட்டனர். கூலிப்படைகளாக அ.தி.மு.க அரசின் காவல்துறை செயல்பட்டது. இதன் பிறகு சென்னை உயர் நீதிமன்றக் கிளையான மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தேன். நீதிபதி, அரசை கொள்கை முடிவு எடுக்க சொன்னார், செய்யவில்லை. சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றச் சொன்னார்கள், செய்யவில்லை. பூனைக்கும் தோழன், பாலுக்கும் காவல் என கண்ணாமூச்சி  நாடகத்தை நடத்தியது அ.தி.மு.க அரசு. பிறகு ஸ்டெர்லைட் நிர்வாகம் டெல்லி தலைமை பசுமைத் தீர்பாயத்துக்குச் சென்றனர்.

வைகோ பேட்டி

இதையடுத்து, ஸ்டெர்லைட் நிர்வாகம் உண்மையை மறைத்து பசுமை தீர்ப்பாயத்தில் தங்களுக்குச் சாதகமாக தீர்ப்பைப் பெற்றது. அந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில் முதலில் எனது மனு ஏற்றுகொள்ளப்படவில்லை. பின்னர் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஒன்றரை மணி நேரம் ஸ்டெர்லைட் ஆலையின் சுற்றுச்சூழல் விதிமீறல்கள் குறித்து வாதிட்டேன். இதில் ஆலையிலிருந்து 100 மீட்டர் தூரத்தில் புகைபோக்கி அமைப்பதற்குப் பதிலாக 60 மீட்டர் தொலைவில் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது. மேலும், ஆலையிலிருந்து வெளிவரக்கூடிய புகையில் நச்சுப் பொருள்கள் கலந்திருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக வேதாந்தா குழுமத்தின் இணையதளத்தில் கூறப்பட்டுள்ள அளவு வேதிப்பொருள்கள் ஆய்வு செய்தபோது அவை அனைத்தும் நோய்க்கான காரணிகள் உள்ளது என தெரியவந்தது.

இதையடுத்து, இன்று உச்ச நீதிமன்றம் பசுமைத் தீர்பாயம் வழங்கிய தீர்ப்புக்குத் தடைவிதித்துள்ளது. இந்தத் தீர்ப்பால் ஆகாய வெளியில் மிதப்பது போன்று உணர்கிறேன். பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்பை தூக்கி குப்பையில் போட்டுள்ளது உச்ச நீதிமன்றம். பணத்தால் அரசியல் கட்சிகளை விலைகொடுத்து வாங்கிய ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் இன்று நீதியின் முன் மண்டியிட்டது. நீதிபதிகளுக்கு தான் தலை வணங்குவதாகவும், மீண்டும் நீதிமன்றம் சென்றாலும் ஆலையை என்னாலும் திறக்கவிட மாட்டோம். 13 உயிர்கள் சிந்திய ரத்தம்தான் இந்த ஆலையை மூட வைத்துள்ளது.

போராளி முகிலன் கடந்த 15-ம் தேதி ரயில் பயணம் செய்தார். இரவு 1 மணி வரை முகிலனின் செல்போன் உபயோகத்தில் இருந்தது. அதன் பின்பு தொடர்பில் இல்லை. அவர் ஒன்று என்கவுண்டர் செய்து சுட்டுக் கொல்லப்பட்டிருப்பார். இல்லையென்றால் கடத்தப்பட்டிருப்பார். இதற்கு ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகமும் காவல்துறையும்தான் காரணம்'' என்று குற்றம்சாட்டினார். பின்னர் தீர்ப்பு குறித்த மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்ளும் வகையில் பொதுமக்களுக்கு வைகோ இனிப்பு வழங்கி கொண்டாடினார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close