`விவாகரத்துக்குத் தடையாக இருந்ததால் குழந்தையைக் கொன்றேன்!'- தாய் வாக்குமூலம் | Mother arrested for killing her child near vellore

வெளியிடப்பட்ட நேரம்: 17:20 (18/02/2019)

கடைசி தொடர்பு:17:20 (18/02/2019)

`விவாகரத்துக்குத் தடையாக இருந்ததால் குழந்தையைக் கொன்றேன்!'- தாய் வாக்குமூலம்

மறுமணத்துக்கு இடையூறாக இருந்ததால், ஒன்றரை வயதுடைய பெண் குழந்தையை அடித்துக்கொன்றுவிட்டதாக, கைதான தாய் திடுக்கிடும் வாக்குமூலம் அளித்திருக்கிறார்.

குழந்தையை கொன்ற நளினி மற்றும் முரளி

வேலூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த நேதாஜி நகரைச் சேர்ந்த பாஸ்கரன் மகள் நளினி (24). இவருக்கும், பெங்களூரு கே.ஆர்.புரம் பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் (35) என்ற கட்டட மேஸ்திரிக்கும், கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு மகன்களும், ஒன்றரை வயதில் ரித்திகா என்ற பெண் குழந்தையும் இருந்தது. சிவக்குமார், குடும்பத்துடன் பெங்களூருவில் தங்கியிருந்து, கட்டட வேலைசெய்துவந்தார். அங்கு, சென்னையைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளி முரளி (24) என்பவருடன் நளினிக்கு பழக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் கணவருக்கு தெரியவந்தது. அவர் கண்டித்தார். இதனால் கணவனைப் பிரிந்த நளினி, சமீபத்தில் பெண் குழந்தையை மட்டும் தூக்கிக்கொண்டு, வாணியம்பாடி வந்துவிட்டார். வாணியம்பாடி பெருமாள்பேட்டையில் வாடகைக்குத் தனியாக வீடு எடுத்து முரளியுடன் சேர்ந்து வாழ்ந்தார்.

இந்த நிலையில், கடந்த 15-ம் தேதி மாலை, படுகாயங்களுடன் சுயநினைவின்றிக் கிடந்த குழந்தையைத் தூக்கிக்கொண்டு நளினி, வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்குச் சென்றார். பரிசோதனை செய்த மருத்துவர்கள், குழந்தை இறந்துவிட்டதாகக் கூறினர்.  உயிரிழந்த பெண் குழந்தையின் கன்னம் மற்றும் முதுகில் பலமாகத் தாக்கியிருப்பதும், பற்களால் கடிக்கப்பட்டிருப்பது போன்ற அடையாளங்கள் இருந்தன. இதுபற்றி, வாணியம்பாடி டவுன் போலீஸாருக்கு மருத்துவர்கள் தகவல் கொடுத்தனர். சந்தேகத்தின் பேரில் தாய் நளினி மற்றும் முரளியைக் கைதுசெய்த போலீஸார் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர்.

அதில், இருவரும் சேர்ந்து குழந்தையைக் கொன்றதை ஒப்புக்கொண்டனர். முரளியிடம் கைப்பற்றப்பட்ட செல்போனில், ஆபாசப் படங்கள் அதிகம் இருந்தன. குழந்தையின் தாய் நளினி கொடுத்திருக்கும் வாக்குமூலத்தில், ‘‘முரளியைத் திருமணம் செய்ய நினைத்தேன். கணவரிடம் விவாகரத்து கிடைக்கவில்லை. அதற்கு, என்னுடைய குழந்தை தடையாக இருந்தது. குழந்தையைக் கொன்றுவிடு... நாம் சென்னை சென்றுவிடலாம். அங்கு, திருமணம் செய்துகொண்டு சந்தோஷமாக வாழலாம் என்று முரளி கூறினார். அவரும் நானும் சேர்ந்துதான் குழந்தையை அடித்துக் கொன்றோம்’’ என்று கூறியதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நளினி மற்றும் முரளியை போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.


[X] Close

[X] Close