`காஷ்மீர் சம்பவத்தில் மத்திய அரசை குறைசொல்லக் கூடாது!’ - கிருஷ்ணசாமி | Don't blame central government for pulwama attack, says Krishnasamy

வெளியிடப்பட்ட நேரம்: 17:40 (18/02/2019)

கடைசி தொடர்பு:17:40 (18/02/2019)

`காஷ்மீர் சம்பவத்தில் மத்திய அரசை குறைசொல்லக் கூடாது!’ - கிருஷ்ணசாமி

'காஷ்மீரில் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதல் சம்பவத்தில், மத்திய அரசு கவனக்குறைவாக இருந்ததாகக் குறைசொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது' என புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

கிருஷ்ணசாமி

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், 5 ஏக்கர் நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6000 வழங்கப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்பை வரவேற்கிறோம். தமிழக அரசும் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள பட்டாசுத் தொழிலாளர்கள் மற்றும் ஏழை மக்களுக்கு ரூ.2000 உதவித்தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இதையும் வரவேற்கிறோம். ஆனால், வறுமைக்கோட்டுக்குக் கீழ் இருப்பவர்கள் 6 லட்சம் பேர் என்ற எண்ணிக்கை பல ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு. எனவே, புதிதாக கணக்கெடுப்பு நடத்தி, ஏழைகளாக  உள்ள அனைவருக்கும் உதவித்தொகை கிடைக்க வழி ஏற்படுத்த வேண்டும்.

கிருஷ்ணசாமி

தேவேந்திரகுல வேளாளர்களைப் பட்டியல் பிரிவில் இருந்து விடுவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, மார்ச் 6-ம் தேதி அனைத்து கிராமங்கள், நகரங்களில் புதிய தமிழகம் கட்சி சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும். அதே கோரிக்கையை வலியுறுத்தி, ஒவ்வொரு மாதம் 6-ம் தேதியும் தொடர்ந்து போராட்டம் நடைபெறும். காஷ்மீர் தாக்குதல் சம்பவத்தில் மத்திய அரசு கவனக்குறைவாக செயல்பட்டதாகக் கூறுவதை ஏற்க முடியாது. அந்தச் சம்பவத்துக்கு மத்திய அரசு உரிய பதிலடி கொடுக்கும். பதிலடி கொடுக்க வேண்டும்’’ என்று தெரிவித்தார்.


[X] Close

[X] Close