`வாழ்வாதாரத்துக்கு வழிசொல்லுங்க சார்!’ - 300க்கும் மேற்பட்ட மாட்டுவண்டித் தொழிலாளர்கள் போராட்டம் | Bullock cart workers staged protest near mayiladuthurai

வெளியிடப்பட்ட நேரம்: 18:20 (18/02/2019)

கடைசி தொடர்பு:18:20 (18/02/2019)

`வாழ்வாதாரத்துக்கு வழிசொல்லுங்க சார்!’ - 300க்கும் மேற்பட்ட மாட்டுவண்டித் தொழிலாளர்கள் போராட்டம்

முடிகண்டநல்லூர் மணல் குவாரியில் மணல் அள்ளுவதற்கு அனுமதி வழங்கினால் மட்டுமே எங்களுக்கு வாழ்வாதாரம் என்று 300 க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் போராட்ட அணிவகுப்பில் ஈடுபட்டதால் மணல்மேட்டில் பரபரப்பு ஏற்பட்டது.

நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை அருகே முடிகண்டநல்லூரில் அரசு மணல் குவாரி இயங்கி வருகிறது. இந்த மணல் குவாரியிலிருந்து தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களுக்கு லாரி மூலம் மணல் கொண்டு சென்று விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக, லாரி போக்குவரத்துக்கு முன்பிருந்தே மாட்டுவண்டி மூலம் மணல் சப்ளை செய்யும் பழக்கம் வழக்கத்தில் இருந்தது. பின்பு, லாரி மூலம் மணல் சப்ளை தொடங்கிய பிறகும் கூட மணல் குவாரிக்கு அருகிலிருக்கும் ஊர்'களுக்கு மாட்டு வண்டிகள் மூலம் மணல் சப்ளை செய்து மாட்டு வண்டி வைத்து இருப்பவர்கள் பிழைப்பு நடத்தி வந்தனர்.

இந்நிலையில், ஒரு வருடத்திற்கு முன்பு மணல் குவாரியில் மணல் அள்ளுவதற்கு தடை விதிக்கப்பட்டது., அன்று முதல் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்த மாட்டு வண்டிக்கரார்கள், மாட்டுக்கு தீனி போட முடியாமலும், ஆசையாய் குடும்பத்தில் ஒருவராய் வளர்த்து வந்த மாடுகளை விற்க முடியாமலும் தவித்து வந்தனர்.  

இந்நிலையில் ஒரு மாதத்திற்கு முன்பு முடிகண்டநல்லூர் மணல் குவாரியை மீண்டும் திறந்து மணல் சாப்ளையைத் தொடங்கியது தமிழக அரசு. இனியாவது மாட்டு வண்டிக்குப் பிழைப்பு கிடைத்து வாழ்வாதாரத்திற்கு வழி பிறக்கும் என்று நினைத்த மாட்டு வண்டிக்காரர்களுக்கு மிஞ்சியது ஏமாற்றம்தான்.

`தமிழக அரசே., எங்கள் வாழ்வாதாரத்திற்கு வழி சொல்லுங்கள்!’ என்ற கோரிக்கையோடு மாட்டு வண்டித் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களிடம்  பேசினோம். ``குவாரி திறந்த பிறகாவது பிழைப்பு கிடைக்கும்ன்னு பார்த்தோம். ஆனால், குவாரியின் ஆன்லைன் பதிவு இன்னும் சரியா இல்லாததுனால உள்ளூர் மாட்டு வண்டிகளுக்கு அனுமதி இல்லைன்னு மறுக்கிறாங்க. உள்ளூர் லாரிகளுக்குக் கூட அனுமதி வழங்காம வெளியூர் லாரிகளுக்கு மட்டும்தான் இப்போதைக்கு அனுமதி வழங்கியிருக்காங்க.

உள்ளூர்ல இருக்கிற எங்களுக்குப் பிழைப்பு கொடுக்காம, வெளியூர் காரங்களுக்கு கொடுப்பது எந்த விதத்திலும் நியாயம் இல்லை., மணல் அள்ளுற பொழப்பு இல்லைனா எங்களுக்கு வாழ்க்கையே இல்லை!’’ என்றனர். 

இதுதொடர்பாக பல இடங்களில் மனு அளித்தும் பதில் இல்லை என்பதால், இன்று காலை மணல்மேடு சுற்றியுள்ள 300 க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் மயிலாடுதுறை ஆர்.டி.ஓ. தேன்மொழி அவர்களை சந்தித்து மனு அளிக்க 300 வண்டிகளை ஒன்றன் பின் ஒன்றாக மணல்மேடு முதல் மயிலாடுதுறை வரை தொடர் அணிவகுப்பாக கிளம்பிச் சென்றனர்.

இவர்களை தடுத்து நிறுத்திய மணல்மேடு காவல்துறை அதிகாரிகள், `யாரும் மயிலாடுதுறை செல்ல வேண்டாம்., ஆர்.டி.ஓ. விடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். விரைவில் நல்ல முடிவைக் கூறுகிறோம்’ என்று கூறிய நம்பிக்கையில் தற்போது, மணல்மேடு காவல்நிலையம் அருகே 300 க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் நல்ல முடிவை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றனர்.

இதுகுறித்து வருவாய் அலுவலர் தேன்மொழியிடம் கேட்டோம். ``பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது, ஆட்சியரிடம் கலந்து பேசிதான் எந்த முடிவும் எடுக்க முடியும்’’ என்றார். `நல்ல பதில் அரசிடமிருந்து வரவில்லை என்றால் போராட்டம் தொடரும்’ என்று பரிதவிக்கும் குரலில் தங்கள் மாடுகளுடன் வீதியில் நிற்கும் மாட்டு வண்டிக்காரர்களுக்கு அரசு என்ன பதில் கூற போகிறதோ?.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close