கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஒருவருக்கு பிடிவாரன்ட்; 2 பேருக்குக் காவல் நீட்டிப்பு! | Kodanad murder case adjourned to March 4th

வெளியிடப்பட்ட நேரம்: 18:40 (18/02/2019)

கடைசி தொடர்பு:19:01 (18/02/2019)

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஒருவருக்கு பிடிவாரன்ட்; 2 பேருக்குக் காவல் நீட்டிப்பு!

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையை மார்ச் 4-ம் தேதிக்கு ஒத்திவைத்து ஊட்டி நீதிமன்ற நீதிபதி வடமலை  உத்தரவிட்டார்.

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கைதானவர்கள்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017 ஏப்ரல் மாதம் கொள்ளை முயற்சி நடந்தது. இதில் காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ் உட்பட சயான், வாளையார் மனோஜ், திபு, ஜம்சிர் அலி, சதீசன், பிஜின் குட்டி, மனோஜ், உதயகுமார், சப்தோஷ் சமி, ஜிதின் ஜாய் என 11 பேர் ஈடுபட்டதாக போலீஸார் கைது செய்தனர். வழக்கு விசாரணையில் இருந்த போது கனகராஜ் கார் விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் ஜாமீனில் உள்ள நிலையில் முக்கிய நபர்களான சயான் மற்றும் வாளையார் மனோஜ் பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேலுடன் இணைந்து கொடநாடு கொலை சம்பவத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்குத் தொடர்புள்ளதாக பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தனர். இதையடுத்து முதல்வர் மீது கொலை பழி சுமத்திய சயான் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோரின் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் எனத் தமிழக அரசு சார்பில் ஊட்டி அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

கொடநாடு  வழக்கில் கைதானவர்கள்

இந்த இரு வழக்குகளும் கடந்த 8-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது சயான், வாளையார் மனோஜ், பிஜின், திபு ஆகிய நால்வர் ஆஜராகாததால், ஆஜராகாதவர்களின் ஜாமீனை ரத்து செய்து, நீதிபதி வடமலை பிடிவாரன்ட் பிறப்பித்ததோடு, பிப்ரவரி 18-ம் தேதி (இன்று) வழக்கில் தொடர்புடைய 10 பேரும் நேரில் ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிட்டார். இதனிடையே, வழக்கில் ஆஜராகாத பிஜின் குட்டி, திபு ஆகியோரை போலீஸார்  கைது செய்து, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்தநிலையில், வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது ஜம்சீர் அலி, சதீஸ், உதயகுமார், சந்தோஷ் சமி, ஜித்தன் ஜாய் ஆகிய 5 பேர் மட்டுமே ஆஜரானார்கள். கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட பிஜின் குட்டி, திபு ஆகியோர் ஊட்டி அமர்வு நீதிமன்றத்துக்கு மதியம் 2.30 மணிக்கு ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, நீதிமன்றத்தில் ஆஜராகாத மனோஜ்க்கு பிடிவாரன்ட் பிறப்பித்த நீதிபதி வடமலை, பிஜின் குட்டி மற்றும் திபு ஆகியோரின் காவலை நீட்டிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மார்ச் 4-ம் தேதிக்கு ஒத்திவைத்தார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close