விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயிலில் மாசி மகத் தேர்த் திருவிழா! | Ther Thiruvizha held in Virudhachalam Viruthakireswarer Kovil

வெளியிடப்பட்ட நேரம்: 19:20 (18/02/2019)

கடைசி தொடர்பு:19:20 (18/02/2019)

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயிலில் மாசி மகத் தேர்த் திருவிழா!

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயிலில் மாசி மகத் தேர்த் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. 

தேர்த் திரு விழா

விருத்தாசலத்தில் பிரசித்தி பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோயில் உள்ளது. இந்தத் தலம் ``காசியை விட வீசம் அதிகம் விருத்தகாசி" என்று போற்றப்படும் சிறப்புக்கு உரியது. இந்தக் கோயிலில் மாசி மகத் திருவிழா ஒவ்வோர் ஆண்டும் 12 நாள்கள் வெகு விமரிசையாக நடைபெறும். இந்தக் கோயிலில் பிராகாரம், கொடிமரம், தீர்த்தம், கோபுரம், நந்தி என அனைத்தும் ஐந்து, ஐந்தாக இருப்பது சிறப்பாகும். இந்த ஆண்டுக்கான மாசிமகத் திருவிழா கடந்த 10-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் இரவு பல்வேறு வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடந்தது. கடந்த 15-ம் தேதி ஆறாம் நாள் திருவிழாவாக கோயிலைக் கட்டிய விபச்சித்து முனிவருக்குக் காட்சியளிக்கும் ஐதீகத் திருவிழா நடந்தது.

ஒன்பதாம் நாள் திருவிழாவாக இன்று தேர்த் திருவிழா நடந்தது. விழாவில்  பாலாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர், விருத்தாம்பிகை, விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர் ஆகிய உற்சவ மூர்த்திகள் சிறப்பு அபிஷேக ஆராதனைக்குப் பின் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளச் செய்து பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க, தேர்த் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் விருத்தாசலம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். 

பத்தாம் நாள் திருவிழாவாக நாளை 19-ம் தேதி மாசி மக உற்சவத்தை முன்னிட்டு பஞ்சமூர்த்திகள் வெள்ளி வாகனத்தில் வீதியுலா வந்து மணிமுத்தாற்றில் தீர்த்தவாரி நடைபெறும். பதினோராம் நாள் திருவிழாவாக 20-ம் தேதி இரவு புதுப்பேட்டை அம்மன் குளத்தில் அலங்கரிக்கப்பட்ட புஷ்ப வாகனத்தில் தெப்ப உற்சவம் நடைபெறும். 12-ம் நாள் திரு விழாவாக 21-ம் தேதி சண்டிகேஸ்வரர் திருவிழாவுடன் விழா பூர்த்தியடைகிறது. 

 


[X] Close

[X] Close