`தொல்லைகொடுப்பதை நிறுத்தினால் அடுத்த நிமிடமே கிரண் பேடி பதவி காலி!’ - புதுச்சேரியில் கெஜ்ரிவால் | Delhi CM Arvind kejriwal lends his support to Puducherry CM Narayanasamy's protest against Lt governor kiran bedi

வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (18/02/2019)

கடைசி தொடர்பு:19:00 (18/02/2019)

`தொல்லைகொடுப்பதை நிறுத்தினால் அடுத்த நிமிடமே கிரண் பேடி பதவி காலி!’ - புதுச்சேரியில் கெஜ்ரிவால்

”தொல்லைகொடுப்பதை நிறுத்தினால், அடுத்த நிமிடமே கிரண்பேடி பதவி காலி” என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

அரவிந்த் கெஜ்ரிவால்

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண் பேடிக்கு எதிராகத் தனது அமைச்சரவை சகாக்களுடன் ஆளுநர் மாளிகை முன்பு முதல்வர் நாராயணசாமி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறார். ஆறாவது நாளான இன்று, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேரில் வந்து முதல்வர் நாராயணசாமிக்கு ஆதரவு தெரிவித்தார். அப்போது, “புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, நாள்தோறும் அரசு நடவடிக்கைகளில் தலையிட்டு அரசுப் பணிகளை மேற்கொள்ளவிடாமல் தடுக்கிறார். இந்திய ஜனநாயகத்தின்படி,  மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுதான் மக்களுக்குத் தேவையானதைச் செய்ய வேண்டும். மக்கள்தான் எஜமானார்கள். அதுதான் முறை. ஆளுநர் கிரண்பேடி, மக்களால் தேர்வுசெய்யப்பட்டவர் இல்லை. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, டெல்லியில் எங்களிடம் போட்டியிட்டு மோசமான தோல்வியை அடைந்தவர். தேர்தலில் தோல்வியடைந்தவர் ராஜ்நிவாஸில் ஆளுநராக அமர்ந்து ஆட்சிபுரிவதும், வெற்றிபெற்றவர்கள்  வீதியில் தர்ணாவில் இருப்பதும் ஜனநாயகத்துக்கு வெட்கக்கேடானது. கிரண்பேடி, மக்களுக்கு வேலை செய்யாமல் மோடிக்காக வேலை செய்கிறார். மோடிக்கு மட்டுமே பதில் சொல்ல கடமைப்பட்டவர் அவர்.

புதுச்சேரி முதல்வருடன் கெஜ்ரிவால்

புதுச்சேரி மற்றும் டெல்லியின் துணைநிலை ஆளுநர்கள், மக்களால் தேர்வுசெய்யப்பட்ட அரசுக்கு எதிராக  சதிசெய்து, அவர்களைப் பணி செய்யவிடாமல் மக்களிடத்தில் அவப்பெயரை ஏற்படுத்தவே அனுப்பப்பட்டுள்ளனர். டெல்லியிலும் இதே பிரச்னைதான். அந்த ஆளுநரும் தினம் தினம் அரசு வேலைகளில் தலையிட்டு தடுக்கிறார். அதே வேலையைத்தான் இவரும் செய்கிறார். இந்தியா சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளாகியும் புதுச்சேரிக்கும், டெல்லிக்கும் மட்டும் இன்னும் ஜனநாயகம் கிடைக்கவில்லை. மற்ற மாநிலங்களுக்கு முழு அதிகாரமிருக்கிறது. ஆனால், இந்த இரு மாநிலங்களில்தான் அதுபோல் இல்லை. மக்களால் தேர்வுசெய்யப்பட்ட அரசுக்கு அதிகாரம் இல்லாமல், ஆளுநர் ஆட்சிபுரிவது ஜனநாயகம் இல்லை. புதுச்சேரி, டெல்லியில் மட்டும் இல்லை. முழு மாநில அந்தஸ்து தருவது அவசியம். அதற்கான இரு மாநில முதல்வர்களும் இணைந்து போராடுவோம் என்று தெரிவித்தார்” என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “டெல்லியும் புதுச்சேரியும் ஒரே பிரச்னையைத்தான் சந்தித்துவருகின்றன. அம்பேத்கர்  நாடு முழுவதும் ஒரே அரசியல் அமைப்புச் சட்டத்தைத்தான் உருவாக்கினார். மக்களால் தேர்வுசெய்யப்பட்ட அரசுதான் மக்களை ஆள வேண்டும். அதுதான் அரசியலமைப்பின் அடிப்படை சாசனம். ஆனால், மத்திய அரசால் நியமிக்கப்பட்ட துணைநிலை ஆளுநர்களால் டெல்லி மற்றும் புதுச்சேரியில் சட்டவிரோத நிலை இருந்துவருகிறது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்குப் பிறகும் இரு மாநில ஆளுநர்களும் அரசின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிட்டுவருகின்றனர். வளர்ச்சித் திட்டங்களுக்கு தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டுவருகின்றனர். துணைநிலை ஆளுநர் இருக்கை என்பது சிறியது. அந்த இருக்கைக்கு யார் வேண்டுமானாலும் வரலாம், போகலாம். ஆனால், நாடு மிகப்பெரியது. மக்கள்தான் எஜமானர்கள். இதை கிரண்பேடி புரிந்துகொள்ள வேண்டும்.

நாராயணசாமி போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த கெஜ்ரிவால்

மத்தியில் காங்கிரஸ் அரசு வந்தாலும் இதே கோரிக்கையை வலியுறுத்துவோம். டெல்லி, புதுச்சேரி முதல்வர் பதவிக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். ஆனால் அவர்கள் முழு அதிகாரத்துடன் இருக்க வேண்டும். நாங்கள் போராடுவது மக்களுக்காகவும், அவர்களின் உரிமைக்காகவும்தான். புதுச்சேரி அரசுக்கு தொல்லை கொடுப்பதற்காகத்தான் கிரண் பேடி நியமிக்கப்பட்டார். அப்படி தொல்லைகொடுப்பதை அவர் நிறுத்தினால், அடுத்த நிமிடமே பதவியில் இருந்து தூக்கியெறியப்படுவார். மத்திய அரசுக்கு எதிராக கேரளா, டெல்லி, ஆந்திரா மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களின் முதல்வர்கள் போராடும் சூழல் ஏற்பட்டிருக்கிறது. ஜனநாயகத்தைக் காப்பதற்காகவே நாங்கள் அனைவரும் இணைந்திருக்கிறோம்” என்றார்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close