1992 முதல் இன்றைய உச்சநீதிமன்ற தீர்ப்பு வரை... ஸ்டெர்லைட் போராட்டம் கடந்த பாதை! #VikatanInfographics | The Timeline of Sterlite protest

வெளியிடப்பட்ட நேரம்: 19:03 (18/02/2019)

கடைசி தொடர்பு:19:07 (20/02/2019)

1992 முதல் இன்றைய உச்சநீதிமன்ற தீர்ப்பு வரை... ஸ்டெர்லைட் போராட்டம் கடந்த பாதை! #VikatanInfographics

20 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்துகொண்டிருக்கும் ஸ்டெர்லைட் போராட்டம் இதுவரை கடந்த பாதை இது. இன்றைய உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள் என்ன சொல்கிறார்கள்?

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான களப்போராட்டங்களும், சட்டப் போராட்டங்களும் 24 ஆண்டுகள் வரலாறு உடையவை. தற்போது ஸ்டெர்லைட் ஆலையின் சட்டப்போராட்டம் முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை நிபந்தனைகளுடன் திறக்கலாம் எனத் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்ட நிலையில் அதை நிராகரித்து ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க தடை விதித்துள்ளது உச்சநீதிமன்றம். இதற்கு முன்பும் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு உத்தரவுகள் வந்திருந்தாலும் இம்முறை பதற்றமான சூழ்நிலையில் மக்களுக்குச் சாதகமாக வந்திருக்கும் தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. 

தீர்ப்பு குறித்து ஸ்டெர்லைட் சிஇஓ ராம்நாத், ``உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது. உச்சநீதிமன்றம் கூறியபடியே அடுத்தகட்டமாக உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுப்போம். சட்டரீதியாக இந்த வழக்கை அணுகுவோம்" என்றார்.

ஸ்டெர்லைட் போராட்டம் கடந்துவந்த பாதை

தீர்ப்பு குறித்து ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த பேராசிரியர் பாத்திமா பாபுவிடம் பேசியபோது, ``மக்களுக்குச் சாதகமாக வந்திருக்கும் தீர்ப்பை முக்கியமானதாகவே பார்க்கிறோம். ஆனால் இது இறுதித் தீர்ப்பு இல்லை. இன்னும் ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன. இன்னும் சட்டப் போராட்டத்தை எடுத்துச் செல்ல வேண்டும். அதற்கான ஆதாரங்களும் ஆவணங்களும் தயாரிப்பு நிலையில் உள்ளன. ஸ்டெர்லைட் ஆலையை முற்றிலுமாக மூட வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை" என்றார்.

பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த வழக்கறிஞர் வெற்றிச்செல்வன் கூறுகையில், ``சட்டநுட்பங்களின் அடிப்படையில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இது மக்களுக்குச் சாதகமான விஷயம்தான். இதன் மூலம் ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பது இன்னும் தள்ளிப்போக வாய்ப்புள்ளது. ஆலை ஏற்படுத்திய மாசினைக் கணக்கில் கொண்டோ சுற்றுச்சூழலைக் கணக்கில் கொண்டோ இந்தத் தீர்ப்பு வழங்கப்படவில்லை. அதனால் இதைத் தமிழக அரசு கவனமாக கையாண்டு ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும்" என்றார்

தீர்ப்பு குறித்து ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பின் சட்ட ஆலோசகரான அரிராகவனிடம் பேசியபோது, ``இந்தத் தீர்ப்பு மகிழ்ச்சியானதுதான். ஆனால் 13 உயிர்களை இழந்ததற்கு இன்னும் நிரந்தரமான தீர்வு கிடைக்கவில்லை. மக்களின் உணர்வுகளுக்கும் பாதிப்புகளுக்கும் மதிப்பளித்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும். அதற்குச் சட்டமன்றத்தில் கொள்கை முடிவு கொண்டுவந்து சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும். இதுவே மக்களின் விருப்பமும். இது இறுதித் தீர்ப்பு இல்லை என்பதை மக்களும் புரிந்துகொண்டுள்ளனர். மேலும் இந்தத் தீர்ப்பிற்குக் காரணமான உயிழந்த 13 பேரின் வீடுகளுக்குக் கூட நாங்கள் செல்லமுடியவில்லை. அந்தளவிற்குக் காவல்துறையின் கெடுபிடி அதிகமாக இருக்கிறது" என்றார்.

 


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close