`புத்தகத்தில் படிப்பதன் மூலம் சிறந்த இசையைக் கற்கவோ, புரிந்துகொள்ளவோ முடியாது!’ - இளையராஜா | One cannot learn music from the book, says ilayaraja

வெளியிடப்பட்ட நேரம்: 19:52 (18/02/2019)

கடைசி தொடர்பு:19:52 (18/02/2019)

`புத்தகத்தில் படிப்பதன் மூலம் சிறந்த இசையைக் கற்கவோ, புரிந்துகொள்ளவோ முடியாது!’ - இளையராஜா

`இசை என்பது உணர்வுபூர்வமானது. புத்தகத்தைப் படிப்பதன் மூலம் இசையைப் புரிந்துகொள்ள முடியாது’ என விருதுநகரில் நடைபெற்ற பாராட்டு விழாவில் இளையராஜா தெரிவித்தார்.

இளையராஜா

விருதுநகர் செந்தில்குமர நாடார் கல்லூரியில், இளையராஜாவின் 75-வது பிறந்தநாள் விழா மற்றும் பாராட்டு விழா கொண்டாடப்பட்டது. அப்போது, கல்லூரி மாணவர்களின் நடனம் மற்றும் நாடகம் நிகழ்த்தப்பட்டன. பின்னர் மாணவர்களுடன் சேர்ந்து இளையராஜா கேக் வெட்டினார். மாணவர்கள், அவரிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.

மாணவர்கள் மத்தியில் பேசிய இளையராஜா, ``விருதுநகரில் என் காலடி படாத இடமே இல்லை. 'மாசற்ற மனம்' என்ற நாடகத்துக்கு இசை அமைப்பதற்காக 1969-ம் ஆண்டு, என்னுடைய ஆர்மோனியத்துடன் இங்கே வந்தேன். எனக்கும், என் ஆர்மோனியப் பெட்டிக்கும் பரிச்சயமான இடம் விருதுநகர். அநாவசியமான சிந்தனைகளில் நேரத்தைச் செலவிட வேண்டாம். மாணவர்கள் உயர்ந்த இடத்துக்கு வர வேண்டும் என என்னுடைய இசையால் வாழ்த்துகிறேன். உங்களை நீங்கள் யாருடனும் ஒப்பிட வேண்டாம். எனக்கு படிப்பதில் ஆர்வம் அதிகம். முன்னாள் தமிழக முதல்வர் காமராஜர் கொண்டுவந்த மதிய உணவுத் திட்டத்தில், 6 முதல் 8-ம் வகுப்பு வரை படித்தேன்’’ என்றார்.

இளையராஜா

`அபூர்வ சகோதரர்கள்' படத்தில் வரும் 'புது மாப்பிள்ளைக்கு நல்ல யோகமடா' என்ற பாடல் எப்படி உருவானது என மாணவி ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த இளையராஜா, ``எம்.ஜி.ஆர் பாடல்போல இருக்க வேண்டும் என கமல்ஹாசன் கேட்டார். அதன்படி, 'நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத் தான் நல்ல அழகி என்பேன்' என்ற பாடலின் அடிப்படையில் அந்தப் பாடல் உருவானது'' எனத் தெரிவித்தார்.

இளையர்ஜா

`முத்தமிழில் இயல் மற்றும் நாடகத் தமிழுக்கு புத்தகங்கள் உள்ளன. ஆனால், இசைக்கு மட்டும் புத்தகம் இல்லை. நீங்கள் இசைகுறித்து நூல் எழுதலாமே’ என மாணவி ஒருவர் கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதிலளித்தபோது, ``இசைக்காக சில நூல்கள் இருந்தன. பின்னர் அவை அழிந்துவிட்டன. என்னென்ன நூல்கள் எல்லாம் இசைக்காக இருந்தன என்ற விளக்கத்தை 'உளியின் ஓசை' என்ற திரைப்படத்தில் கூறியிருக்கிறேன். இசை குறித்து என்னோடு அமர்ந்து பேசும் அளவுக்கு திறமையான ஒருவரை நான் இதுவரை சந்தித்ததில்லை. இதனால், என்னை கர்வம் கொண்டவன் என அழைக்கிறார்கள். சிலர் பிரிந்துசெல்கிறார்கள். இசைக்காக நூல் எழுத வேண்டும் என்ற எண்ணம் இதுவரை எனக்கு எழுந்ததில்லை.

இளையராஜா

புத்தகத்தில் படிப்பதன்மூலம் சிறந்த இசையைக் கற்கவோ, புரிந்துகொள்ளவோ முடியாது’’ எனத் தெரிவித்தார்.


[X] Close

[X] Close