`உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் முழுதிருப்தி இல்லை!’ - ஸ்டெர்லைட் எதிர்ப்புக் குழு | The Supreme Court ruling on the Sterlite plant is not completely satisfied says anti sterlite protesters

வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (18/02/2019)

கடைசி தொடர்பு:22:30 (18/02/2019)

`உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் முழுதிருப்தி இல்லை!’ - ஸ்டெர்லைட் எதிர்ப்புக் குழு

'ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க தடை விதித்து, உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் முழு திருப்தி இல்லை' என  ஸ்டெர்லைட் எதிர்ப்புக் குழுவினர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

இனிப்புக் கொடுத்துக் கொண்டாட்டம்

தூத்துக்குடியில் இயங்கிவந்த ஸ்டெர்லைட் ஆலையை  நிரந்தரமாக மூடக்கோரி, பொதுமக்கள் 100 நாள்களாகப் போராட்டம் நடத்தி வந்தனர். கடந்த மே 22-ம் தேதி நடைபெற்ற  முற்றுகைப் போராட்டத்தில் கலவரம் வெடித்தது. இதில், போலீஸார் நடத்திய  தடியடி மற்றும் துப்பாகிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து மே, 28-ம் தேதி, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடிட  அரசாணை வெளியிட்டதுடன் ஆலையும் சீல் வைத்து மூடப்பட்டது.  இந்த உத்தரவை எதிர்த்து, வேதாந்தா நிறுவனம் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த பசுமைத் தீர்ப்பாயம்,  2018  டிசம்பர் 15-ம் தேதி, 25 நிபந்தனைகளுடன் ஸ்டெர்லைட் ஆலையைத் தொடர்ந்து இயக்கலாம் என உத்தரவிட்டது. 

பட்டாசு வெடித்துக் கொண்டாட்டம்

இந்த உத்தரவுக்குத் தடை விதிக்கக் கோரி, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது.  அதேபோல, பசுமைத் தீர்ப்பாயத்தின் தீர்ப்பை அமல்படுத்தக் கோரி, வேதாந்தா நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்குகள் மற்றும் ஸ்ட்லைட் ஆலை தொடர்பாகத் தாக்கல்செய்யப்பட்ட அனைத்து வழக்குகளையும் ஒரே வழக்காக உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ஹேரிங்டன் நரிமன் பாலி, வினித் சரண் ஆகியோர் விசாரணைக்கு எடுத்துக்கொண்டனர். இந்த வழக்கின் விசாரணைகள் அனைத்தும் முடிவடைந்த  நிலையில்,  அனைவரின் வாதங்களையும், கடந்த 11-ம் தேதி எழுத்துபூர்வமாக  சமர்பிக்க உத்தரவிட்டனர். 

தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி

இந்நிலையில், ஸ்டெர்லைட் வழக்கின் தீர்ப்பு இன்று வெளியானது. இதில், பசுமைத்தீர்ப்பாயம் இந்த வழக்கை விசாரிக்க முடியாது எனக் கூறி, அதன் தீர்ப்பை ரத்துசெய்து ஆலையை திறக்க  உச்ச நீதிமன்றம் தடைவிதித்தது. அதேபோல, வேதாந்தா நிறுவனம் தொடர்ந்து உயர் நீதிமன்றத்தை நாடலாம் எனத் தெரிவித்தது. இந்தத் தீர்ப்புகூறித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி செய்தியாளர்களிடம் பேசுகையில், ``தூத்துக்குடி மக்களுக்கு இன்று முக்கியமான, மகிழ்ச்சியான நாள். உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கறிஞர்களின் வாதத்தால் ஆலையைத் திறக்க உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஆலை நிர்வாகம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தாலும், அரசு தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்தும். ஆலையை மூட வேண்டும் என்பது அரசின் கொள்கை முடிவு” என்றார்.  

இனிப்புக் கொடுத்துக் கொண்டாட்டம்

இத்தீர்ப்புகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டெர்லைட் எதிர்ப்புக் குழுவினர், ``உச்ச நீதிமன்றம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்தத் தீர்ப்பு முழுமையான மகிழ்ச்சியைத் தரவில்லை. ஆலையின் அடுத்தகட்ட நடவடிக்கைகளைக் கண்காணித்துகொண்டே இருப்போம். ஆலையை நிரந்தரமாக இந்த மண்ணை விட்டு விரட்டுவோம். தமிழக அரசின் நடவடிக்கை பாராட்டுதலுக்கு உரியது. அதே நேரத்தில், ஆலைத் தரப்பு எந்த நீதிமன்றத்திற்குச் சென்றாலும் தமிழக அரசு தனது நிலைப்பாட்டில் மிகுந்த உறுதியுடன் இருக்க வேண்டும். ஆலையை நிரந்தரமாக மூடவும், அகற்றிடவும் சட்டமன்றத்தில் கொள்கை முடிவு எடுக்க வேண்டும்” என்றனர்.

உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை வரவேற்கும்விதமாக தூத்துக்குடியில் ஸ்டெலைட் எதிர்ப்புப் போராளிகள், வியாபாரிகள், தூத்துக்குடியில் உள்ள சிவன் கோயில், மாதா கோயில், பெரிய பள்ளிவாசல் ஆகியவற்றிற்குச் சென்று, சிறப்புப் பிரார்த்தனை செய்தனர். தொடர்ந்து, திருநங்கைககள், பல்வேறு கட்சியினர்கள், பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள்  வழங்கியும் கொண்டாடினார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close