பதிவாளர், தேர்வாணையர் பதவிகளுக்கு பண பேரம்? - பெரியார் பல்கலைக்கழகத்தைச் சுற்றும் சர்ச்சை | Controversy erupts in salem periyar university over administration asking bribe for registrar and Examiner posting

வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (18/02/2019)

கடைசி தொடர்பு:22:00 (18/02/2019)

பதிவாளர், தேர்வாணையர் பதவிகளுக்கு பண பேரம்? - பெரியார் பல்கலைக்கழகத்தைச் சுற்றும் சர்ச்சை

பல்கலைக்கழகம்

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பதிவாளர் மற்றும் தேர்வாணையர் பதவிகள்  6 மாதத்திற்கு முன்பு காலிப்பணியிடமாக அறிவித்து விளம்பரம் கொடுக்கப்பட்டது. அந்த விளம்பரம் காலாவதி ஆகியும் இன்னும் நிரந்தரப் பதிவாளர், தேர்வாணையர் நியமிக்கப்படவில்லை. இதற்குப் பின்னால் பண பேரம் படியவில்லை என்ற குற்றச்சாட்டை வைக்கிறார்கள் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள்.  

இதுபற்றி பெரியார் பல்கலைக்கழகத்தில் உள்ள பேராசிரியர்களிடம் பேசிய போது, ``ஒரு பல்கலைக்கழகத்தின் மிக முக்கியத் தூண்களாக இருப்பவர்கள் பதிவாளர் மற்றும் தேர்வாணையர். ஆனால் பெரியார் பல்கலைக்கழகத்தில் இந்த இரண்டு பதவிகளும் ஒரு வருடமாக நிரப்பப்படாமல் காலிப்பணியிடமாகவே இருந்து வருகிறது.

பெரியார் பல்கலைக்கழகத்தின் பதிவாளராக இருந்த மணிவண்ணன், கடந்த 2018 ஜூலை மாதத்தோடு பணி நிறைவு பெற்றுச் சென்று விட்டார். அதேபோல் தேர்வாணையராக இருந்தவர் லீலா. இவரும் கடந்த 2018 பிப்ரவரி மாதம் பணி நிறைவு பெற்றுச் சென்று விட்டார். தற்போது பொறுப்பு பதிவாளராகக் கணினி அறிவியல் துறைத் தலைவர் தங்கவேலும், பொறுப்புத் தேர்வாணையராக கணிதவியல் துறை பேராசிரியர் முத்துசாமியும் இருக்கிறார்கள்.

பொறுப்புப் பதவியில் இருப்பவர்கள் பெயரளவுக்கு மட்டுமே செயல்பட முடியும். நிரந்தரப் பணியாளர்களே சிறப்பாகச் செயல்பட முடியும். என்பதால் பதிவாளர் மற்றும் தேர்வாணையர் ஆகிய இரண்டு பதவிகளும் காலிப்பணியிடங்களாகக் காண்பிக்கப்பட்டு 6 மாதங்களுக்கு முன்பு விளம்பரம் கொடுக்கப்பட்டது. அந்த விளம்பரம் 6 மாதம் முடிந்து காலாவதியாகியும் இன்னும் அப்பதவிகளுக்கு ஆட்கள் நியமிக்கப்படவில்லை.

ஒரு பதவிக்கு 50 முதல் 75 லட்ச ரூபாய் வரை லஞ்சம் கேட்கிறார்கள். ஆனால் 30 லட்சம் வரை பேரம் பேசியும் படியவில்லை. மீண்டும் விளம்பரம் கொடுத்த பிறகுதான் ஆட்கள் தேர்வு செய்ய முடியும். தமிழகத்தின் நிலையற்ற ஆட்சியை நம்பி யாரும் அவர்கள் கேட்கும் தொகையைக் கொடுப்பதற்கு முன் வர மாட்டார்கள். இந்த ஆட்சி மாறினால்தான் பதவிகள் நிரப்பப்படக்கூடும்'' என்றார்கள்.

இதுபற்றி பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் குழந்தைவேலிடம் கேட்டோம்.``பதிவாளர் மற்றும் தேர்வாணையர் பதவிக்கு ஆட்கள் தேர்வு செய்யும் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இதற்குப் பண பேரம் நடப்பதாகச் சொல்லுவது அபத்தம். பணம் என்பதெல்லாம் பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறிப் பல வருடம் ஆகி விட்டது. பல்கலைக்கழகம் தூய்மையாகச் செயல்பட்டு வருகிறது’’ என்றார்.


[X] Close

[X] Close