`பி.ஜே.பி, காங்கிரஸை தமிழகத்தைச் சேர்ந்த கட்சிகள் ஒதுக்க வேண்டும்!’ - குரல் கொடுக்கும் விவசாயிகள் சங்கம் | TN parties should avoid BJP and Congress, urges Farmers association

வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (18/02/2019)

கடைசி தொடர்பு:23:00 (18/02/2019)

`பி.ஜே.பி, காங்கிரஸை தமிழகத்தைச் சேர்ந்த கட்சிகள் ஒதுக்க வேண்டும்!’ - குரல் கொடுக்கும் விவசாயிகள் சங்கம்

``தமிழகத்தைப் புறக்கணிக்கும் விஷயத்தில்  பி.ஜே.பி-யும், காங்கிரஸும் ஒரே நிலைப்பாடு வைத்துக்கொண்டு தமிழ்நாட்டிற்குத் துரோகம் இழைத்துவருகிறார்கள். அவர்களோடு மாநிலக் கட்சிகள் கூட்டணி வைத்து, தமிழகத்தில் பி.ஜே.பியையும் காங்கிரஸையும் வளர்த்து விடுகிறார்கள். அதனால் பி.ஜே.பி, காங்கிரஸ் கட்சிகளோடு கூட்டணி வைக்காத கட்சிகளுக்கே எங்கள் ஓட்டு'' என்கிறார்கள் தமிழக விவசாயிகள் சங்க கூட்டு இயக்கத்தினர்.

ஓட்டு

இதுபற்றி  தமிழக விவசாயிகள் சங்க கூட்டு இயக்கத்தின் மாநிலத் தலைவர் தெய்வசிகாமணி கூறுகையில், ``கடந்த ஆண்டு காவிரி வறட்சியால் தமிழகத்தில் 381 விவசாயிகள் மாண்டுபோனார்கள். காரணம், கர்நாடகாவை ஆண்ட காங்கிரஸ் அரசு தண்ணீர் திறந்து விடவில்லை. அங்கிருந்த எதிர்க்கட்சி பா.ஜ.க-வும் தண்ணீர் திறந்துவிடக் கூடாது என்று ஆர்ப்பாட்டம் செய்தார்கள்.

தெய்வசிகாமணிஇதைப்பற்றி பிரதமர் மோடியோ, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியோ வாய் திறக்கவில்லை. காவிரி ஆணையத்தின் உத்தரவைக்கூட மதிக்கவில்லை. அதேபோல, நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டுமென தமிழக அரசு கேட்டது. மத்திய மோடி அரசு விலக்களிக்கவில்லை. இதை காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் எதிர்க்கவில்லை.

ஈழத்தமிழர்களைக் கொன்று குவிக்க காங்கிரஸ் அரசு ராணுவத்தை அனுப்பியது. ராஜீவ் காந்தி வழக்கில்  7 பேரின்  தண்டனைக் காலம் முடிந்தும் இன்னும் மத்திய மோடி அரசு அவர்களை வெளியே அனுப்பவில்லை. இப்படி தமிழ்நாட்டிற்கு பி.ஜே.பி-யும்,  காங்கிரஸும் செய்த துரோகத்தைப் பட்டியலிட்டால் கணக்கில் அடங்காது.

தமிழகத்தைச் சேர்ந்த மாநிலக் கட்சிகள் வருடம் முழுவதும் பி.ஜே.பி., காங்கிரஸை விமர்சனம் செய்துவிட்டு, தேர்தல் நேரத்தில் அவர்களோடு கூட்டணி சேருவதும், பி.ஜே.பி.,காங்கிரஸ் வருடம் முழுவதும் தமிழர்களுக்குத் துரோகம் செய்துவிட்டு, தேர்தல் நேரத்தில் தமிழக மாநிலக் கட்சிகள் மீதேறி கூட்டணி சவாரி செய்வதும் தொடர்கதையாக உள்ளது. இதை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்.

இனி தமிழகக் கட்சிகள் யாரும் பி.ஜே.பி., காங்கிரஸோடு கூட்டணி சேரக்கூடாது. அவர்களோடு யாரும் கூட்டணி சேராமல் இருந்தால், அக்கட்சியில் வேட்பாளர்களாக நிற்பதற்குக்கூட ஆள் இருக்க மாட்டார்கள். அதனால் பி.ஜே.பி, காங்கிரஸ் கூட்டணி இல்லாத தமிழகக் கட்சிகளுக்கே நாங்கள் ஓட்டு போடுவோம். இதை ஒவ்வொரு மாவட்டமாகக் கூட்டம் போட்டு, மக்களுக்கு தெளிவுபடுத்துவோம்’’ என்றார்.


[X] Close

[X] Close