ஆதரவற்ற நிலையிலும் ஆயிரம் ரூபாய் நிதிஉதவி! - 75 வயது தேனி முதியவர் நெகிழ்ச்சி #Pulwamaattack | Elderly man from theni donated 1000 rupees for Martyred crpf soldiers

வெளியிடப்பட்ட நேரம்: 21:30 (18/02/2019)

கடைசி தொடர்பு:21:45 (18/02/2019)

ஆதரவற்ற நிலையிலும் ஆயிரம் ரூபாய் நிதிஉதவி! - 75 வயது தேனி முதியவர் நெகிழ்ச்சி #Pulwamaattack

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் பலியான சம்பவம் நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்வலையையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. இச்சம்பவத்தில் பலியான சி.ஆர்.பி.எஃப் வீரர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவி அளிக்கத் தள்ளாத வயதில் கலெக்டர் அலுவலகம் வந்தார் ஒரு முதியவர்.

தேனி மாவட்டம் லெட்சுமிபுரம் அருகே உள்ள சரத்துப்பட்டி எம்.ஜி.ஆர் காலனியைச் சேர்ந்தவர் பொன்னையன். வயது 75. அவரது மனைவி கம்மாளச்சி. இரண்டு மகன்கன் மற்றும் மூன்று மகள்களுக்கும் திருமணம் முடித்து வைத்து விட்டு யாருடைய ஆதரவும் இன்றி கணவன் மனைவி இருவரும் விவசாயக் கூலி வேலை செய்து தனியாக வாழ்ந்து வருகின்றனர். ஆதரிக்க யாரும் இல்லாத இவர்கள், தினமும் கூலி வேலைக்குச் சென்றால்தான் சாப்பாடு எனும் நிலை. இந்நிலையில் கடந்த 4  நாள்களுக்கு முன்பாக ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் தீவிரவாதிகள் தாக்குதலில் பலியான சி.ஆர்.பி.எஃப் வீரர்களின் குடும்பங்களுக்கு 1000 ரூபாய் நிதி உதவி அளிக்க இன்று கலெக்டர் அலுவலகம் வந்தார்.

அவரிடம் பேசினோம். ``தீவிரவாதத் தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் பலியான செய்தியை வானொலியில்தான் கேட்டேன். மிகவும் கஷ்டமாக இருந்தது. அதில் இரண்டு தமிழக வீரர்கள் பலியானது என்னையும், என் மனைவியையும் ரொம்பவே கஷ்டப்படுத்தியது. இருவரும் சேர்ந்து பேசிக்கொண்டிருக்கும் போது, பலியான சி.ஆர்.பி.எஃப் வீரர்களின் குடும்பங்களுக்கு நம்மால் ஆன நிதி உதவியை அளித்தால் நன்றாக இருக்கும் எனத் தோன்றியது. சிறுகச் சிறுக சேர்த்துவைத்த பணத்தை எடுத்து எண்ணிப்பார்த்தோம். 1000 ரூபாய் இருந்தது.

எப்படி அவர்கள் குடும்பத்திடம் இந்தப் பணத்தைச் சேர்ப்பது என்று தெரியவில்லை. மாவட்ட கலெக்டரிடம் பணத்தைக் கொடுத்தால் அது அக்குடும்பத்திற்கு அனுப்பிவிடுவார்கள் என்று சொன்னார்கள். அதனால்தான் பணத்தை கவரில் போட்டு எடுத்துவந்துவிட்டேன்’’ என்றார். தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவை சந்தித்த பொன்னையன், 1000 ரூபாயைக் கொடுத்துவிட்டுச் சென்றார். தள்ளாத வயதிலும், ஆதரிக்க யாரும் இல்லாத சூழலிலும், நாட்டிற்காக உயிர் நீத்த வீரர்களின் குடும்பங்களுக்கு உதவி செய்யும் பொன்னையனின் மனதையும், அவரின் தேச பக்தியையும் நினைத்து கலெக்டர் அலுவலக வட்டாரமே நெகிழ்ச்சி கொண்டது.


[X] Close

[X] Close