`சட்டப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கட்சிக்காரரைப் போல செயல்படுகிறார்' - நீதிமன்றம் கண்டனம்! | madras hc condemn

வெளியிடப்பட்ட நேரம்: 07:00 (19/02/2019)

கடைசி தொடர்பு:07:00 (19/02/2019)

`சட்டப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கட்சிக்காரரைப் போல செயல்படுகிறார்' - நீதிமன்றம் கண்டனம்!

சட்டப் பல்கலைக்கழகத் துணைவேந்தர், எம்.எல்.ஏ-க்களுடன் இணைந்து கட்சிக்காரரைப் போல செயல்படுவதாக சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஐகோர்ட்

தமிழ்நாடு சட்டப் பல்கலைக்கழகத்தில் பதிவாளராகப் பணியாற்றிய டி.சங்கர் என்பவர், தன்னைப் பணிநீக்கம் செய்ததை எதிர்த்து தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. விசாரணை நடத்திய நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், போதிய கல்வித் தகுதி இல்லாமல் பணியாற்றும் 32 பேராசிரியர்கள், தங்களின் கல்வித் தகுதி, நியமனம் குறித்த தகவல்களை பதில் மனுக்களாகத் தாக்கல்செய்ய உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து, பல்கலைக்கழகப் பொறுப்புப் பதிவாளர் ஜெயந்தி கிருஷ்ணமூர்த்தி சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுவில், தனி நீதிபதி, வழக்கின் எல்லையை மீறி தன் விருப்பம் போல உத்தரவுகளைப் பிறப்பித்துவருவதாகக் குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து, அவருக்கு எதிராகத் தானாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.  நீதிபதிகள் சசிதரன் மற்றும் ஆதிகேசவலு அடங்கிய அமர்வு, பதிவாளரை வரும் 18 -ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டது. இதுதொடர்பான நோட்டீஸை, சென்னை மாநகரக் காவல் ஆணையர், பதிவாளரிடம் வழங்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் இன்று நீதிபதிகள் கே.கே. சசிதரன் மற்றும் ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பல்கலைக்கழகத்தின் பொறுப்புப் பதிவளார் நேரில் ஆஜராகி, நீதிமன்ற அறையில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார்.

சட்டப் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் நியமனங்கள் அனைத்தும் யூஜிசி விதிகளுக்கு உட்பட்டுதான் நடைபெறுவதாக அரசு தலைமை வழக்குரைஞர் தெரிவித்தார். இதனையடுத்து நீதிபதிகள், சட்டப் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் நியமனம் எப்படி நடைபெறுகிறது என தங்களுக்குத் தெரியும் என்றும், தனியார் ஓட்டலில் எம்.எல்.ஏ-க்களுடன் துணைவேந்தர் சேர்ந்து கட்சிக்காரரைப் போல செயல்படுவதாகவும் கண்டனம் தெரிவித்தனர். இதுகுறித்து எதுவும் பேசவைக்காதீர்கள் என்றும் துணைவேந்தர் 180 டிகிரியில் நின்றதையும் பார்த்துள்ளோம் எனச் சாடிய நீதிபதிகள், வழக்கு விசாரணையை நாளை ஒத்திவைத்தனர்.


 


[X] Close

[X] Close