தீக்குளிப்புச் சம்பவம் எதிரொலி - கடும் சோதனைக்குப் பிறகு தேனி கலெக்டர் அலுவலகத்தில் அனுமதி! | people allowed to enter Theni collector office after heavy check up

வெளியிடப்பட்ட நேரம்: 22:01 (18/02/2019)

கடைசி தொடர்பு:22:01 (18/02/2019)

தீக்குளிப்புச் சம்பவம் எதிரொலி - கடும் சோதனைக்குப் பிறகு தேனி கலெக்டர் அலுவலகத்தில் அனுமதி!

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் கடந்த வாரம் புதன் கிழமை, முதியவர் ஒருவர் தீக்குளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து கலெக்டர் அலுவலகம் வரும் பொது மக்களை போலீசார் கடுமையாக சோதனை செய்த பின்னரே அனுமதிக்கின்றனர்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி சிலோன்காலனி பகுதியைச் சேர்ந்தவர் முனியாண்டி. இவர், தன் மகனை வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்புவதற்காகச் சிலரிடம் பணம் கொடுத்துள்ளார். அவர்கள், பணத்தைப் பெற்றுக்கொண்டு ஏமாற்றியுள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல முறை மனு கொடுத்தும் எந்தப் பலனும் இல்லாததால் மனம் உடைந்த முனியாண்டி, தனது உடலில் பெட்ரோல் ஊற்றி கலெக்டர் அலுவலக வளாகத்தில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார்.

அக்கம் பக்கத்தினர் தீயை அணைத்து அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தீவிர சிகிச்சையில் இருந்த அவர், சிகிச்சை பலனளிக்காமல் கடந்த வியாழக்கிழமை உயிரிழந்தார். இச்சம்பவத்தைத் தொடர்ந்து, இன்று கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்திற்கு வந்திருந்த பொதுமக்களை கடும் சோதனைகளுக்கு உள்ளாக்கினர் போலீஸார். பொதுமக்கள் கொண்டுவந்த பைகளைச் சோதனை செய்தனர்.

வாகனங்களை நிறுத்தி சோதனை செய்தனர். இனியும் அப்படி ஒரு தீக்குளிப்புச் சம்பவம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெறக் கூடாது என்பதற்காகவே இந்த சோதனைகள் எனக் காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.


[X] Close

[X] Close