`முன்பு ஒருநாளைக்கு 8 டன்; இப்போ ஒரு வாரத்துக்கே அவ்வளவு தான்' - குமுறும் கருவாடு வியாபாரிகள்! | Dried fish Business going very dull says Seerkazhi Merchants

வெளியிடப்பட்ட நேரம்: 10:00 (19/02/2019)

கடைசி தொடர்பு:10:00 (19/02/2019)

`முன்பு ஒருநாளைக்கு 8 டன்; இப்போ ஒரு வாரத்துக்கே அவ்வளவு தான்' - குமுறும் கருவாடு வியாபாரிகள்!

சீர்காழி அருகே பழையாறு துறைமுகத்தில் கருவாடு உற்பத்தி குறைந்ததால் கருவாடு தொழிலில் உள்ள வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர்.

கருவாடு

நாகை மாவட்டம்  சீர்காழி அருகே பழையாறு மீன்பிடி துறைமுகம் உள்ளது. இந்தத் துறைமுகத்திலிருந்து விசைப்படகுகள், பைபர் படகுகள் மற்றும் நாட்டுப்படகுகள் மூலம் தினந்தோறும் 5,000 மீனவர்கள் கடலுக்குள் சென்று மீன்பிடித்து வருகின்றனர். கடந்த ஒரு மாத காலத்தில் கடலில் குறைவான அளவே  சிறு மீன்கள்  கிடைப்பதால் கருவாடு உற்பத்தி நிறைவாகச் செய்ய முடியாமல் போனது. இதனால் போதுமான வியாபாரமில்லாமல் வியாபாரிகளும் தொழிலாளர்களும் முடங்கியுள்ளனர். இதுகுறித்து பழையாறு கருவாடு வியாபாரிகள் சங்கத்தலைவர் பொன்னையா கூறுகையில், ``பழையாறு துறைமுகத்திலிருந்து கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லும் விசைப் படகுக்கு சிறு சிறு கசார் என்று சொல்லப்படும் சுமார் 40 வகையான மீன்கள் குறைந்த அளவே கிடைக்கிறது. 

அதனால் கருவாடு உற்பத்தி குறைந்துவிட்டது. இங்கிருந்து கோழித் தீவனத்துக்காக நாமக்கல்லுக்கு ஒரு நாளைக்கு 8 டன் கருவாடுகள்  அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். ஆனால், தற்பொழுது மீன்வரத்து குறைவாக இருப்பதால் ஒரு வாரத்துக்கு 8 டன்  மட்டுமே அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும், உணவுக்காக உலர வைக்கப்படும் கருவாடுகள் வாரத்துக்கு ஒரு டன் கூட கிடைக்கவில்லை. இதனால் கருவாடு வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்களின் தொழில் முடங்கியுள்ளது. கருவாடு உற்பத்தி குறைவு என்பதால் இதுவரை இல்லாத அளவுக்கு அதன் விலையும் உயர்ந்துவிட்டது" என்றார்.


[X] Close

[X] Close