இனி ராஜ்நிவாஸ் சாலை உங்களுக்காக... - தர்ணா வாபஸால் கிரண் பேடி மகிழ்ச்சி! | puducherry cm narayanasamy dharna protest over after kiranbedi meeting

வெளியிடப்பட்ட நேரம்: 09:15 (19/02/2019)

கடைசி தொடர்பு:09:15 (19/02/2019)

இனி ராஜ்நிவாஸ் சாலை உங்களுக்காக... - தர்ணா வாபஸால் கிரண் பேடி மகிழ்ச்சி!

மக்கள் நலத் திட்டங்களுக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தடையாக இருப்பதாகக்கூறிக் கடந்த 6 நாள்களாக ஆளுநர் மாளிகைக்கு வெளியே முதல்வர் நாராயணசாமி தலைமையில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர்.

கிரண் பேடி

நீண்ட இழுபறிக்குப் பிறகு நேற்று ஆளுநர் மாளிகையில் கிரண்பேடியுடன் முதல்வர்  நாராயணசாமி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இந்த பேச்சுவார்த்தையில் முதலமைச்சர், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் அஸ்வனி குமார், அரசு செயலாளர்கள் மற்றும் துணைநிலை ஆளுநரின் சிறப்பு அதிகாரி தேவநீதிதாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நாராயணசாமி

சுமார் நான்கரை மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியே வந்த முதல்வர் மற்றும் அமைச்சர்கள் சட்டப்பேரவையில் கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்திவிட்டு, ஆளுநர் மாளிகைக்கு வெளியே கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, ``துணைநிலை ஆளுநர் கிரண்பேடியுடனான ஆலோசனைக் கூட்டத்தில் 39 கோரிக்கைகள் குறித்து விவாதித்தோம். முதல் கோரிக்கையான அரசின் ரோடியார் பஞ்சாலையை மூடும் முடிவைக் கைவிட்டு, பஞ்சாலையை மீண்டும் இயக்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என ஆளுநர் தெரிவித்தார். அதேபோல் புதிதாக விண்ணப்பித்த 10,000 பேருக்கு விதவை மற்றும் முதியோர் பென்ஷன் வழங்க ஒப்புதல் வழங்கியுள்ளார். மேலும், இலவச அரிசிக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் பணத்துக்குப் பதில் மீண்டும் இலவச அரிசி வழங்கப் பரிசீலிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.  

நாராயணசாமி

காவலர் பணியிடங்களுக்கான வயது உச்சவரம்பு 22 லிருந்து 24 ஆக உயர்த்துவதற்கு உள்துறை அமைச்சகத்திடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார். அதேபோல் நடத்திய மொத்தமுள்ள 39 கோரிக்கைகளில் ஒருசில கோரிக்கைகளுக்கு உடனடியாக தீர்வு காணப்படும் என ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல் அளித்திருப்பதால் எங்கள் அறப் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைக்கிறோம்" என்றார்.

கிரண் பேடி

இதற்கிடைய, போராட்டம் வாபஸ் குறித்துப் பேசியுள்ள துணை நிலை ஆளுநர் கிரண் பேடி, ``ராஜ் நிவாஸ் முன் நடந்த தர்ணா முடிவுக்கு வந்துவிட்டது. முதல்வர், அமைச்சர்களைச் சந்தித்துவிட்டேன். இந்தச் சந்திப்பு பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு உதவியாகியுள்ளது. ஆறு நாள்களுக்குப் பிறகு புதுச்சேரி அரசுப் பணிக்கு திரும்புவது மகிழ்ச்சி தருகிறது. இப்போது ராஜ் நிவாஸ் சாலை திறந்தே உள்ளது. இனி பார்வையாளர்கள் தாராளமாக ராஜ்நிவாஸ் வரலாம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close