இறுதியாகும் பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி? - அமித் ஷா இன்று சென்னை வருகை  | amit shah today comes to chennai for finalising the bjp aiadmk alliance

வெளியிடப்பட்ட நேரம்: 09:30 (19/02/2019)

கடைசி தொடர்பு:09:30 (19/02/2019)

இறுதியாகும் பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி? - அமித் ஷா இன்று சென்னை வருகை 

நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் தமிழகத்தில் பா.ஜ.க, அ.தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்துத் தேர்தலை சந்திக்கவுள்ளது. இந்தக் கூட்டணியில் பா.ம.க, தே.மு.தி.க, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் இணைவதற்கான பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கிறது. கடந்த 14-ம் தேதி முன்பு வரை பா.ஜ.க, அ.தி.மு.க-வுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை என்பது அதிகாரபூர்வமற்றதாகவே இருந்தது. ஆனால், 14-ம் தேதி சென்னை வந்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அ.தி.மு.க அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகளுடன் அதிகாரபூர்வ பேச்சுவார்த்தையைத் தொடங்கினார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தொழிலதிபர் பொள்ளாச்சி மகாலிங்கம் வீட்டில் நடந்த சந்திப்பின்போது இரு கட்சியிலும் உள்ள முக்கிய தலைவர்கள் பங்கேற்றிருந்தனர். 

பியூஷ் கோயல்

இந்தச் சந்திப்பில் தொகுதிப் பங்கீடு, கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தகவல் வெளியானது. பேச்சுவார்த்தைக்குப் பின் பேசிய பியூஷ் கோயல், ``தமிழகத்தில் அமைய இருக்கும் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த இங்கு வந்திருக்கிறேன். பிரதமர் மோடி தமிழக மக்கள் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறார். கூட்டணியால் கிடைக்கும் வெற்றி பிரதமர் மோடிக்கு வலு சேர்ப்பதாக இருக்கும்" என்று கூறினார். தொகுதிப் பங்கீடு, கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டதாகக் கூறப்பட்டாலும் அவை எப்போது இறுதிவடிவம் பெறும், எப்போது தொகுதிகள் அறிவிப்பு வெளியிடப்படும் என்ற தகவல் தெரிவிக்கப்படாமலே இருந்தது.

அமித் ஷா

இந்த நிலையில், கூட்டணிப் பேச்சுவார்த்தையை இறுதி செய்வதற்காக பா.ஜ.க தேசியத் தலைவர் அமித் ஷா இன்று சென்னை வரவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் தகவலை அக்கட்சி வட்டாரங்களும் மறுக்கவில்லை. அவருக்கு வரவேற்பு கொடுக்கும் வேலைகளில் அக்கட்சியினர் தீவிரமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. முன்னதாக பியூஷ் கோயல் மட்டும் வருவதாகத் தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அமித் ஷாவும் வரவுள்ளது தமிழக அரசியல் களத்தை பரபரப்பாக்கியுள்ளது. சென்னை வரும் அமித் ஷா, அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர்கள் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பி.எஸ்ஸை சந்தித்துப் பேசவும் வாய்ப்பு இருக்கிறது. ஏற்கெனவே நேற்று மகாராஷ்டிராவில் சிவசேனா கூட்டணியை முடிவு செய்த அமித் ஷா, இன்று தமிழகத்தில் அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணியை இறுதி செய்வார் எனப் பேசப்பட்டு வருகிறது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close