திருச்செந்தூரில் மாசித்திருவிழா தேரோட்டம்! - ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் | Masi car festival held in Tiruchendur

வெளியிடப்பட்ட நேரம்: 11:44 (19/02/2019)

கடைசி தொடர்பு:11:44 (19/02/2019)

திருச்செந்தூரில் மாசித்திருவிழா தேரோட்டம்! - ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மாசித் திருவிழாவை முன்னிட்டு இன்று (19.2.19)  திருத்தேரோட்டம் நடைபெற்றது.

தேரோட்டம்

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடும் கடற்கரை ஓரத் தலமும் ஆனது திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாக்களில் மாசித் திருவிழாவும் ஒன்று. இந்தாண்டு மாசித் திருவிழா, கடந்த 10-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது.

இந்த விழா நாள்களில் தினமும் காலையிலும் மாலையிலும் சுவாமி, அம்பாள் தனித்தனி வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. ஏழாம் நாள் திருவிழாவை முன்னிட்டு கடந்த 16-ம் தேதி சுவாமி சண்முகர், தங்கச் சப்பரத்தில் சிவப்பு சாத்தியும், எட்டாம்நாள் திருவிழாவை முன்னிட்டு கடந்த 17-ம் தேதி காலையில் வெள்ளை சாத்தியும், பகலில் பச்சை சாத்தியும் எழுந்தருளி வீதியுலா வருதல் நடைபெற்றது.

மாசித் தேரோட்டம்

ஒன்பதாம் நாள் திருவிழாவை முன்னிட்டு கடந்த 18-ம் தேதி சுவாமி குமரவிடங்கப் பெருமாள் தங்க வாகனத்திலும், தெய்வானை அம்பாள் வெள்ளிக் கமல வாகனத்திலும் எழுந்தருளி உலா வந்தனர். மாசித்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம், 10-ம் நாள் திருவிழாவான இன்று நடைபெற்றது.

தேரோட்டம்

தேரோட்ட நிகழ்வில் முதலில் விநாயகர் தேரும், இதையடுத்து சுவாமி தேரும் பின்னர் அம்பாள் தேரும் ரத வீதிகளில் சுற்றி வந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். ``கந்தனுக்கு அரோகரா... செந்திலாண்டவனுக்கு அரோகரா." என்ற பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் நிலையை வந்தடைந்தது தேர். பதினோறாம் நாள் திருவிழாவான நாளை, (20.2.19) இரவு தெப்ப உற்சவம் நடைபெற உள்ளது. சுவாமி - அம்பாள் தெப்பத்தில் எழுந்தருளி 11 முறை சுற்றி வரும் தெப்ப உற்சவம் நடைபெறுகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close