குடும்பப் பிரச்னையில் 2 மகன்களைக் கொன்று தற்கொலை செய்துகொண்ட தாய்! - கடலூரில் சோகம் | Woman commits suicide with 2 sons in Cuddalore

வெளியிடப்பட்ட நேரம்: 14:00 (19/02/2019)

கடைசி தொடர்பு:14:00 (19/02/2019)

குடும்பப் பிரச்னையில் 2 மகன்களைக் கொன்று தற்கொலை செய்துகொண்ட தாய்! - கடலூரில் சோகம்

கடலூர் அருகே பாதிரிகுப்பம் பகுதியில் வசித்து வருபவர் மதிவாணன் (40). இவர் அதே பகுதியில் மெடிக்கல் வைத்து நடத்தி வருகிறார். இவரின் மனைவி சிவசங்கரி (35). இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு பாவேஷ்கண்ணா (12), ரதிஷ்கண்ணா (8) என இரு மகன்கள் உள்ளனர்.

தற்கொலை

கடந்த ஓர் ஆண்டாகக் கணவன், மனைவிக்குள் குடும்ப பிரச்னை இருந்து வந்துள்ளது. இதனால் இவர்களுக்குள் அடிக்கடி தகராறு நடந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்றும் கணவன், மனைவிக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த சிவசங்கரி, மதிவாணன் கடைக்குச் சென்றவுடன் நேற்று இரவு தனது இரண்டு மகன்களையும் கொலை செய்து, அவர்களின் உடலுக்கு மலர் தூவி அழுதுவிட்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இரவு மெடிக்கலை மூடிவிட்டு வீட்டுக்கு வந்த மதிவாணன் வீட்டின் கதவைத் தட்டியுள்ளார். வெகு நேரமாகியும் கதவு திறக்கப்படாததால் ஜன்னல் வழியாகப் பார்த்தபோது மனைவி சிவசங்கரி தூக்கில் தொங்கியது கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். உடன் அருகில் உள்ள நண்பர்கள் உதவியுடன் வீட்டின் கதவை உடைத்து
உள்ளே சென்று பார்த்தபோது இரு மகன்கள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இறந்த நிலையிலும், மனைவி சிவசங்கரி தூக்கில் தொங்கிய நிலையிலும் கிடந்துள்ளனர். இரு மகன்களை விஷம் கொடுத்து கொன்றுவிட்டு சிவசங்கரி தற்கொலை கொள்வதற்கு முன்னதாகக் காவல்துறை மற்றும் உறவினர்கள் அம்மா, தங்கை, மாமா எனத் தனித்தனியாக 4 கடிதங்கள் எழுதி வைத்துள்ளார். அந்தக் கடிதத்தில் என் கணவர் மிகவும் பொறுமையானவர், அவருக்கு நான் அதிகளவு தொந்தரவு கொடுத்துவிட்டேன். எனவே நான் சாகப்போகிறேன்.

கணவருக்குத் தொந்தரவு கொடுக்கக் கூடாது என்பதால் என் இரு மகன்களையும் கூடவே எடுத்துச் செல்கிறேன். என் சாவுக்கும் என் மகன்கள் சாவுக்கும் யாரும் காரணம் இல்லை. எங்கள் உடலை உடல் கூறாய்வு செய்ய வேண்டாம். இவ்வாறு எழுதி வைத்துவிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார். 

தற்கொலை

இது குறித்து கடலூர் திருப்பாதிரிபுலியூர் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தி, இறந்த 3 பேரின் உடலைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்குப் பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். இரண்டு மகன்களைக் கொலை செய்துவிட்டு, தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  


[X] Close

[X] Close