கனிமொழியின் தொடர் முயற்சிக்கு கிடைத்த வெற்றி! - 49 தமிழர்களை மீட்ட சுஷ்மா ஸ்வராஜ் | kanimozhi take action to release 49 people who Trapped in malaysia

வெளியிடப்பட்ட நேரம்: 13:17 (19/02/2019)

கடைசி தொடர்பு:13:17 (19/02/2019)

கனிமொழியின் தொடர் முயற்சிக்கு கிடைத்த வெற்றி! - 49 தமிழர்களை மீட்ட சுஷ்மா ஸ்வராஜ்

தி.மு.க-வின் மகளிரணிச் செயலாளரான கனிமொழி கடந்த வருடம் டிசம்பர் மாதம் நெல்லையில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக சென்றிருந்தார். அப்போது தலைவன் கோட்டையைச் சேர்ந்த பெண்கள் கனிமொழியைச் சந்தித்து கோரிக்கை ஒன்று முன் வைத்தனர்.

கனிமொழி

`மலேசியாவில் மின்சார டவர் அமைக்கும் பணிக்காக எங்கள் ஊரைச் சேர்ந்த 49 பேர்  சென்றார்கள். அப்படிச் சென்றவர்கள் குறித்து எந்தத் தகவலும் எங்களுக்குக் கிடைக்கவில்லை. சமீபத்தில் அவர்களை யாரோ பிடித்து வைத்துள்ளதாகவும், கஷ்டப்படுவதாகவும் வீடியோ ஒன்றை வெளியிட்டு தங்கள் வேதனையை தெரிவித்தனர். அவர்களை மீட்கப் பல அதிகாரிகளைச் சந்தித்தோம் ஒன்றும் பலனில்லை. நீங்கள் எப்படியாவது அவர்களை மீட்டுத் தர வேண்டும்’ எனக் கண்ணீர் மல்க கேட்டுக்கொண்டனர்.  இந்த விவகாரத்தில் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்திருந்தார் கனிமொழி.

பிறகு இது தொடர்பாக இந்திய தூதரக அதிகாரிகளிடம் கனிமொழி பேசியபோது, மலேசியாவில் விசா பிரச்னை காரணமாக 49 பேரை பிடித்துவைத்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. பிறகு அவர்களை விடுவிக்கக் கோரி இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுக்கு அழுத்தம் கொடுத்தார். கனிமொழியின் வேண்டுகோளுக்குப் பிறகு சுஷ்மாவும் மலேசிய அதிகாரிகளைத் தொடர்புகொண்டு தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுத்தார். இதையடுத்து, விசா இல்லாமல் சிக்கியதாக தொடரப்பட்ட வழக்கின் இறுதி விசாரணை இன்று நடைபெறவுள்ளது. இந்த வழக்கு முடிந்த பிறகு மலேசியாவில் உள்ள 49 பேரும் இந்தியா அனுப்பப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நெல்லையைச் சேர்ந்த 49 பேரும் நாளை நாடு திரும்பவுள்ளனர். 


[X] Close

[X] Close