``அவர் மீது 24 வழக்குகள் உள்ளன" - பேராசிரியர் ஜெயராமனுக்கு போலீஸார் விதித்த தடை ! | "There is 24 cases pending on him" -Police states to stop Professor Jeyaraman

வெளியிடப்பட்ட நேரம்: 13:40 (19/02/2019)

கடைசி தொடர்பு:13:40 (19/02/2019)

``அவர் மீது 24 வழக்குகள் உள்ளன" - பேராசிரியர் ஜெயராமனுக்கு போலீஸார் விதித்த தடை !

ஒரு கருத்தரங்கு, ஒருங்கிணைப்பாளரான ஒரு தனிநபரின் மீது உள்ள அரசியல் வழக்குகளை காரணம் காட்டி தடுக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன், அரசின் மீத்தேன் திட்டத்துக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருபவர். விவசாய நிலங்கள் பாதுகாப்பிலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும், மணற்கொள்ளை தடுப்பிலும் பல்வேறு கருத்துகளை முன்வைத்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருபவர். இவரது தலைமையிலான மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு, நிகழ்த்த இருந்த கருத்தரங்குக்கு போலீஸார் அனுமதி தர மறுத்ததை அடுத்து, பேராசிரியர் ஜெயராமன் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது, இந்த வழக்கில் தற்போது சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. வழக்கு மற்றும் தீர்ப்பு விவரங்கள் பின்வருமாறு, 

 போலீசார்

அரசின் அசுர  வளர்ச்சித் திட்டங்களால் இயற்கை வளங்களும், விலை நிலங்களும் பாதிப்படைவதாக, பல்வேறு அமைப்புகள், பொது மக்கள் என அனைவரும் குற்றம்சாட்டி வரும் நிலையில், பல்வேறு நிலைகளில் மக்கள் இயற்கை சுரண்டலுக்கு எதிரான கருத்துகளை தொடர்ந்து பதிவு செய்து வருகின்றனர். காவிரிப் படுகையை, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக, தமிழக அரசு அறிவிக்க வேண்டும். காவிரிப் படுகையில், மீத்தேன் எண்ணெய் நிறுவனங்கள், மின் திட்டங்கள் உள்ளிட்ட அனைத்தையும், மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும், உணவு பாதுகாப்பு, நீர் மேலாண்மை ஆகியவற்றை உறுதி செய்யவேண்டும் என்பதை வலியுறுத்தி, ஒரு விழிப்புணர்வு கருத்தரங்கை 23.9.18 அன்று நடத்தத் திட்டமிட்ட மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு, அதற்காக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களையும், இயற்கை பாதுகாப்பு ஆர்வலர்களையும் அழைத்திருந்தது, இந்தக் கருத்தரங்கை நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் நடத்துவதற்காக போலீஸாரிடம் அனுமதி கேட்டிருந்தது.

 போலீசார்

மயிலாடுதுறை போலீஸார், நாகை மாவட்ட எஸ்.பி ஆகியோரிடம் அனுமதி கேட்டும் , அவர்கள் எந்தப் பதிலும் அளிக்காததால், பேராசிரியர் ஜெயராமன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார், மயிலாடுதுறை நீதிமன்றம் மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின், அனுமதி வேண்டுகோளுக்குப் பதிலளிக்குமாறு போலீஸாருக்கு உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் பேராசிரியர் ஜெயராமன் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார், இந்த வழக்கு, நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் அடங்கிய இருவர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. 

 

 போலீசார்

போலீஸார் தரப்பில், பேராசிரியர் ஜெயராமன் மீது 24 வழக்கு இருப்பதாகவும், அதனால் அனுமதி மறுக்கப்படுவதாகவும்  சொல்லப்பட்டது, இதைத் தொடர்ந்து மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு, சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வைகை, அவர்மீதுள்ள 24 வழக்குகளில், 8 வழக்குகளில் அவர் விடுதலையாகி இருக்கிறார் என்பதையும்,மேலும் இவரது போராட்டங்களினால் பல இவர் மீது புனையப்பட்ட பொய் வழக்குகள் எனவும், இவையாவும் பெரும் குற்றத்துக்கான வழக்குகள் அல்ல மாறாக மக்கள் நலம் சார்ந்த போராட்டத்தினால் இவர்மீது போடப்பட்ட வழக்குகள் எனவும், இதைக் காரணமாகக் காட்டி கருத்தரங்குக்கு அனுமதி மறுப்பது தவறு எனவும் வாதாடினார். இதைத் தொடர்ந்து தீர்ப்பளித்த நீதிபதிகள், பேராசிரியர் ஜெயராமன் குறிப்பிடும் தேதியில், மேற்சொன்ன கருத்தரங்கை நடத்த அவருக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று போலீஸாருக்கு உத்தரவிட்டுத் தீர்ப்பளித்தது. 

 போலீசார்

இவ்வழக்கு பற்றிப் பேசிய உயர் நீதிமன்ற வழக்கறிஞர் அருண், ``ஒரு அமைப்பு நடத்த விரும்பிய, கருத்தரங்குக்காக மூன்று மாதங்கள் சட்டப் போராட்டம் நடத்த வேண்டியுள்ளது, நம் நாட்டின் கருத்துரிமையைக் கேள்விக்குறியாக்குகிறது. மக்கள் நலனுக்காகச் செயல்படும் ஒரு அமைப்பு நடத்தும் கருத்தரங்கு, தமிழகத்தின் முக்கிய அரசியல் ஆளுமைகள் ஆதரவளித்துப் பங்கேற்கவிருந்த ஒரு கருத்தரங்கு, அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளரான ஒரு தனிநபரின் மீது உள்ள அரசியல் வழக்குகளைக் காரணம் காட்டித் தடுக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது, கருத்தரங்கை நடத்த அனுமதி அளித்த உயர்நீதிமன்ற தீர்ப்பு ஆறுதல் அளிக்கிறது " என்றார்.

இந்திய அரசியலமைப்பு வழங்கவும் கருத்துரிமையை, அரசியல் ஒடுக்குவது இது முதல் முறை இல்லை, கடைசி முறையாகவும் இருக்கப்போவதில்லை என்பதே நிதர்சனம்.


[X] Close

[X] Close