`கருவைக் கலைத்துவிட்டு கொலை செய்திருக்காங்க' - துணை நடிகை யாஷிகாவின் அம்மா கதறல்  | Police should take appropriate action in my daughter's murder case, urges actress Yashika's mother

வெளியிடப்பட்ட நேரம்: 13:46 (19/02/2019)

கடைசி தொடர்பு:13:46 (19/02/2019)

`கருவைக் கலைத்துவிட்டு கொலை செய்திருக்காங்க' - துணை நடிகை யாஷிகாவின் அம்மா கதறல் 

துணை நடிகை யாஷிகா

சென்னை பெரவள்ளூரில் தூக்குப்போட்டு தற்கொலை செய்த துணை நடிகை யாஷிகா வழக்கில் புதிய தகவல் வெளியாகியுள்ளது. 3 மாத கருவை கலைத்துவிட்டு கொலை செய்திருக்காங்க என துணை நடிகையின் அம்மா எஸ்தர் பியூலா ராணி நம்மிடம் தெரிவித்தார். 

 சென்னை பெரவள்ளூர் ஜி.கே.எம். காலனியில் குடியிருந்த துணை நடிகை யாஷிகா, கடந்த 12-ம் தேதி தூக்கில் தொங்கினார். அதுதொடர்பாக பெரவள்ளூர் இன்ஸ்பெக்டர் சிட்டிபாபு, எஸ்.ஐ. முகுந்தன் ஆகியோர் விசாரித்தனர். துணை நடிகை யாஷிகா எழுதிய டைரி அடிப்படையில் அவரின் காதலன் மோகன்பாபு என்கிற அரவிந்த்தை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்  இந்தச் சூழ்நிலையில் துணை நடிகை யாஷிகாவின் அம்மா எஸ்தர் பியூலா ராணி, நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றைக் கொடுத்தார்.

அதில் கூறியிருப்பதாவது, ``என்னுடைய இளைய மகள் யாஷிகா சினிமாவில் நடித்துவந்தார். சென்னையில் யாஷிகா தங்கியிருந்தபோது  மோகன்பாபு என்கிற அரவிந்த் என்பவருடன் காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் ஜி.கே.காலனி, 22-வது தெருவில் வீடு எடுத்து தங்கியிருந்தனர். கடந்த 12-ம் தேதி யாஷிகா, எனக்கு வாட்ஸ்அப் செய்தி ஒன்றை அனுப்பியிருந்தார். அதில் `எனக்கு எதுன்னா அவனை சும்மாவிடாதீங்க' என்று குறிப்பிட்டிருந்தார். நான் உடனே யாஷிகாவுக்கு போன் செய்தேன். ஆனால், அவர் போனை எடுக்கவில்லை. அதன்பிறகு மோகனின் நண்பர் அஜித் என்பவருக்கு போன் செய்தேன். அவர், வீட்டுக்குச் சென்று பார்த்துவிட்டு யாஷிகா தூக்கிட்டு இறந்துவிட்டாள் என்று கூறினார். உடனே நான் திருப்பூரிலிருந்து சென்னைக்கு வந்தேன். அப்போது யாஷிகாவின் சடலம், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டிருந்தது.

துணை நடிகை யாஷிகா

பிரேதப் பரிசோதனைக்குப்பிறகு யாஷிகாவின் சடலத்தை புதைக்கும்படி கூறினேன். அப்போது மோகனின் நண்பர் அஜித், எரிக்கும்படி என்னிடம் கூறினார். உடனே, யாஷிகாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறினேன். உடனே அங்கிருந்தவர்கள் புதைக்கலாம் என கூறினர். இதையடுத்து, நான் மயானத்துக்குச் சென்றேன். அங்கு யாஷிகாவின் சடலத்தை எரிக்க ஏற்பாடு நடந்தது. உடனே புதைக்கத்தான் வேண்டும் என வாதிட்டேன். ஆனால், யாஷிகாவின் சடலத்தை எரித்துவிட்டனர். 

யாஷிகா தங்கியிருந்த வீட்டுக்கு வந்துபார்த்தபோது அலங்கோலமாக காட்சியளித்தது. யாஷிகா தூக்கில் தொங்கிய ஃபேனின் இறக்கை வளையவில்லை. மேலும் வீட்டிலிருந்த 50 சவரன் நகை, பணம் இல்லை. நகை, பணத்துக்காக யாஷிகாவை மோகன்பாபு மற்றும் அவரின் நண்பர் கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் ஊர்ஜிதமாகியது. மேலும், என் மகள் 3 மாதம் கர்ப்பமாக இருந்துள்ளார். இறப்பதற்கு 3 நாள்களுக்கு முன் கருவை கலைத்தற்கான ஆதாரம் வீட்டில் இருந்தது. என் மகளை திருமணம் செய்யாமல் ஏமாற்றி வாழ்ந்துள்ளார் மோகன்.

 துணை நடிகை யாஷிகாவின் அம்மா எஸ்தர்

என் மகள் இறந்ததும் அதற்கு காரணம் மோகனின் குடும்பத்தினர் என்று இன்ஸ்பெக்டரிடம் கூறினேன். அப்போது அவர், அதெல்லாம் இல்லை, உன் புகாரை வாங்க முடியாது என்று கூறினார். மேலும், என்னுடைய கையெழுத்தை மிரட்டி வாங்கிக்கொண்டார். கொலை வழக்கு பதிவு செய்யாமல் தற்கொலை என வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும், என்னை திருப்பூருக்கு செல்லவிடாமல் மகள் இறந்த வீட்டிலேயே தங்கும்படி கட்டாயப்படுத்தினார். அதோடு அந்த வீட்டுக்குக் கொடுத்த அட்வான்ஸ் தொகை மற்றும் பொருள்களை எடுத்துச் செல்லவும் அனுமதிக்கக்கூடாது என வீட்டின் உரிமையாளரிடம் கூறிவிட்டனர். இதனால் அந்த வீட்டில் சாப்பிடக்கூட வழியில்லாமல் சிரமப்பட்டுவருகிறேன். எனவே, கொலை செய்த தடயங்களை அழித்த மோகன், அவரின் நண்பர் மற்றும் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுத்து எனக்கு நீதி வழங்கவேண்டும்" என்று கூறப்பட்டிருந்தது. 

இதுகுறித்து எஸ்தர் பியூலா ராணியிடம் கேட்டதற்கு, ``சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் யாஷிகாவைக் கொலை செய்துவிட்டதாக நான் புகார் கொடுத்தேன். அப்போது அங்குள்ளவர்கள் டி.ஜி.பி அலுவலகத்தில் புகாரை கொடுக்கும்படி கூறினர். மேலும் யாஷிகா தற்கொலை வழக்கில் மோகன் என்பவரை கைது செய்துள்ளோம் என்று தெரிவித்தனர். அதோடு யாஷிகா கொலை செய்யப்பட்டாரா என்பது பிரேதப் பரிசோதனை ரிப்போர்ட்டில் தெரியும். அதுவரை அமைதியாக இருங்கள் என்று கூறினர். இதனால், பெரவள்ளூரிலிருந்து திருப்பூருக்கு இன்று புறப்பட்டுச் செல்கிறேன் என்றவரிடம், ``யாஷிகா 3 மாதம் கர்ப்பமாக இருந்தாகவும் கருவை கலைத்ததாகவும் கூறியிருக்கிறீர்களே?'' என்று கேட்டதற்கு, ``அது உண்மைதான். யாஷிகா தங்கியிருந்த வீட்டில்தான் அதற்கான ஆதாரம் இருந்தது. சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில்தான் யாஷிகாவுக்கு கருக்கலைப்பு நடந்துள்ளது. அதில் கணவர் பெயர் என மோகன்பாபு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், மருந்து மாத்திரைகளும் உள்ளன. அந்த ஆதாரம் அடிப்படையில்தான் புகார் கொடுத்துள்ளேன்" என்றார். 


[X] Close

[X] Close