`கூட்டணி விஷயத்தில் சிறிதளவு சமரசம்!’ - நீண்ட விளக்கம் கொடுத்த ராமதாஸ் | ramadoss explains about admk alliance

வெளியிடப்பட்ட நேரம்: 14:17 (19/02/2019)

கடைசி தொடர்பு:15:04 (19/02/2019)

`கூட்டணி விஷயத்தில் சிறிதளவு சமரசம்!’ - நீண்ட விளக்கம் கொடுத்த ராமதாஸ்

``கார் மேகம் உள்ளவரை, கடல் உள்ளவரை, தமிழ் உள்ளவரை அ.தி.மு.க., தி.மு.க-வுடன் கூட்டணி இல்லை"  இப்படி அறிவித்த பா.ம.க நிறுவனர் ராமதாஸே இதை உதறித்தள்ளிவிட்டு அ.தி.மு.கவுடன் இணைந்துவிட்டார். இரு கட்சிகளுக்கும் இடையேயான கூட்டணி ஒப்பந்தம் கையொப்பமாகி தொகுதி பங்கீடும் முடிந்துவிட்டது. அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியில் பா.ம.கவுக்கு 7 நாடாளுமன்றத் தொகுதிகள், ஒரு மாநிலங்களவை இடமும் ஒதுக்கப்பட்டுள்ளன. இரு திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி இல்லை என அறிவித்துவிட்டு தற்போது அ.தி.மு.கவுடன் கூட்டணி சேர்ந்தது ஏன் என ராமதாஸ் தற்போது விளக்கமளித்துள்ளார். 

ராமதாஸ்

அதில், ``மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பு அடுத்த இரு வாரங்களில் வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அதை எதிர்கொள்வதற்கான ஆயத்தப் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்தத் தேர்தலில் பா.ம.க எத்தகைய நிலைப்பாட்டை மேற்கொள்ளும் என்பதுதான் அரசியல் கட்சிகள் மட்டுமன்றி அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. தமிழ்நாட்டில் இரு திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்பதுதான் 2011- ம் ஆண்டு முதல் பா.ம.கவின் நிலைப்பாடாக இருந்து வந்தது. எனினும், இடைப்பட்ட காலத்தில் தமிழக அரசியலில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. பல்வேறு பிரச்னைகளில் தமிழகத்தின் உரிமைகள் பறிக்கப்பட்டன. இத்தகைய சூழலில்தான் கடந்த ஆண்டு கோவையில் நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில் மக்களவைத் தேர்தலில் பா.ம.க.வின் நிலைப்பாடு குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

ராமதாஸ்

அதில், அனைத்துத் தரப்பினரின் கருத்துகளும் கேட்கப்பட்டன. அதன்முடிவில், ``பா.ம.கவுக்கு மக்களவையில் அதிக உறுப்பினர்கள் இருந்த போது தமிழக நலனுக்காகவும், தமிழர் நலனுக்காகவும் கடுமையான போராட்டங்களை நடத்தி வெற்றி பெற்றது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாடு சந்தித்த அவலநிலைகளுக்கெல்லாம் காரணம் மாநிலங்களின் உரிமைகளுக்காகச் சமரசமின்றி குரல் கொடுக்க எங்களுக்கு மக்களவையில் போதிய வலிமையில்லாமல் இருந்தது. பா.ம.கவுக்கு மக்களவையில் அதிக உறுப்பினர்களை கொண்டிருக்க வேண்டும் என்பதை உணர்ந்து இதற்காக ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி அமைக்க பா.ம.கவில் பொதுக்குழுவில் தீர்மானித்து  கூட்டணி குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் எனக்குத் தரப்பட்டது.

மக்களவைத் தேர்தல் கூட்டணி குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் எனக்கு வழங்கப்பட்ட பின்னர் எந்தக் கட்சியுடன் கூட்டணி அமைப்பது என்பதைத் தீர்மானிக்க, ``தமிழகத்தின் உரிமைகள் மீட்டெடுக்கப் பட வேண்டும், தமிழ்நாட்டு மக்களின் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும், பா.ம.கவின் கொள்கைகளில் எந்தவித சமரசமும் செய்து கொள்ளக் கூடாது’’ ஆகிய மூன்றும்தான் மிக முக்கியக் காரணிகளாக அமைந்தன. தமிழ்நாட்டில் அ.தி.மு.க, தி.மு.க ஆகிய கட்சிகளுக்கு அடுத்தபடியாக மூன்றாவது பெரிய கட்சி பா.ம.க தான். மக்களவைத் தேர்தலில் பா.ம.க தலைமையில் கூட்டணி அமைப்பது சாத்தியமில்லை என்ற நிலையில், அ.தி.மு.க, தி.மு.க ஆகிய இரு திராவிடக் கட்சிகளில் ஒன்றுடன் அணி சேருவதுதான் வாய்ப்பாக இருந்தது. அ.தி.மு.க, தி.மு.க ஆகிய கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று 2011- ம் ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் அவற்றில் ஒன்றுடன் கூட்டணி அமைப்பது எந்த வகையில் சரியாக இருக்கும், அதை எவ்வாறு நியாயப்படுத்த முடியும், ஆகிய கேள்விகள் எழுந்தன.

ராமதாஸ்

திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்பதில் உறுதியாக இருந்து மக்களவையில் போதிய பிரதிநிதித்துவம் பெறாமல் தமிழகத்தின் உரிமைகள் பறிக்கப்படுவதை தடுக்க முடியாமலும், தமிழகத்திற்குத் தேவையான திட்டங்களை போராடிப் பெற முடியாமலும் வேடிக்கை  பார்த்துக் கொண்டிருக்கப் போகிறோமா அல்லது கூட்டணி குறித்த நிலைப்பாட்டில் சிறிய தற்காலிக சமரசத்தைச் செய்து கொண்டு மேற்கண்ட இரு கட்சிகளில் ஒன்றுடன் கூட்டணி அமைத்து தமிழகத்தின் நலனுக்காகக் குரல் கொடுக்கப் போகிறோமா என்று தீர்மானிக்க வேண்டிய கட்டாயத்துக்கு நான் ஆளாக்கப்பட்டேன். மிக நீண்ட சிந்தனைகள் மற்றும் ஆலோசனைகளுக்குப் பிறகு கொள்கைகளில் தேக்கு மரமாக இருந்தாலும், கூட்டணி நிலைப்பாட்டில் தமிழக நலன் கருதி நாணலாக இருப்பதில் தவறில்லை எனத் தீர்மானித்தேன்.

இதனால் அ.தி.மு.க, தி.மு.க ஆகிய இரண்டில் எந்தக் கட்சியுடன் கூட்டணி என்பதைத் தீர்மானிக்க வேண்டியிருந்தது. மத்திய அரசிடமிருந்து தமிழகத்திற்கான திட்டங்களைப் போராடிப் பெற்றாலும், அதைச் செயல்படுத்துவதில் பெருந்துணையாக எந்தக் கட்சி இருக்கும்? என்ற கேள்விக்குக் கிடைக்கும் விடைதான், யாருடன் கூட்டணி என்ற கேள்விக்குமான விடை என்பதில் மிகவும் உறுதியாக இருந்தேன்.

அ.தி.மு.க - பா.ம.க

2004ல் அன்புமணி மத்திய அமைச்சராக இருந்தபோது தமிழகத்தின் நலன் கருதி ஏராளமான திட்டங்களைக் கொண்டு வந்தார். அப்போது மதுரையில் ரூ.150 கோடியில் எய்ம்ஸ்க்கு இணையான அதிஉயர் சிறப்பு மருத்துவமனை அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டு, அதற்கான நிதி முழுமையாக ஒதுக்கப்பட்டும் அப்போதிருந்த தி.மு.க அரசால் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. மாறாக, அதற்காக ஒதுக்கப்பட்ட நிதி வீணடிக்கப்பட்டது. அப்போது மட்டும் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்பட்டிருந்தால், அது கடந்த 10 ஆண்டுகளில், இப்போது கட்டுவதற்கு திட்டமிடப் பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையை விட பெரிய உச்சநிலை மருத்துவமையமாக உருவெடுத்திருக்கும். அதேபோல், பல திட்டங்கள் தி.மு.க ஆட்சியில் செயல்படுத்தப்படவில்லை. மேலும் பல திட்டங்கள் கைவிடப்பட்ட நிலையில் வேறு சில திட்டங்கள் தொடக்க நிலையிலேயே உள்ளன. இதேநிலைதான் தமிழக ரயில்வே திட்டங்களிலும். பா.ம.கவின் வேலு ரயில்வே இணை அமைச்சர் பதவியிலிருந்து விலகிய பின்னர் தமிழகத்திற்கான ரயில்வே திட்டங்கள் கேட்பாரற்று கைவிடப்பட்டன. அதே காலகட்டத்தில் மத்திய அமைச்சரவையில் இருந்த தி.மு.க அத்திட்டங்களை முடிக்கவோ, அவற்றுக்கு நிதி உதவி பெற்றுத் தரவோ எந்தவித முயற்சியும் செய்யவில்லை.

அ.தி.மு.க மீது விமர்சனங்களே இல்லையா? என்று கேட்டால் `இல்லை’ என்று பதிலளிக்க முடியாது. ஆனால், கல்வித்துறை சீர்திருத்தங்கள் தொடர்பாக பா.ம.க முன்வைத்த பல்வேறு யோசனைகளை அ.தி.மு.க அரசு ஏற்றுக் கொண்டது. அதேபோல், 7 தமிழர்களை விடுதலை செய்ய ஆளுநருக்குப் பரிந்துரைத்தது, பேரறிவாளனுக்குப் பிணை வழங்கியது, கடலூர்- நாகை மாவட்டங்களில் முந்தைய ஆட்சியில் அனுமதி அளிக்கப்பட்ட பெட்ரோக்கெமிக்கல் முதலீட்டு மண்டலத்தைக் கொள்கை அளவில் கைவிட்டது, விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்தது, காவிரி விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தியது என பா.ம.க சார்பில் முன்வைக்கப்பட்ட பல்வேறு கோரிக்கைகளையும், யோசனைகளையும் அ.தி.மு.க அரசு ஏற்றுக்கொண்டு செயல்படுத்தியுள்ளது.

அ.தி.மு.க - பா.ம.க

அதுமட்டுமன்றி, தமிழ்நாட்டின் நலன் கருதி மாநில அளவில் செயல்படுத்த வேண்டிய பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்துவதற்கும் அ.தி.மு.க அரசு கொள்கை அளவில் ஒப்புக்கொண்டுள்ளது. மத்தியில் புதிதாக அமையவிருக்கும் அரசில் தமிழகத்திற்கான திட்டங்களையும், உரிமைகளையும் போராடிப் பெறும் விஷயத்தில் இணைந்து செயல்படவும் அ.தி.மு.கவும், பா.ம.க.வும் ஒப்புக்கொண்டுள்ளன. இந்த ஒருங்கிணைப்பு தமிழகத்திற்கு பல நன்மைகளைப் பெற்றுத் தரும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நம்புகிறது. கூட்டணி விஷயத்தில் சிறிய அளவில் சமரசம் செய்து கொண்டாலும் கூட, அதன்மூலம் தமிழகத்திற்கு நன்மை கிடைக்கும் என்பதால் அந்த முடிவு மிகவும் சரியானதாக இருக்கும் என்று நம்புகிறேன். அதன்படியே அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியில் இணைந்து செயல்படவும், இந்தக் கூட்டணியில் இணையும் அனைத்துக் கட்சிகளின் வெற்றிக்காக மிகக்கடுமையாக உழைக்கவும் பா.ம.க. தீர்மானித்துள்ளது.

தமிழகத்தின் நலன்கள் மற்றும் உரிமைகளைப் பாதுகாப்பதில் கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து பா.ம.க. பாடுபடும். அதேநேரத்தில் பா.ம.க அதன் கொள்கைகளில் எத்தகைய சமரசத்தையும் செய்து கொள்ளாது. கடந்த காலங்களில் எப்படித் தமிழகத்தின் உண்மையான எதிர்க்கட்சியாகச் செயல்பட்டதோ, அதேபோல் இனிவரும் காலங்களிலும் பாட்டாளி மக்கள் கட்சி செயல்படும். எந்தத் தருணத்திலும் மக்கள் நலனையும், மாநில உரிமைகளையும் பா.ம.க. விட்டுக் கொடுக்காது என உறுதியளிக்கிறேன்" எனக் கூறியுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close