சின்னத்தம்பி யானையின் தற்போதைய நிலை! - என்ன சொல்கிறது வனத்துறை? | Chinnathambi elephant's current situtation

வெளியிடப்பட்ட நேரம்: 15:00 (19/02/2019)

கடைசி தொடர்பு:15:00 (19/02/2019)

சின்னத்தம்பி யானையின் தற்போதைய நிலை! - என்ன சொல்கிறது வனத்துறை?

கோவையிலிருந்து வரகளியாறு பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்ட சின்னத்தம்பி யானை, தன்னுடைய வாழ்விடத்தைத் தேடி அங்கிருந்து மீண்டும் வெளியில் வந்தது. இதையடுத்து, பொள்ளாச்சி, உடுமலைப் பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு கிராமங்கள் வழியே சென்ற சின்னத்தம்பி யானை அங்கு யாரையும் தாக்கவில்லை. ஆனால், விளை நிலங்கள் பாதிக்கப்படுவதால் சின்னத்தம்பி யானையைப் பிடித்து கும்கியாக மாற்றப்படும் என்று வனத்துறை முடிவு செய்தது.

சின்னத்தம்பி

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில், சின்னத்தம்பி யானையைப் பிடித்து தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைக்க வனத்துறைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதைத்தொடர்ந்து சின்னத்தம்பி யானையை, கடந்த வெள்ளிக்கிழமை மீண்டும் பிடித்த வனத்துறை, டாப்ஸ்லிப் வரகளியாறு பகுதியில் உள்ள கராலில் அடைத்தனர்.

அங்கு, சின்னத்தம்பி யானைக்குத் தொடர்ந்து பயிற்சி வழங்கப்படும் என்று வனத்துறை தெரிவித்துள்ளது. சின்னத்தம்பி யானையை கரால் எனப்படும் கூண்டில் அடைத்ததற்கு பல்வேறு மக்களும் சமூக வலைதளங்களிலும் தங்களது வேதனையை வெளிப்படுத்தி வருகின்றனர்.

சின்னத்தம்பி

இந்த நிலையில், சின்னத்தம்பி நிலையின் தற்போதைய நிலை குறித்து வனத்துறை தரப்பில் விசாரித்தோம். ``சின்னத்தம்பி நலமுடன் இருக்கிறான். அவனுக்கு இயற்கை உணவுகள் வழங்கப்படுகின்றன. களி வழங்கப்படுகிறது. கூண்டின் அளவைச் சற்று விரிவுபடுத்தியுள்ளோம். ஐந்து யானைகள் அங்கு நிறுத்தப்பட்டுள்ளன. சின்னத்தம்பி ஆக்ரோஷமாக இல்லை. இங்கு, மருத்துவர் குழு, பாகன்கள், வனத்துறையினர் சின்னத்தம்பியை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்" என்றனர்.


[X] Close

[X] Close