பாலகிருஷ்ணா ரெட்டி விவகாரம் - அரசு அறிவிக்கும் முன்பே அறிவித்த அ.தி.மு.க! | hosur constituency in tamil nadu declared vacant

வெளியிடப்பட்ட நேரம்: 15:09 (19/02/2019)

கடைசி தொடர்பு:15:09 (19/02/2019)

பாலகிருஷ்ணா ரெட்டி விவகாரம் - அரசு அறிவிக்கும் முன்பே அறிவித்த அ.தி.மு.க!

முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டியின் தண்டனையை நீக்க உச்ச நீதிமன்றம் மறுத்த நிலையில், தற்போது அவரின் ஓசூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு இதை முறையாக அறிவிக்கும் முன்பே அ.தி.மு.க தலைமைக் கழகம் இதை அறிவித்தது. 

பாலகிருஷ்ணா

தமிழக விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக இருந்த பாலகிருஷ்ணா ரெட்டி மீது 1998-ம் ஆண்டு ஓசூர் அருகே பாகலூரில் கள்ளச்சாராய விற்பனையை எதிர்த்து நடந்த போராட்டத்தில் கலந்துகொண்டு அரசுப் பேருந்துகள் மற்றும் காவல்துறையினரின் வாகனங்கள் மீது தீ வைத்துக் கொளுத்தப்பட்ட வழக்கு இருந்தது. இந்த வழக்கில் பாலகிருஷ்ணா ரெட்டி குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு அவருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டது. இதையடுத்து, அவரின் அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ. பதவி பறிபோனது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்றார். ஆனால், அவரின் கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம் தண்டனையை உறுதி செய்தது. 

ஓ பி எஸ்

இதற்கிடையே நீதிமன்றம் குற்றவாளி எனத் தீர்ப்பு வழங்கி பதவியை இழந்தபின்பும் பல நாள்கள் ஆன பின்பும் பாலகிருஷ்ணா ரெட்டியின் ஓசூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்படாமலே இருந்தது. மேலும் அவரது பெயரும் அரசு இணையதளத்தில் இருந்து நீக்கப்படவில்லை. இதுகுறித்து எதிர்க்கட்சிகள் சட்டப்பேரவையில் புகார் கூறியும் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. நீண்ட இழுபறிக்குப் பிறகு இன்று மதியம் ஓசூர் தொகுதி காலியானதாக சட்டப்பேரவைச் செயலாளர் சீனிவாசன் முறைப்படி அறிவித்தார். ஆனால், ஓசூர் தொகுதி காலியாக உள்ளதாக அரசு அறிவிக்கும் முன்பாகவே அ.தி.மு.க தலைமை அறிவித்தது. 

அ தி மு க

சென்னையில் இன்று பா.ம.க - அ.தி.மு.க இடையே கூட்டணி உடன்பாடு ஏற்பட்டது. அப்போது காலியாக உள்ள 21 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கும் பா.ம.க ஆதரவு அளிக்கும் எனத் துணை முதல்வர் ஓ.பி.எஸ் பேசினார். ஓசூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்படுவதற்கு முன்பு 20 தொகுதிகள் தான் காலியாக இருந்தது. ஆனால், அரசு முறைப்படி அறிவிக்கும் முன்பாகவே அ.தி.மு.க அறிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close