காவலர்களுக்கான பயிற்சியில் ராணுவ வீரரை சிறப்பு விருந்தினராக அழைத்துப் பேசவைத்த காவல்துறை! - கரூர் நெகிழ்ச்சி | Karur police invites Army man to speak in training program

வெளியிடப்பட்ட நேரம்: 15:30 (19/02/2019)

கடைசி தொடர்பு:15:30 (19/02/2019)

காவலர்களுக்கான பயிற்சியில் ராணுவ வீரரை சிறப்பு விருந்தினராக அழைத்துப் பேசவைத்த காவல்துறை! - கரூர் நெகிழ்ச்சி

 

 
 சுரேஷ்குமார்

புல்மாவில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் மரணமடைந்ததைத் தொடர்ந்து, ராணுவ வீரர்களின் மீதாத மதிப்பும், மரியாதையும் மக்கள் மனதில் இன்னும் கூடி இருக்கிறது. கரூரில் நடைபெற்ற காவலர்களுக்கான நிறைவு வாழ்வு பயிற்சியில், ராணுவத்தில் பணியாற்றும் வீரரை அழைத்துவந்து பேசவைத்து, அவர் கைகளால் பரிசுகள் வழங்கவைத்து நெகிழவைத்திருக்கிறார்கள் கரூர் மாவட்ட போலீஸார்.

 புல்மாவில் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதல் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. தீவிரவாத அமைப்புக்கும், அந்த அமைப்பை ஆதரிக்கும் பாகிஸ்தானுக்கும் உலக நாடுகள் பலவும் தங்களது கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், அந்தத் தாக்குதலில் வீரமணம் அடைந்தர்வர்களுக்கு, நாடு முழுவதும் அஞ்சலி நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. மக்கள் மத்தியில் ராணுவ வீரர்கள் மீதான மரியாதை பலமடங்கு கூடியிருக்கிறது. காவல் துறைக்கும், ராணுவ வீரர்களுக்கும்  இடையே, 'யாருக்கு அதிகாரம் அதிகம்?' என்ற ஈகோ யுத்தம் மேலோங்கி இருக்கும் என்று சொல்வார்கள். இந்நிலையில், கரூரில் நடைபெற்ற காவலர்களுக்கான வாழ்வியல் பயிற்சியின் நிறைவு நாளில், ராணுவத்தில் பணியாற்றும் சுரேஷ்குமார் என்பரை சிறப்பு விருந்தினராக அழைத்து வந்து பேசவைத்து, கௌரவப்படுத்தியிருக்கிறது கரூர் மாவட்ட காவல் துறை.
 தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும், வாரந்தோறும் காவலர்களுக்கு மூன்று நாள்கள் நிறைவாழ்வுப் பயிற்சி நடந்துவருகிறது. கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற காவலர் நிறைவுவாழ்வு பயிற்சியில், வீரமரணமடைந்த 40 துணை ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அதோடு, கரூர் மாவட்ட காவலர்களுக்கான பதினோராவது நிறைவுப் பயிற்சியின் இறுதி நாளில், இந்திய ராணுவத்தில் பணியாற்றிவரும் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுரேஷ்குமாரை சிறப்பு விருந்தினராக அழைத்துவந்தனர். அங்கே பேசியதோடு, காவலர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். இந்திய குடியரசுத் தலைவரின் சேனா மெடல் பெற்று, ஐ.நா அமைதிப் படையில் பணியாற்றிய சுரேஷ்குமார் நிகழ்ச்சியில் பேசியபோது...

 "என்னை இங்கே அழைத்தது எனக்கு நெகிழ்ச்சியா இருக்கு. நாட்டின் எல்லையை 24 மணி நேரமும் ராணுவ வீரர்கள் பாதுகாத்துவருவது மகத்தான பணி. வெயில்,மழை,குளிர் என்று பாராமல்,365 நாள்களும் விழிப்போடு இருந்து பாதுகாக்கும் பணி. இந்தப் பணியை இங்கிருந்து சாதாரணமாகப் பேசிவிடலாம். களத்தில் இருந்து செய்பவர்களுக்குத்தான் அதன் கஷ்டம் தெரியும். இந்தப் பணியில் எவ்வளவு அல்லல் இருந்தாலும், நாட்டில் உள்ள நூற்றுக்கும் அதிகமான கோடி பேரும் நிம்மதியாகத் தூங்க, நாம் காவல் காக்கிறோம் என்று நினைக்கும்போதே, எல்லா வேதனைகளும் மறைந்துவிடும். குடும்பம், இன்பம், நண்பர்கள், சுற்றம், அமைதியான வாழ்க்கை எல்லாவற்றையும் இழந்து, நாட்டுக்காக ஒவ்வொரு ராணுவ வீரரும் எல்லையில் நிற்கிறோம். ராணுவத்திற்கு சற்றும் குறைவில்லாத மாண்பைக் கொண்டது காவல் துறை. அதில் பணியாற்றும் நீங்கள் மன இறுக்கத்தைப் போக்க, இந்த வேலையின் முக்கியத்துவத்தை உணர வேண்டும்" என்றார். தொடர்ந்து, சகோதரத்துவ வாழ்வு மற்றும் இந்திய ராணுவத்தின் திறன் குறித்து விரிவாகப் பேசினார்.
 இந்நிகழ்ச்சியில், கரூர் மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் பாஸ்கரன், பயிற்சி ஒருங்கிணைப்பாளர் காவல் ஆய்வாளர் சந்தோஷ்குமார், உதவி ஆய்வாளர் கிருத்திகா, பயிற்சியாளர்கள் பேராசிரியர் சேதுபதி மற்றும் வடிவேல் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியின் நிறைவாக, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில், சமீபத்தில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு புகழாரம் சூட்டி, மெழுகுவத்தி ஏந்தி, ஒரு நிமிடம் மௌனஅஞ்சலி செலுத்தப்பட்டது.
 


[X] Close

[X] Close