`மக்களின் பிரச்னைகளுக்காக இவர்கள் கூட்டணி சேரவில்லை!’ - ராமதாஸைச் சாடும் ஸ்டாலின் | Stalin slams PMK Ramadoss over alliance with ADMK

வெளியிடப்பட்ட நேரம்: 15:45 (19/02/2019)

கடைசி தொடர்பு:15:45 (19/02/2019)

`மக்களின் பிரச்னைகளுக்காக இவர்கள் கூட்டணி சேரவில்லை!’ - ராமதாஸைச் சாடும் ஸ்டாலின்

அ.தி.மு.க-வின் ஊழலை விமர்சனம் செய்து புத்தகம் வெளியிட்டுவிட்டு, இப்போது அவர்களுடனேயே கூட்டணி வைப்பதற்கு வெட்கமாக இல்லையா என்று பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸை, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாகச் சாடினார்.

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்

வேலூர் மாவட்டம் ஆம்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சோலூரில், இன்று நடைபெற்ற வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், ``பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸும் அவரின் மகன் அன்புமணி ராமதாஸும், அ.தி.மு.க-வைப் பற்றி என்னென்ன பேசினர். 2009 நாடாளுமன்றத் தேர்தலில், அ.தி.மு.க-வோடு கூட்டணி சேர்ந்து ஏழு தொகுதிகளில் பா.ம.க போட்டியிட்டபோது, என்ன நிலைக்கு ஆளாகினர் என்பது எல்லோருக்கும் தெரியும். நான் அப்போதே சொன்னேன். ஏழு தொகுதிகளில் போட்டியிட்ட பா.ம.க, ஒன்பது தொகுதிகளில் தோற்றுவிட்டது என்று. சிலருக்குப் புரியவில்லை. 

அதாவது, லோக்சபாவிற்கு ஏழு தொகுதிகளும், ராஜ்யசபாவிற்கு ஒரு தொகுதியும் பா.ம.க-விற்கு கொடுக்கப்பட்டது. ஒரு ராஜ்யசபா சீட் என்பது இரண்டு லோக்சபா எம்.பி-க்களுக்கு சமம். அ.தி.மு.க, பா.ம.க-வின் கூட்டணியை அப்போதே மக்கள் தோற்கடித்தனர். இப்போதும், 7+1 கொடுத்திருக்கிறார்கள். என்ன நடக்கப்போகிறது என்று நாடாளுமன்றத் தேர்தல் முடிவில் பாருங்கள். 

ராமதாஸ், சமீபத்தில் அதி.மு.க ஆட்சியின் ஊழலைப் பற்றி விமர்சனம் செய்து, புத்தகமே வெளியிட்டிருந்தார். புத்தகத்தின் தலைப்பு, ‘அ.தி.மு.க-வின் கதை’. அந்தப் பெரிய மனிதர்தான், இன்றைக்குப் போய் பக்கத்தில் உட்கார்ந்துகொண்டு கையெழுத்துப்போடுகிறார். அவருக்கு வெட்கமாக இல்லை. சூடு, சுரணை இல்லை. மக்களின் பிரச்னைகளுக்காக இவர்கள் சேரவில்லை. சுயநோக்கத்திற்காக அமைந்த கூட்டணி. கால் இல்லாத பா.ஜ.க, தமிழகத்தில் காலூன்ற நினைக்கிறது’’ என்று கடுமையாகச் சாடினார்.


[X] Close

[X] Close