`தேவையற்ற விமர்சனங்கள் வேண்டாம்!' - தொண்டர்களுக்கு சீமான் வேண்டுகோள் | Avoid criticism in social media Seeman request ti his party volunteers

வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (19/02/2019)

கடைசி தொடர்பு:18:00 (19/02/2019)

`தேவையற்ற விமர்சனங்கள் வேண்டாம்!' - தொண்டர்களுக்கு சீமான் வேண்டுகோள்

சமூக வலைதளங்களில் கட்சி தொடர்பான நல்ல கருத்துகளை மட்டும் பரப்ப வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

சீமான்

இது தொடர்பாக அக்கட்சியின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், `பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி வருகின்ற சூழலில் பல்வேறு அரசியல் கட்சிகள் தங்களது அரசியல் வியூகங்களைப் பொறுத்து பல முடிவுகளை எடுத்து வருகின்றன. நாம் தமிழர் கட்சி இத்தேர்தலில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 20 தொகுதிகளில் ஆண்களையும் 20 தொகுதிகளில் பெண்களையும் வேட்பாளராக நிறுத்தத் திட்டமிட்டுள்ளது. நாம் தமிழர் கட்சியின் சார்பாக மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், படித்த இளைஞர்கள், அறிவார்ந்த பெண்கள் பேராசிரியர்கள் எனத் தகுதி வாய்ந்த 40 வேட்பாளர்களை நாம் முன்னிறுத்த இருக்கிறோம். 

இந்நிலையில் நமக்கு இருக்கிற சக்தி வாய்ந்த சமூக ஊடகங்களை முன் எப்போதும் இல்லாத அளவுக்கு ஆக்கபூர்வமான வகையில் முழுமூச்சுடன் பயன்படுத்திட வேண்டிய அவசியம் இருக்கிறது. எனவே, நமது உறவுகள் இந்தக் காலச்சூழலை நன்கு உணர்ந்துகொண்டு பிற கட்சிகளின் கூட்டணிகள், பிற கட்சிகளின் மீதான விமர்சனங்கள் ஆகியவற்றைத் தவிர்த்துவிட்டு நாம் தமிழர் கட்சியின் நேர்மறை கருத்துகளை, அரசியல் தனித்துவங்களை, கட்சியின் ஆட்சி செயல்பாட்டு வரைவு கருத்துகளை, நமது தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் வீடியோக்களை பரப்பி நமக்கான அரசியலை மாண்பு மிகுந்த உளவியலோடு நாம் முன்னெடுக்க வேண்டும். பிறரை விமர்சிக்கின்ற நேரத்தில் நமது கருத்துகளை இன்னும் முழுமூச்சுடன் வேகமாகப் பரப்பும் போது மக்களிடையே நாம்தமிழர் பரவலாகச் சென்று சேரும். எனவே, மற்ற கட்சிகளின் மீதான தேவையற்ற விமர்சனங்களைத் தவிர்த்து விட்டு நாம் தமிழர் கட்சியின் மேன்மைகளை,  தனித்துவங்களை சமூக ஊடகங்கள் வாயிலாகப் பரப்பிட வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறோம்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
 


[X] Close

[X] Close