`போலீஸைக் கொன்ற மணல் கொள்ளையருக்கு ஆயுள் தண்டனை’ - நெல்லை கோர்ட் அதிரடித் தீர்ப்பு! | life imprisonment issued for 5 persons who killed a policeman

வெளியிடப்பட்ட நேரம்: 18:30 (19/02/2019)

கடைசி தொடர்பு:18:30 (19/02/2019)

`போலீஸைக் கொன்ற மணல் கொள்ளையருக்கு ஆயுள் தண்டனை’ - நெல்லை கோர்ட் அதிரடித் தீர்ப்பு!

மணல் கொள்ளை காரணமாக உயிர்ப் பலிகள் நடப்பது தமிழகத்தில் வாடிக்கையான நிகழ்வாகிவிட்டது. நெல்லை மாவட்டம் நம்பியாற்றில் மணல் கடத்தல் கும்பலால் காவலர் ஒருவர் கம்பியால் அடித்துக் கொல்லப்பட்டார். அந்தச் சம்பவத்தில் தொடர்புடைய 5 பேருக்கு, ஆயுள் தண்டனை விதித்து நெல்லை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது

ஜெகதீஷ் துரை கொலை - ஆயுள் தண்டனை தீர்ப்பு

நெல்லை மாவட்டம் சிந்தாமணி கிராமத்தைச் சேர்ந்தவர், ஜெகதீஷ் துரை. இவர், வடக்கு விஜயநாராயணம் காவல் நிலையத்தில் முதல்நிலைக் காவலராகப் பணியாற்றிவந்தார். கடந்த 2018-ம் ஆண்டு மே 6-ம் தேதி, இரவுப் பணியை முடித்துக்கொண்டு வீட்டுக்கு வந்த நிலையில், செல்போனில் அழைப்பு வந்துள்ளது. அதில் பேசியவர், நம்பியாற்றில் தாமரைக்குளம் என்ற இடத்தில் ஒரு கும்பல் மணல் கொள்ளையில் ஈடுபட்டிருப்பதாகத் தகவல் கொடுத்துள்ளார். அதனால், அந்தக் கும்பலைப் பிடிக்க இரவில் தனியாக ஜெகதீஷ் துரை சென்றிருக்கிறார். 

ஆற்றுப் பகுதிக்குச் சென்ற அவரை மணல் கொள்ளையர்கள் கம்பியால் அடித்து, கொடூரமாகக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்று விட்டார்கள். அவரைக் கொலைசெய்த கும்பல், மணல் கடத்தலுக்குப் பயன்படுத்திய டிராக்டர் பழுதடைந்ததால் அங்கேயே போட்டுவிட்டுச் சென்றுவிட்டது. இரவு முழுவதும் அவர் வீட்டுக்கு வராத நிலையில், அதிகாலை 5 மணிக்கு அவரது உடலை நம்பியாற்றில் கண்டுபிடித்தனர். 

இது தொடர்பாக விஜயநாராயணம் காவல் நிலையத்தில் வழக்குத் தொடரப்பட்டு விசாரணை நடைபெற்றது. இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய 6 பேர் கைது செய்யப்பட்டு, நெல்லை 4-வது குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. இந்த வழக்கின் விசாரணை கடந்த மாதமே முடிவடைந்த நிலையில், நீதிபதி கிளாஸ்டன் ப்ளஸ்ட் தாகூர் இன்று தீர்ப்பு வழங்கினார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 6 பேரில், முருகப்பெருமாள் என்பவர் மட்டுமே விடுவிக்கப்பட்டார். 

குற்றம் சாட்டப்பட்ட முருகன், கிருஷ்ணன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையுடன் மூன்றாண்டு கடுங்காவல் தண்டனையும், 10,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. மணிக்குமார், ராதாரவி ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனையுடன் இரண்டு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், 1000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. அமிதாப்பச்சன் என்பவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது..

காவல் துறையைச் சேர்ந்தவரை மணல் கொள்ளையர்கள் கொடூரமாகக் கொலைசெய்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டதைக் காண, நெல்லை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரான அருண் சக்திகுமார் உள்ளிட்ட காவல்துறை உயரதிகாரிகள், நீதிமன்றத்துக்கு வந்திருந்தனர். இந்த வழக்கில், காவல் துறை சார்பாக அரசு வழக்கறிஞர் சிவலிங்கமுத்து ஆஜராகி வாதாடினார். 


[X] Close

[X] Close