கனிமொழி முயற்சியால் மலேசியாவில் தவித்த 49 தமிழர்கள் மீட்பு - கிராம மக்கள் நன்றி | 49 tamilians who were arrested in malaysia were rescued with the help of kanimozhi

வெளியிடப்பட்ட நேரம்: 19:45 (19/02/2019)

கடைசி தொடர்பு:19:45 (19/02/2019)

கனிமொழி முயற்சியால் மலேசியாவில் தவித்த 49 தமிழர்கள் மீட்பு - கிராம மக்கள் நன்றி

மலேசியாவில் தவித்த 49 தமிழர்களை மீட்க கனிமொழி எம்.பி மேற்கொண்ட முயற்சிகளின் பலனாக, அவர்கள் அனைவரும் இந்தியத் தூதரக அதிகாரிகளால் மீட்கப்பட்டு, நாளை சென்னை விமான நிலையத்துக்கு வர உள்ளனர். 

கனிமொழி

தி.மு.க-வின் மகளிரணிச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழி, கடந்த டிசம்பர் 2-ம் தேதி, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நெல்லைக்குச் சென்றிருந்தார். கடையநல்லூரில் நடந்த பொதுக்கூட்டத்துக்கு அவர் சென்றபோது, சங்கரன்கோவில் அருகே உள்ள தலைவன்கோட்டையைச் சேர்ந்த பொதுமக்கள், நெல்லை மேற்கு மாவட்டச் செயலாளரான சிவபத்மநாபனிடம் சென்று கனிமொழியைச் சந்தித்துப் பேச விரும்புவதாகத் தெரிவித்தனர். 

அதன்படி கனிமொழியிடம் பேசி, கிராம மக்களைச் சந்திக்க சிவபத்மநாபன் ஏற்பாடுசெய்துகொடுத்தார். அப்போது பேசிய மக்கள், தங்கள் கிராமத்திலிருந்து மலேசியாவில் வேலைக்காகச் சென்ற 49 பேர், திரும்பி வர முடியாமல் தவிப்பதாகத் தெரிவித்தனர். மலேசியாவில் மின்சார டவர் அமைக்கும் பணிக்குச் சென்ற அவர்களை அழைத்துச்சென்ற புரோக்கர்கள், முறையாக வேலையில் அமர்த்தாமலும், சம்பளம் கொடுக்காமலும், கஷ்டப்படுத்தியதாகத் தெரிவித்தனர். 

வேலைக்கான விசா இல்லாமல் சட்ட விரோதமாக இருந்ததால், 49 பேரும் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட விவரத்தை எடுத்துச்சொல்லி, அவர்களை மீட்க உதவுமாறு கேட்டுக்கொண்டனர். அத்துடன், மலேசியாவில் சிரமத்துக்கு உள்ளான தமிழர்கள் பேசிய வீடியோ காட்சிகளையும் கனிமொழியிடம் காட்டினார்கள். அவற்றைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜிடம் பேசி அனைவரையும் மீட்க உதவுமாறு கோரிக்கை விடுத்தார். 

பொதுமக்கள் சந்திப்பு

அதைத் தொடர்ந்து, இந்திய வெளியுறவுத் துறை மேற்கொண்ட நடவடிக்கையால், கடந்த ஜனவரி 19-ம் தேதி, மலேசியத் தொழிலாளர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது. அதில், அனைவருக்கும் கொடுக்கப்படவேண்டிய நியாயமான ஊதியத்தை வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன், அவர்களை உடனடியாக விடுவிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

அதனால், 49 தமிழர்களும் இந்தியத் தூதரகத்தின் மூலமாக சொந்த ஊருக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி, அனைவரும் நாளை காலை சென்னைக்கு வந்து சேர்கிறார்கள். அதன்பின்னர், சொந்த ஊரான தலைவன்கோட்டைக்கு புறப்பட்டுச் செல்வார்கள். மலேசியாவில் தவித்த தங்கள் உறவினர்களை மீட்டு, பத்திரமாக அழைத்து வர உதவிய கனிமொழிக்கு கிராம மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர். 


[X] Close

[X] Close