ஒரு கிளர்க் மட்டுமே நடத்திய சிட்டிலிங்கி கிராம சபைக் கூட்டம்... ஸ்டாலின், கமல் கவனத்துக்கு! | Sittilingi panchayat gram sabha meeting headed by a clerk, raised controversy

வெளியிடப்பட்ட நேரம்: 18:43 (19/02/2019)

கடைசி தொடர்பு:18:43 (19/02/2019)

ஒரு கிளர்க் மட்டுமே நடத்திய சிட்டிலிங்கி கிராம சபைக் கூட்டம்... ஸ்டாலின், கமல் கவனத்துக்கு!

"அவர் காது வழியாகக் கேட்டாரே தவிர குறித்துக்கொள்ளவில்லை. இது குறித்து அவரிடம் நாங்கள் கேட்கப்போய்ப் பிரச்னையாகி கடைசியில் கிராமசபைக் கூட்டம் கலைந்துவிட்டது. மீண்டும் முறையாக கிராமசபைக் கூட்டம் நடக்க வேண்டும் என்பதற்காக மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளோம்."

ஒரு கிளர்க் மட்டுமே நடத்திய சிட்டிலிங்கி கிராம சபைக் கூட்டம்... ஸ்டாலின், கமல் கவனத்துக்கு!

கிராம சபைக் கூட்டங்களை யார் சிறப்பாக நடத்தினார்கள், மக்கள் நீதி மய்யமா, திராவிட முன்னேற்றக் கழகமா, என்கிற போட்டி தற்போது ஏற்பட்டுள்ளது. ஸ்டாலின் 2008 ல் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது நடத்தியதைத்தான் கமல் தற்போது நிகழ்த்திக் கொண்டிருக்கிறார் என்று கழக உடன்பிறப்புகள் தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள். கிராம சபைக் கூட்டம் நடத்தியதில் யார் சிறந்தவர்கள் என்கிற இருமுனைப் போட்டி ஒருபக்கம் நடந்துகொண்டிருக்க, ஓர் அரசு கிளர்க் தலைமையில் நடந்த கூட்டம் பல்வேறு பிரச்னைகளுக்கு நடுவே நடந்து முடிந்துள்ளது.  

தருமபுரி மாவட்டம் அரூர் ஊராட்சியை அடுத்து உள்ளது இந்த சிட்டிலிங்கி கிராமம். இந்தக் கிராமத்தில் முறையான குடிநீர் வசதி இல்லை. சாலை வசதி இல்லை. மின் விளக்குகள் சரியாக அமைக்கப்படவில்லை. மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி முறையாகச் சுத்தம் செய்யப்படுவதில்லை. ரேஷன் கடை மாதத்திற்கு ஒருமுறை மட்டுமே திறக்கப்படுகிறது. மின்சாரம் சப்ளை குறைந்த அளவே உள்ளது. மலைவாழ் மக்களுக்கு ஜாதிச்சான்றிதழ் வழங்கப்படுவதில்லை. இது போன்ற பல பிரச்னைகள் இந்த கிராமத்தில் உள்ளது. இதைப் பற்றி பல அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் பயனில்லை என்கிறார்கள் இந்தக் கிராமத்தின் மக்கள். இந்நிலையில் பல தீர்மானங்களை நிறைவேற்றுவதற்காக ஜனவரி மாதம் 26-ம் தேதி கிராமசபைக் கூட்டம் நடத்துவதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதை அறிந்த கிராம மக்கள் 500-க்கும் மேற்பட்டோர் கிராமசபைக் கூட்டத்திற்கு வந்தனர். ஆனால் அன்று சரியாக தீர்மானங்களை நிறைவேற்றப்படாததால் பொதுமக்கள் கிராமசபைக் கூட்டத்தைக் கலைத்தனர்.

சிட்லிங்கி கிராமம்

இதைப்பற்றி அந்த கிராம மக்களிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது, ``முதலில் எங்கள் ஊரில் தண்ணீர் இல்லை, ரோடு இல்லை, லைட் வசதி இல்லை. குறைதீர்ப்புக்காக கிராமசபைக் கூட்டம் நடத்துவதாகச் சொன்னார்கள். கிராமசபை கூட்டம் நடத்தினால் ஏழு நாள்களுக்கு முன்பே எங்களுக்கு நோட்டீஸ் கொடுக்க வேண்டும். அந்த மாதிரி எங்களுக்கு எந்த நோட்டீஸும் கொடுக்கலை. ஒரு நாளுக்கு முன்புதான் தகவல் தெரிவித்தார்கள். ஆனாலும் நாங்கள் 500-க்கும் மேற்பட்டோர் கூட்டத்தில் கலந்துகொண்டோம். கிளர்க் மட்டும்தான் வந்தார். வேறு எந்த அதிகாரிகளும் கலந்துகொள்ள வரவில்லை. தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவதற்கு எங்களுடைய குறைகளையும் புகார்களில் சொன்னோம். ஆனா அவர் காது வழியாகக் கேட்டாரே தவிர குறித்துக்கொள்ளவில்லை. இது குறித்து அவரிடம் நாங்கள் கேட்கப்போய்ப் பிரச்னையாகி கடைசியில் கிராமசபைக் கூட்டம் கலைந்துவிட்டது. மீண்டும் முறையாக கிராமசபைக் கூட்டம் நடக்க வேண்டும் என்பதற்காக மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளோம்" என்றனர்.

சிட்லிங்கி கிராம சபை

இந்தக் கிராம சபைக் கூட்டம் குறித்துப் பேசிய அந்த கிளர்க் ``தற்போது வரை கிராமசபைக் கூட்டம் முறையாக நடந்துகொண்டிருந்தது. தீர்மானமும் நல்லபடியாக நிறைவேற்றி வந்தோம். அந்த நேரத்தில்தான் சில பேர் பிரச்னை செய்ய ஆரம்பித்தார்கள். கூட்டத்தில் கலந்துகொள்ளாதவரை தாங்கள் தலைவராக ஏற்றுக்கொள்ளமுடியாது என்றார்கள். தனி அலுவலரும் அந்தச் சமயம் ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் இருந்ததால் கூட்டத்தில் கலந்துகொள்ள முடியவில்லை. இதைச் சொன்னால் பொதுமக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. மீண்டும் கிராமசபைக் கூட்டம் நடக்கணும்னு கடைசியா கலெக்டரிடம் மனு எழுதி போட்டிருக்காங்க” என்றார்.

இதைப்பற்றிப் பேசிய தனி அலுவலர், ``கிராம சபை கூட்டம் கூடிய விரைவில் முறையாக நடக்கும். தீர்மானங்களும் நிறைவேற்றப்படும்” என்றார்.

கிராமசபைக் கூட்டங்களை யார் சிறப்பாக நடத்துவது என்று போட்டிபோட்டுக் கொண்டிருக்கும் அரசியல் தலைவர்கள் இந்த விவகாரத்தில் ஏதும் குரல் கொடுத்தால் சிறப்பு!


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close