ஸ்டெர்லைட் பிரச்னை உருவாக தி.மு.க-வும் ம.தி.மு.க-வும்தான் காரணம் - கடம்பூர் ராஜூ குற்றச்சாட்டு | The dmk and mdmk are only the reasons for the sterile problem says minister Kadambur Raju

வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (19/02/2019)

கடைசி தொடர்பு:23:00 (19/02/2019)

ஸ்டெர்லைட் பிரச்னை உருவாக தி.மு.க-வும் ம.தி.மு.க-வும்தான் காரணம் - கடம்பூர் ராஜூ குற்றச்சாட்டு

'ஸ்டெர்லைட் பிரச்னை உருவானதற்கு தி.மு.க-வும் ம.தி.மு.க-வும்தான் காரணம்' என செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்டங்கள் வழங்கும் விழாவில் கலந்துகொண்டு, மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிகள் வழங்கிய அமைச்சர் கடம்பூர் ராஜூ,  பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, "ஸ்டெர்லைட் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு மாவட்ட நிர்வாகத்திற்கோ, அரசுக்கோ ஆச்சர்யத்தைத் தரவில்லை. இந்தத் தீர்ப்பு ஏற்கெனவே  எதிர்பார்த்த ஒன்றுதான்.

ஏனெனில், மக்களின் மனநிலையைப் புரிந்துகொண்டு ஆலை இயங்க அனுமதி மறுத்ததோடு, ஆலையை மூடும்படி அரசாணை வெளியிட்டதும் இந்த அரசுதான். ஒரு அரசு எடுத்த முடிவின்  இறுதி வடிவம்தான் அரசாணை. இதில் செல்லும் ஆணை, செல்லாத ஆணை என எதுவும் இல்லை. மக்களைக் குழப்பும் விதமாக, தி.மு.க-வும், வைகோ-வும்தான் இந்தப் பிரச்னையை அரசியலாக்க, மக்களைத் தவறாக வழி நடத்தினார்கள். கடந்த மே 22-ம் தேதி நடைபெற்ற சம்பவம்கூட,  அப்படி  நடந்த விரும்பத்தகாத ஒரு செயல்தான்.  போராட்டம் ஆரம்பித்த, 42-வது நாளிலேயே மாசு கட்டுப்பாட்டுவாரியம் மூலம், ஆலைக்கான அனுமதி  புதுப்பிக்காமல் ஆலையை மூடப்பட்டது.

மூடிய ஆலைக்கு எதிராகப்  போராட வேண்டாம் என மக்களிடம் அரசு  தொடர்ந்து  சொல்லிவந்தது. அரசியல் காரணங்களுக்காக மக்கள்  தவறாக வழிநடத்தப்பட்டார்கள். அரசு நியமித்த ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன், விசாரணை ஆணையத்திலும் மக்கள் அதைத்தான் சொல்லியுள்ளார்கள். தாங்கள் ஆட்சியில் இருந்த காலத்தில் ஆலை அமைக்கவும், பின் விரிவாக்கத்திற்கும்  அனுமதி வழங்கிய எதிர்கட்சியான தி.மு.க, பின்னர் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக இருப்பதுபோல காட்டிக்கொள்கிறது. அதேபோலத்தான்  பதட்டத்துடன்  தேர்தலைச் சந்திக்க கூட்டணியிலும்  தெளிவில்லாமல், ஸ்டாலின் இரட்டை வேடம் போடுகிறார்” என்றார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close