`சுப்பிரமணியத்துக்கு அரசு சிலை அமைக்காவிட்டால் நானே அமைப்பேன்' - வைகோ! | government will built statue for Subramaniam says vaiko

வெளியிடப்பட்ட நேரம்: 08:01 (20/02/2019)

கடைசி தொடர்பு:08:01 (20/02/2019)

`சுப்பிரமணியத்துக்கு அரசு சிலை அமைக்காவிட்டால் நானே அமைப்பேன்' - வைகோ!

``வீரமரணம் அடைந்த சுப்பிரமணியத்துக்கு சிலை, மணிமண்டபத்தை அரசு  அமைக்க வேண்டும். தவறினால் கட்சி அடையாளமின்றி மக்களை வைத்துக்கொண்டு நானே அமைத்துக் கொடுப்பேன்” என ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

வைகோ

காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த 14-ம் தேதி நடந்த தீவிரவாதிகளின் தற்கொலைப்படை தாக்குதலில் 44 சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் மரணமடைந்தனர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த அரியலூர் மாவட்டம் கார்குடியைச் சேர்ந்த சிவசந்திரன் மற்றும் தூத்துக்குடி மாவட்டம் சவலாப்பேரியைச் சேர்ந்த சுப்பிரமணியம் ஆகியோர் மரணமடைந்தனர். இதில் சவலாப்பேரியில் உள்ள சுப்பிரமணியனின் வீட்டுக்கு ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ நேரில் சென்று அவரது உருவப் படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து, சமாதிக்குச் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர், சுப்பிரமணியத்தின் மனைவி கிருஷ்ணவேணி, தந்தை கணபதி, சகோதரர் கிருஷ்ணசாமி ஆகியோருக்கு ஆறுதல் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``இந்திய நாட்டின் பனிமலைச் சரிவில் ரத்தம் சிந்திய சுப்பிரமணியன், சிவசந்திரன் ஆகியோரால் சவலாப்பேரி மற்றும் கார்குடி ஊர்ப்பெயர்கள் உலகம் முழுவதும் தெரிந்துள்ளது. இவர்களது தியாகத்துக்கு இந்தியர்கள் அனைவரும் கடன் பட்டிருக்கிறார்கள். என்ன நிதி கொடுத்தாலும், எதைச் செய்தாலும் இழந்த உயிரை திரும்பப் பெற முடியாது. சுப்பிரமணியனின் மனைவி கிருஷ்ணவேணிக்கு கிராம நிர்வாக அலுவலர் வேலை வழங்கப்பட்டுள்ளது.

வைகோ

கிருஷ்ணவேணி ஒரு பி.காம்., பட்டதாரி. அவருக்கு மாவட்ட ஆட்சியர், கோட்டாட்சியர் அல்லது வட்டாட்சியர் அலுவலகத்தில் பணி வழங்க வேண்டும். இதை ஒப்புக்குச் செய்ய கூடாது அவரது தகுதிக்கு ஏற்ற பணி வழங்க வேண்டும். அதேபோல், அவரது சகோதரருக்கும் தகுதிக்கேற்ற பணி வழங்கிட வேண்டும். இந்த ஊர் மக்களின் கோரிக்கையின்படி நெடுஞ்சாலையையொட்டி சவலாப்பேரி ஊர் எல்லையில் சுப்பிரமணியத்தின் சிலையும், மணி மண்டபமும் அமைக்க வேண்டும். இதை அரசு செய்யா விட்டால், அரசியல் கட்சி அடையாளமின்றி மக்களை மட்டும் வைத்துக்கொண்டு சிலையும், மணி மண்டபத்தையும் நானே  அமைத்துக் கொடுப்பேன்” என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close