`இது விஷமத்தனமான செயல்' - வதந்தியால் கடுப்பான அன்வர்ராஜா எம்.பி தரப்பு! | AIADMK-BJP coalition - Anwaraja MP withdraws from party?

வெளியிடப்பட்ட நேரம்: 08:42 (20/02/2019)

கடைசி தொடர்பு:08:48 (20/02/2019)

`இது விஷமத்தனமான செயல்' - வதந்தியால் கடுப்பான அன்வர்ராஜா எம்.பி தரப்பு!

அ.தி.மு.க - பா.ஜ.க இடையே கூட்டணி ஏற்பட்டதால் ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினரும் வஃக்பு வாரிய தலைவருமான அன்வர்ராஜா அ.தி.மு.க-வை விட்டு விலகியதாகச் சமூக வலைதளங்களில் செய்தி பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.

அன்வர்ராஜா எம்.பி

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினராகவும், அ.தி.மு.க சிறுபான்மை பிரிவின் மாநிலச் செயலாளராகவும் இருந்து வருபவர் அன்வர்ராஜா. சமீபத்தில் வஃக்பு வாரிய தலைவராக பொறுப்பேற்றுள்ள அன்வர்ராஜா கடந்த சில மாதங்களாகப் பாரதிய ஜனதா கட்சியை கடுமையாக விமர்சனம் செய்து வந்தார். நாடாளுமன்றத்தில் நடந்த முத்தலாக் விவாதத்தில் பங்கேற்று பேசிய அன்வர்ராஜா பா.ஜ.க-வை கடுமையாக விமர்சித்துப் பேசினார். ``ரூபாய் நோட்டு செல்லாது அறிவிப்பினால் கிராம மக்களின் செல்வாக்கை இழந்தீர்கள். ஜி.எஸ்.டி வரிவிதிப்பால் நகர மக்களின் செல்வாக்கை இழந்தீர்கள். டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவு, விலைவாசி உயர்வு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஆகியவற்றால் ஒட்டுமொத்த மக்களின் செல்வாக்கை இழந்துள்ளீர்கள். நீங்கள் கொண்டு வந்த முத்தலாக் சட்டம் முஸ்லிம்களுக்கு எதிரானது. எனவே, இறைத் தண்டனையில் இருந்து தப்ப முடியாது'' எனத் தான் பேசியது தனது சொந்த கருத்தல்ல என்றும், தமிழக அரசின் நிலைப்பாடு அது என்றார்.

இதற்கு முதல்வர் பழனிசாமியின் ஆதரவு உள்ளது என்றும் கூறிவந்தார். இந்த நிலையில், நேற்று அ.தி.மு.க - பா.ஜ.க இடையே நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி ஏற்பட்டது. இரு கட்சிகளுக்கும் இடையே ஏற்பட்ட இந்தக் கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து அன்வர்ராஜா அ.தி.மு.க-விலிருந்து விலகி விட்டதாகச் சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகின. ஏற்கெனவே இந்தக் கூட்டணியை விமர்சித்து நடிகரும் , திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ-வுமான கருணாஸ் கருத்து கூறியுள்ளார். இந்த நிலையில், அன்வர்ராஜா அ.தி.மு.க-வில் இருந்து விலகி விட்டதாகப் பரவிய செய்தியால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக அன்வர்ராஜாவின் உதவியாளரைத் தொடர்புகொண்டு கேட்ட போது, ``சமூக வலைதளங்களில் எம்.பி குறித்துப் பதிவிடப்படும் செய்தி உண்மையில்லை. இதுபோன்ற போலியான பதிவுகளை பதிவிட்டு எம்.பி-யின் பெயருக்குக் கெட்ட பெயர் ஏற்படுத்தும் விஷமத்தனமான செயல் இது. இதை வன்மையாகக் கண்டிக்கிறோம்'' என்றார்.


[X] Close

[X] Close