பாழான பாதாளச் சாக்கடை... சாக்கடையாகும் காவிரி நீர்! உள்ளாட்சி அமைப்புகளின் அலட்சியம் | Broken underground drainage system near mayiladuthurai might affect cauvery

வெளியிடப்பட்ட நேரம்: 12:14 (20/02/2019)

கடைசி தொடர்பு:13:24 (20/02/2019)

பாழான பாதாளச் சாக்கடை... சாக்கடையாகும் காவிரி நீர்! உள்ளாட்சி அமைப்புகளின் அலட்சியம்

மயிலாடுதுறை நகராட்சியில் நடந்து வரும் பாதாள சாக்கடைப் பணியால், சாக்கடை நீர் காவிரியில் கலந்து அசுத்தமாகி வருகிறது.

பாழான பாதாளச் சாக்கடை... சாக்கடையாகும் காவிரி நீர்! உள்ளாட்சி அமைப்புகளின் அலட்சியம்

நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை நகர்ப் பகுதியில் ஆங்காங்கே உடையும் பாதாள சாக்கடை குழாய்களால் சாலை எங்கும் கழிவுநீர் பெருக்கெடுத்துத் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. சுகாதார சீர்கேட்டால் அவதிப்படும் மக்களை அதிகாரிகள் அலட்சியப்படுத்தி வருகிறார்கள். இதுவரை ஏற்பட்ட 7 உடைப்புகளால், நகர் முழுவதும் துர்நாற்றம் வீசும் அவலம் ஏற்பட்டுள்ளது. 

இதுகுறித்துப் பேசும் அந்தப் பகுதிவாழ் மக்கள், ``மயிலாடுதுறையில் காவிரி ஆறு மற்றும் பழங்காவிரியில் பொதுமக்களால் சாக்கடை நீர் விடப்பட்டு வந்த நிலையில் இதற்குத் தீர்வுகாண வேண்டி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து (1996 - 2001) தி.மு.க ஆட்சிக்காலத்தில் மத்திய அரசு நிதி ரூ.20 கோடி, தமிழக அரசின் நிதி ரூ.15 கோடி மற்றும் பொதுமக்கள் பங்களிப்பு தொகை ரூ.7 கோடி என மொத்தம் ரூ.42 கோடி  திட்ட மதிப்பீட்டில் மயிலாடுதுறை, பாதாளச் சாக்கடை திட்டத்தைச் செயல்படுத்த திட்டம் தயாரிக்கப்பட்டு 2003-ம் ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டன. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மேற்பார்வையில் தனியார் ஒப்பந்த நிறுவனம் மூலம் நடைபெற்ற மயிலாடுதுறை பாதாளச்சாக்கடைத் திட்டப்பணிகள் தொடக்கத்திலேயே பல்வேறு சர்ச்சைக்கு உள்ளானது. ஆரம்ப கட்டப்பணிகளில் உள்ள குறைபாடுகளை களைய பல்வேறு போராட்டங்களும் நடைபெற்றது. 2006-ம் ஆண்டு பணிகள் முடிவடைந்து நகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டது.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை பாதாள சாக்கடைத் திட்டம் 2012-ம் ஆண்டு வரை குடிநீர் வடிகால் வாரியமும், 2012-ம் ஆண்டு முதல் தற்போது வரை தனியார் பராமரிப்பிலும் செயல்பட்டுக்கொண்டுள்ளது. 3,406 ஆள் நுழைவுத்தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. 8 கழிவு நீரேற்று நிலையம் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஒட்டு மொத்தமாக 68 கி.மீ தூரத்துக்கு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பாதாள சாக்கடைத் திட்ட கழிவுநீர் குழாய்கள் மூலம் வெளியேற்றப்பட்டு மயிலாடுதுறையை அடுத்துள்ள ஆறுபாதி கிராமத்தில் 32 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்பட்டுள்ள கழிவுநீர் தொட்டிகளுக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு சுத்திகரிக்கப்பட்டு சத்தியவான் வாய்க்காலில் விடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக மயிலாடுதுறை நகர்ப் பகுதியில் முக்கிய சாலைகளில் உள்ள பாதாள சாக்கடை குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு ஆங்காங்கே பெரும் பள்ளங்கள் ஏற்பட்டதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

கடந்த மார்ச் 7-ம் தேதி கச்சேரி சாலையில் ஏற்பட்ட பெரும் பள்ளத்தால் 23 அடி ஆழத்தில் பாதாளசாக்கடைக் குழாயிலிருந்து கழிவுநீர் வெளியேறியது. இதனால் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, நகரில் உள்ள அனைத்து நீரேற்று நிலையங்களிலும் பணிகள் நிறுத்தப்பட்டன. இதனால்  ஒட்டுமொத்த கழிவுநீரும் பழங்காவிரியில் விடப்பட்டு, குழாயை சரிசெய்யும் பணி நடைபெற்றது. சுமார் ஒரு மாதகாலம் பணிகள் நடைபெற்றுச் சீரமைக்கப்பட்டது. இதே போன்று ஜூலை 11-ம் தேதி மயிலாடுதுறை நகராட்சி அலுவலகம் அருகில் உள்ள தரங்கை சாலையில் மிகப் பெரிய பள்ளம் ஏற்பட்டது. ஆகஸ்ட் 29-ம் தேதி மயிலாடுதுறை கிளைச் சிறைச்சாலை அருகில் குழாயில் உடைப்பு ஏற்பட்டு மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டது.

மயிலாடுதுறை

செப்டம்பர் 7-ம் தேதி கூறைநாடு பகுதியில், பள்ளி அருகில் உள்ள ஆள்நுழைவு தொட்டியிலிருந்து சாக்கடை நீர் வழிந்து வந்ததால் அதிக அளவில் துர்நாற்றம் வீசிய நிலையில், கழிவு நீரைக் கடந்துதான் குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டது. இதனால் தொற்று நோய் பரவும் ஆபத்து உள்ளது. நவம்பர் 16-ம் தேதி மீண்டும் தரங்கை சாலையில் மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டு சாலை உள்வாங்கி அச்சத்தை ஏற்படுத்தியது. டிசம்பர் 7 மயிலாடுதுறை சப்ஜெயில் அருகே திடீர் பள்ளம் ஏற்பட்டு போக்குவரத்துக்கு இடையூறு செய்தது. இதை நகராட்சி நிர்வாகம் சீர்செய்து சரியாக ஒரு மாதத்தில் ஜனவரி 7 மயிலாடுதுறை - தரங்கம்பாடி சாலையில் கொத்த தெரு அருகே சாலையில் பள்ளம் ஏற்பட்டது.

இதே போன்று கடந்த 6 மாதங்களில் நகரின் மையப்பகுதிகளில் உள்ள பிரதான சாலைகளில் திடீர் திடீரென பள்ளம் ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, சாலைகள் முடக்கப்பட்டன. குழாய் உடைப்பு பணிகளைச் சீர்செய்ய பணிகள் மேற்கொள்ளப்பட்டதால் சாக்கடை கழிவு நீர் சாலைகளிலும், வாய்க்கால்களிலும் விடப்பட்டு துர்நாற்றம் வீசியதுடன், தொற்று நோய் பரவும் ஆபத்தும் ஏற்பட்டது. ``மாதத்தின் 7-ம் தேதி , மயிலாடுதுறை மக்களுக்கு ஏழரையைக் கொண்டு வந்து இதுவரை 7 இடங்களில் பாதாள சாக்கடையில் பள்ளம் ஏற்பட்டுள்ளது” என்று பள்ளங்களுக்கிடையே தாங்கள் வாழப் பழகிவிட்டதை அங்கலாய்ப்புடன் தெரிவிக்கின்றனர். 

பாதாள சாக்கடை குழாயில் ஒரு முறை உடைப்பு ஏற்பட்டால், அதைச் சரி செய்ய 5 லட்சம் வரை செலவாகிறது. நாகை மாவட்ட நிர்வாகம் பாதாளச் சாக்கடைத் திட்டத்தை மறு ஆய்வு செய்து அரசு நிதி ஒதுக்கி உடனடியாக சீரமைக்க வேண்டும். இல்லையென்றால் மயிலாடுதுறை நகராட்சியின் பணம் முழுவதும் பாதாளச் சாக்கடைக்கே செலவாகும் நிலை ஏற்படும். இதுகுறித்து நாகை மாவட்ட ஆட்சியர் ``இத்திட்டம் குறித்து ஆய்வு செய்ய சொல்லியிருக்கிறோம், விரைவில் தீர்வு காணப்படும்’’ என்றார். 

ஆனால், இது தொடர்பாகச் சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டுவரும் மக்கள் கூறுகையில், ``ஆய்வு செய்து முடிப்பதற்குள் இன்னும் பல பள்ளங்கள் விழுந்துவிடும். பாதாளச் சாக்கடைத் திட்டப் பராமரிப்பு பணிகளை முறையாகச் செய்ய அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை முறையான நடவடிக்கை எடுத்தபாடில்லை” என்கின்றனர். 

கிருஷ்ணமூர்த்திஇதுகுறித்து, மயிலாடுதுறை நகராட்சி ஆணையர் கிருஷ்ணமூர்த்தியிடம் பேசினோம், ``மயிலாடுதுறையில் பாதாளச் சாக்கடைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு 15 ஆண்டுகள் ஆகிவிட்டன. பாதாளச் சாக்கடைத் திட்டம் கட்டுமானத்தின்போது ஏர் வால்வு வைக்க வேண்டும், அது இல்லாமல் திட்டம் செயல்படுத்தப்பட்டதால் மண் உள் வாங்கி சில இடங்களில் சாலையில் பள்ளம் ஏற்படுகிறது. இந்தத் திட்டம் செயல்படுத்தியபோது சிமென்ட் பைப்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. சிமென்ட் பைப் செரிக்கும் தன்மை கொண்டது என்பதால் கழிவு நீர் அரித்து சிமென்ட் பைப் செரித்து இருப்பதால்தான் அடிக்கடி உடைப்பு ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க சிமென்ட் பைப்க்குப் பதில் இரும்புக்கலவை கலந்த டி.ஐ-பைப் பயன்படுத்தினால் உடைப்பைத் தவிர்க்கலாம். இதை மேலதிகாரி கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளோம்.

தமிழக அரசுக்குப் புதிய பாதாளச் சாக்கடைத் திட்டத்துக்கான வரைவு ஒன்று அளித்துள்ளோம். தமிழக அரசு ஒப்புதல் அளித்து நிதி வழங்கினால்தான் புதிய பாதாளச் சாக்கடைத் திட்டம் செயல்படுத்த வாய்ப்பு இருக்கிறது. எப்படியும் 100 கோடிக்கு மேல் நிதி தேவைப்படும். முழு நிதிக்கான ஒப்புதல் அரசிடமிருந்து வந்தால் பகுதி வாரியாகத் திட்டம் செயல்படுத்தப்பட்டு விரைவில் செயல்பாட்டிற்கு வரும்’’ என்று தெரிவித்தார்.

மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு மயிலாடுதுறை நகரில் நிலவி வரும் அவல நிலையை மாற்றிட இனியும் காலம் தாழ்த்த கூடாது. நகர் முழுவதும் பாதாளச் சாக்கடையை மறுசீரமைப்பு செய்யத் தேவைப்படும் தொகையைக் கணக்கிட்டு அதை நகராட்சிகளின் நிர்வாக ஆணையரின் கவனத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும். அதற்கான அனுமதி பெற்று உடனடியாக மறுசீரமைப்பு பணிகளைத் தொடங்க வேண்டும் என்பதே மக்களின் அவசர கோரிக்கையாக உள்ளது.


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close