`12,000 ரூபாய்தான் சம்பளம்... ஆனால், ராஜவாழ்க்கை' - இன்ஜினீயர் பகீர் வாக்குமூலம்! | tamilnadu engineer arrested for call center fraud case

வெளியிடப்பட்ட நேரம்: 12:19 (20/02/2019)

கடைசி தொடர்பு:12:19 (20/02/2019)

`12,000 ரூபாய்தான் சம்பளம்... ஆனால், ராஜவாழ்க்கை' - இன்ஜினீயர் பகீர் வாக்குமூலம்!

இன்ஜீனியர் மற்றும்  மோசடி கும்பலிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டவைகள்


`எனக்கு பன்னிரண்டாயிரம்தான் சம்பளம், ஆனால், என்னுடைய பாஸ் இன்சென்ட்டிவ்வாக கணக்கு பார்க்காமல் பணத்தை அள்ளித் தருவார். அதைக்கொண்டு ராஜவாழ்க்கை வாழ்ந்தேன்' என கால்சென்டர் மோசடியில் புதியதாக சிக்கிய இன்ஜினீயர் பகீர் வாக்குமூலம் அளித்துள்ளார். 

சென்னையில் கால்சென்டர் நடத்தி அப்பாவி பொதுமக்களிடம் குறைந்த வட்டிக்கு லோன் வாங்கித் தருவதாக ஆசைவார்த்தைகூறி மோசடி நடந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் செந்தில்குமார் மேற்பார்வையில் உதவி கமிஷனர் பிரபாகரன், இன்ஸ்பெக்டர் மீனா பிரியா தலைமையிலான போலீஸ் டீம், 7 பேரை கைது செய்தது. கைதானவர்கள் கொடுத்த வாக்குமூலத்தில் சென்னையில் 7 இடங்களில் கால்சென்டர்களை நடத்தியதாக கூறினர். அதன்மூலம்தான் அப்பாவி பொதுமக்களை தங்களின் வலையில் விழ வைத்து லட்சக்கணக்கில் மோசடி செய்ததாகவும் தெரிவித்தனர்.  மோசடிக் கும்பலுக்கு மூளையாக செயல்பட்டவரை போலீஸார் தேடிவந்தனர். இந்த நிலையில், அவரின் வலதுகரமாக செயல்பட்ட வியாசர்பாடியைச் சேர்ந்த ஜான்சன் (25) என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவரிடம் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இன்ஜீனியர் மோசடி கும்பல் நடத்திய கால்சென்டர் அலுவலகம்

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``கால் சென்டர்களின் நிர்வாக அலுவலகம் வடபழனியில் செயல்பட்டுள்ளது. அதில் இன்ஜினீயரிங் படித்த சென்னை கொண்டிந்தோப்பைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் முக்கிய பொறுப்பில் இருந்துள்ளார். இவர்தான் கால்சென்டரை நடத்துபவருக்கு வலதுகரமாக இருந்துள்ளார். இவரின் வங்கி அக்கவுண்டில்தான் ஏமாறுபவர்களின் தொகை செலுத்தப்பட்டுள்ளது. அடுத்து மனித வள மேம்பாட்டு அதிகாரியாக (ஹெச்.ஆர்) நாமக்கலைச் சேர்ந்த பூபதி இருந்துள்ளார். வெங்கடேசனுக்கு அடுத்தபடியாகப் போரூரைச் சேர்ந்த விக்னேஷ் என்பவர் இருந்துள்ளார். சோளிங்கநல்லூரைச் சேர்ந்த சதீஷ், கோடம்பாக்கத்தைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் மற்றும் சார்லஸ், திராவிட அரசன் ஆகியோரும் உள்ளனர். இவர்கள் ஏழு பேரையும்தான் கைதுசெய்துள்ளோம். 

கால்சென்டரின் உரிமையாளர் தலைமறைவாக இருக்கிறார். அவரைத் தேடிவருகிறோம். இந்த நிலையில் அவரின் விசுவாசமிக்க ஊழியராக இருந்த ஜான்சனை நேற்று கைது செய்துள்ளோம். அவரிடம் விசாரித்தபோது சென்னையில் மேலும் சேத்துப்பட்டு, ஆதம்பாக்கம், தரமணி ஆகிய 3 இடங்களில் கால்சென்டரை நடத்திவந்ததாகவும் கூறினார். தமிழகம் முழுவதும் கால்சென்டர்களை நிறுவி, அப்பாவி பொதுமக்களை ஏமாற்ற வேண்டும் என்ற திட்டத்தோடு இந்தக் கும்பல் செயல்பட்டுள்ளது. ஆனால் அதற்குள் மோசடிக் கும்பலைச் சேர்ந்தவர்கள் எங்களிடம் சிக்கிக் கொண்டனர். 

ஜான்சன், டிப்ளமோ இன்ஜினீயரிங் முடித்துவிட்டு கால்சென்டரில் கடந்த ஓராண்டுக்கு முன் வேலையில் சேர்ந்துள்ளார். ஜான்சனின் வேலை மற்றும் விசுவாசத்தைப்பார்த்த கால்சென்டரின் உரிமையாளர் அவரை தன்னுடைய வலதுகரமாக வைத்துக்கொண்டுள்ளார். ஜான்சன் மூலம்தான் கால்சென்டரை நடத்தியவர் பல காரியங்களைச் செயல்படுத்தியுள்ளார். கால்சென்டரின் உரிமையாளர் தன்னுடைய பெர்ஷனல் வேலைக்குகூட ஜான்சன் பயன்படுத்தியிருக்கிறார். 

இன்ஜீனியர் ஜான்சன்

மோசடி செய்யும் பணம், ஜான்சன் வங்கிக் கணக்கு மூலம்தான் கால்சென்டரின் உரிமையாளருக்குச் சென்றுள்ளது. ஜான்சனுக்கு மாதம் 12,000 ரூபாய்தான் சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் ஜான்சனின் விசுவாசத்தைப் பார்த்த கால்சென்டர் உரிமையாளர், இன்சென்டிவ் என்ற பெயரில் கணக்குப்பார்க்காமல் பணம் கொடுத்துள்ளார். இதனால் ஜான்சனும் ராஜவாழ்க்கை வாழ்ந்துள்ளார். 

எப்போதும் கால்சென்டரின் உரிமையாளருடனே ஜான்சன் இருந்துள்ளார். கால்சென்டர் உரிமையாளர் வெளியில் செல்லும்போது அவருக்கு பௌன்ஸராகவும் ஜான்சன் செயல்பட்டுள்ளார். ஜான்சனின் வங்கிக் கணக்குகளை ஆய்வு செய்துவருகிறோம். அதில், லட்சக்கணக்கான ரூபாய். கால்சென்டரின் உரிமையாளருக்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல் கிடைத்துள்ளது. தொடர்ந்து விசாரித்துவருகிறோம்" என்றனர். 

விசாரணையின்போது ஜான்சன், ``தன்னுடைய தவற்றை உணர்ந்தபடி பேசியுள்ளார். அதில் நான் தவறுசெய்துவிட்டேன். என்னை கடவுள்கூட மன்னிக்க மாட்டார். பாஸுக்கு உண்மையாக இருந்தேன். அவர் செய்த தவற்றுக்கு உறுதுணையாக இருந்ததால் சிக்கிக் கொண்டேன்" என்று கூறியுள்ளார். 


[X] Close

[X] Close