வீரர்கள் நினைவாக மரக்கன்றுகள் - அனைவரையும் நெகிழச்செய்த அரசு இசைக்கல்லூரி மாணவர்கள்! | Madurai music college student plant sapling for honor to CRPF jawans

வெளியிடப்பட்ட நேரம்: 12:33 (20/02/2019)

கடைசி தொடர்பு:12:33 (20/02/2019)

வீரர்கள் நினைவாக மரக்கன்றுகள் - அனைவரையும் நெகிழச்செய்த அரசு இசைக்கல்லூரி மாணவர்கள்!

மதுரை பசுமலை அரசு இசைக்கல்லூரியின் மாணவர்களும் ஆசிரியர்களும் ஒன்றுசேர்ந்து, புல்வாமா தாக்குதலில் வீர மரணமடைந்த இந்திய ராணுவ வீரர்கள் நினைவாகக் கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு காண்போர் அனைவரையும் நெகிழச் செய்துள்ளனர்.

தமிழகத்தில் சென்னை, திருவையாறு, கோவைக்கு அடுத்தபடியாக மதுரையில்தான் அரசு இசைக்கல்லூரி இயங்கிவருகின்றது. மதுரையிலிருந்து திருப்பரங்குன்றம் செல்லும் சாலையில் பசுமலைக்கு அருகே இந்தக் கல்லூரி அமைந்துள்ளது. கர்நாடக இசையும், கிராமிய இசையும் கற்றுத்தருவதால் ஆர்வமுள்ள மாணவர்கள் பலர் இணைந்து இசை பயில்கின்றனர். சுற்றிலும் வறண்ட மலைப் பகுதியில் அமைந்த இந்தக் கல்லூரி மட்டும் மரங்கள் சூழ்ந்து காணப்படுகிறது. காரணம், கல்லூரி மாணவர்கள்!

``மரங்களை நட்டு நினைவுகூர்வது எங்களது வழக்கம். அப்துல்கலாம் ஐயா மரணத்தின்போதுகூட நாங்கள் முப்பது மரங்களை நட்டோம். இப்போது, தங்கள் இன்னுயிரை நீத்து வீரமரணமடைந்த நம் வீரர்கள் நினைவாய் 46 மரங்கள் நட்டிருக்கிறோம்" என்கின்றனர், மாணவர்கள்.

மேலும் அவர்கள் கூறுகையில், ``நாங்கள் மட்டும் இல்லை. எங்களது ஆசிரியர்களும் இதற்கு உறுதுணையாக இருந்து பணி செய்கிறார்கள். நட்டு வைப்பதோடு முடிந்துவிடாமல், அதைப் பராமரிக்கவும் நாங்கள் தவறுவதில்லை" என்கின்றனர். தினசரி நீர் பாய்ச்சுவது உள்ளிட்டவற்றை மாணவர்கள் ஆசிரியர்கள் என எல்லோரும் சேர்ந்து செய்கிறார்கள். 

14.5 ஏக்கர் பரப்பளவில் அமைந்த கல்லூரி, 1988-ல் கால்கோலிட்டுத் தொடங்கப்பட்டது. முதல்வர் உள்ளிட்ட அனைவரும் கைகோத்து கல்லூரியின் பசுமை கெடாதவாறு வைத்திருக்கிறார்கள். ``இப்போவரைக்கும் ஆயிரம் மரங்கள் நட்டிருப்போம். எல்லா மரங்களுக்கும் செடிகளுக்கும் தண்ணீர் போய்ச் சேருவதில் சிக்கல் ஏற்படுகின்றது. இதனால், சொட்டுநீர்ப் பாசன வசதி மட்டும் தன்னார்வலர் குழுவினர் எவரேனும் எங்களுக்குச் செய்து தந்தால் போதும். நாங்கள் தொடர்ந்து பராமரிப்போம்" என, மாணவர்களின் சார்பில் கோரிக்கை வைக்கிறார், கல்லூரி முதல்வர் சி.டேவிட்.

புங்கை, பலா, கொய்யா, ஆலமரம், வேம்பு என வீரர்களுக்காய் மாணவர்கள் நட்டுவைத்த மரக்கன்றுகள் மீது பட்டு கடந்து வந்த ஈரக் காற்றில் வீர மொழி கேட்டது.

இசையும் பசுமையும் மெல்லிய ராகம் பாடி நினைவுகூர்கின்றன, நம் வீரர்களுக்கு.


[X] Close

[X] Close