மனம் மாறாத இன்ஜினீயரிங் மாணவி!- காவல் நிலையத்தில் பாசப் போராட்டம் | The fight between the engineering student and her parents

வெளியிடப்பட்ட நேரம்: 13:10 (20/02/2019)

கடைசி தொடர்பு:13:10 (20/02/2019)

மனம் மாறாத இன்ஜினீயரிங் மாணவி!- காவல் நிலையத்தில் பாசப் போராட்டம்

கோவையில் இன்ஜினீயரிங் படிக்கும் மாணவி ஒருவர், சென்னையில் பணியாற்றும் பெண் காவலருடன் நட்பில் இருக்கிறார். அவரை மீட்க வந்த பெற்றோருக்கும் மாணவிக்குமிடையே நடந்த பாசப்போராட்டம் காவல் நிலையத்தில் காவலர்களை கண்கலங்க வைத்தது. 

பாசப்போராட்டம்

ஈரோட்டைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரின் மகள் கோவையில் உள்ள இன்ஜினீயரிங் கல்லூரியில் தங்கி பொறியியல் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர், கடந்த 15 நாள்களுக்கு முன் சென்னையில் உள்ள தோழியைப் பார்ப்பதற்காக வந்தார். பிறகு அவர் கல்லூரிக்குச் செல்லவில்லை. 

இந்தத் தகவல் தெரியவந்ததும் மாணவியின் பெற்றோர் அவரை செல்போனில் தொடர்புகொண்டு பேசினர். அப்போது அவர் கோவை கல்லூரிக்குச் செல்ல விருப்பமில்லை என தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ராணுவ வீரர் மற்றும் அவரின் குடும்பத்தினர் சென்னை வந்தனர். மாணவி தங்கியிருக்கும் இடம் குறித்து விசாரித்தனர். அப்போது அவர், சென்னை  திருமங்கலத்தில் உள்ள தனியார் என்.ஜி.ஒ அமைப்புக்குச் சொந்தமான விடுதியில் தங்கியிருப்பது தெரியவந்தது. அங்கு சென்று மாணவியை தங்களுடன் அழைத்துச் செல்வதற்காக சென்றனர். ஆனால், பெற்றோருடன் செல்ல மாணவி மறுப்பு தெரிவித்தார். 

இதையடுத்து, விடுதி நிர்வாகிகள் மாணவியை பெற்றோருடன் அனுப்ப மறுத்தனர். இது குறித்து மாணவியின் பெற்றோர் திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதில், தன்னுடைய மகளுக்கும் ஜெ.ஜெ.நகர் காவல் நிலையத்தில் பணியாற்றும் பெண் காவலர் ஒருவருக்கும் நட்பு உள்ளது. அந்த நட்பின் காரணமாகத்தான் என் மகள் கல்லூரிக்குச் செல்ல மறுப்பு தெரிவிக்கிறார். அதோடு எங்களுடன் வரவும் அவர் விரும்பவில்லை. எனவே, பெண் காவலரின் நட்பை துண்டித்து என்னுடைய மகளை மீட்டுத்தாருங்கள்' என்று குறிப்பிட்டிருந்தனர். 

இதையடுத்து திருமங்கலம் போலீஸார் மாணவியிடம் தனியாக விசாரணை நடத்தினர். அதுபோல பெண் காவலரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது இருவருக்கும் உள்ள நட்பு குறித்த தகவல் வெளியானது. விசாரணைக்குப் பிறகு மாணவியும் பெண் காவலரும் விடுவிக்கப்பட்டனர். அப்போது விசாணையின்போது இருவரும் தவறாமல் ஆஜராக வேண்டும் என்று போலீஸார் சொல்லி அனுப்பியுள்ளனர். தொடர்ந்து மாணவி, சென்னையில் உள்ள விடுதிக்குச் சென்றுவிட்டார். பெண் காவலர் வழக்கம்போல தன்னுடைய பணிக்கு திரும்பிவிட்டார். 

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``பெண் காவலருடன் நெருக்கமான நட்பில் இருக்கும் மாணவி, தன்னுடைய பெற்றோருடன் செல்ல விரும்பவில்லை. அவருக்கு அறிவுரை கூறியபோதும் அவர் கல்லூரிக்குச் செல்ல மனமில்லை என்று கூறினார். இதையடுத்து, அந்த மாணவிக்கு தொடர்ந்து கவுன்சலிங் அளிக்க திட்டமிட்டுள்ளோம். அதோடு சம்பந்தப்பட்ட பெண் காவலரை எச்சரித்து அனுப்பியுள்ளோம். மாணவியின் இந்த நட்பு விவகாரம் அவரின் பெற்றோருக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. மகளை நல்வழிப்படுத்த பெற்றோர் விரும்புகின்றனர். ஆனால், மாணவியோ எதையும் கேட்கும் மனநிலையில் இல்லை" என்றனர். 

திருமங்கலம் காவல் நிலையத்தில் மாணவியிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது எப்படியும் மகள் தன்னுடன் வீட்டுக்கு வந்துவிடுவாள். வழக்கம்போல கல்லூரிக்குச் செல்வாள் என மாணவியின் பெற்றோர் நம்பிக்கையுடன் காத்திருந்தனர். ஆனால் மாணவியின் மனம் மாறவில்லை. இதனால் அவரின் பெற்றோர் கண்ணீருடன் வீட்டுக்கு வந்திடும்மா என்று கூறினர். ஆனால் அதை மாணவி கண்டுகொள்ளவில்லை. காவல்நிலையத்தில் நடந்த பாசப்போராட்டம் அங்குள்ள காவலர்களை கண்கலங்க வைத்தது. ஆனால், மாணவி மட்டும் எதையும் கண்டுக்கொள்ளவில்லை. விசாரணைக்காக வந்த மாணவி, பெற்றோரிடம் வேண்டுகோளை ஏற்றுக்கொள்ளாமல் வெளியேறிவிட்டார். 

கோவை இன்ஜினீயரிங் மாணவியுடன் சென்னை பெண் காவலர் ஒருவருக்கு இடையில் உள்ள நட்பு விவகாரம் காவலர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


[X] Close

[X] Close