ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயில் பொங்காலை விழா!- லட்சக்கணக்கான பெண்கள் வழிபாடு | Tiruvandram attukal bahavathi Amman Temple held in grand manner

வெளியிடப்பட்ட நேரம்: 14:00 (20/02/2019)

கடைசி தொடர்பு:14:00 (20/02/2019)

ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயில் பொங்காலை விழா!- லட்சக்கணக்கான பெண்கள் வழிபாடு

திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் லட்சக்கணக்கான பெண்கள் கலந்துகொண்ட பொங்காலை விழா கோலாகலமாக நடந்தது.

திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள ஆற்றுகால் பகவதி அம்மன் கோயில் பெண்களின் சபரிமலை என அழைக்கப்படுகிறது. ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயில் பொங்காலை விழா கடந்த 12-ம் தேதி தொடங்கியது. 9-ம் நாள் விழாவான இன்று முக்கிய நிகழ்வாக லட்சக்கணக்கான பெண்கள் கலந்துகொண்ட பொங்காலை வழிபாடு நடந்தது. இதில் கேரளம், தமிழகம் மட்டுமல்லாது நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் பொங்கலிட்டு வழிபட்டனர்.

வெளிநாடுகளைச் சேர்ந்த பெண்களும் ஆர்வமுடன் பங்கெடுத்தனர். லட்சக்கணக்கான பெண்கள் பொங்கலிட்டதால் கேரள தலைநகர் திருவனந்தபுரம் முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. பிரதான சாலைகளில் பெண்கள் பொங்கலிடுவதற்கு வசதியாக போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது. கோயில் சிறப்பு பூஜைகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து கோயில் முன்பு வைக்கப்பட்டிருந்த பண்டார அடுப்பு என்ற பெரிய அடுப்பில் தந்திரி பரமேஸ்வரன் வாசுதேவ பட்டாதிரி காலை 10.30 மணிக்கு தீ மூட்டி பொங்கல் வழிபாட்டை தொடங்கிவைத்தார். தொடர்ந்து செண்டைமேளம் முழங்கப்பட்டதை அடுத்து லட்சக்கணக்கான பெண்கள் பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனர்.

பாதுகாப்பு பணியில் 4,000 காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். 1997-ம் ஆண்டு நடந்த பொங்கல் விழாவில் 17 லட்சம் பெண்கள் பொங்கலிட்டது கின்னஸ் சாதனையாக அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு 2004-ம் ஆண்டு 25 லட்சம் பெண்கள் பொங்கலிட்டது பழைய கின்னஸ் சாதனையை முறியடித்தது. கடந்த ஆண்டு 40 லட்சம் பெண்கள் கலந்துகொண்டதால் இந்த ஆண்டு 45 லட்சம் பெண்கள் கலந்துகொண்டு பொங்கலிடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. ஆற்றுக்கால் பொங்காலை விழாவை முன்னிட்டு இன்றும், நாளையும் திருவனந்தபுரம் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.


[X] Close

[X] Close