``எங்களோடு ஒரு நாளைக்குத் தண்ணி தூக்குங்க!’’ - தம்பிதுரையைத் தப்பியோட வைத்த கரூர் பெண்கள் | Thambidurai didn't respond properly to the complaints of Karur women regarding water scarcity

வெளியிடப்பட்ட நேரம்: 16:31 (20/02/2019)

கடைசி தொடர்பு:11:49 (16/03/2019)

``எங்களோடு ஒரு நாளைக்குத் தண்ணி தூக்குங்க!’’ - தம்பிதுரையைத் தப்பியோட வைத்த கரூர் பெண்கள்

``இது எரியிற நெருப்பில் எண்ணெய் ஊற்றிய செயல். குடிநீருக்காக அல்லாடும் பெண்கள் தங்கள் கஷ்டத்தைச் சொன்னா, அதற்குப் பதில் சொல்றதுதான் முறை. அதைவிடுத்து, அந்தப் பெண்களை நக்கல் செய்த தம்பிதுரையின் பேச்சு கண்டிக்கத்தக்கது."

``எங்களோடு ஒரு நாளைக்குத் தண்ணி தூக்குங்க!’’ - தம்பிதுரையைத் தப்பியோட வைத்த கரூர் பெண்கள்

ரூர் நாடாளுமன்றத் தொகுதியில் மக்களிடம் மனு வாங்கப்போன மக்களவைத் துணை சபாநாயகர் தம்பிதுரையிடம், பெண்கள் குடிநீர்ப் பிரச்னையைச் சொல்லிக் குமுறினார்கள். அப்போது, ஏதோதோ சொல்லிச் சமாளித்துவிட்டு, அங்கிருந்த நகர்ந்து வந்த தம்பிதுரை, கரூரில் நடைபெற்ற ஒரு விழாவில், `` ’இன்னைக்கே தண்ணீர் வேணும்’னு ஓர் ஊர்ல கேட்டாங்க. அப்படின்னா, `குடத்துல நானே தண்ணீர் தூக்கிட்டு வந்து தர்றேன்’னு சொல்லிட்டு வந்தேன்’’ என்று அந்தப் பெண்களுக்கு எதிராக நக்கலாகப் பேசிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இதுவரை பி.ஜே.பி-க்கு எதிராக அதிரடியாகப் பேசி வந்த தம்பிதுரை, தண்ணீர் கேட்ட தொகுதிப் பெண்களுக்கு எதிராகக் கேலியும் கிண்டலும்செய்து பேசிய விவகாரம் தொகுதி மக்களிடம் கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை மனதில் வைத்து, கடந்த சில மாதங்களாகவே கரூர் தொகுதியில் உள்ள கிராமங்களுக்கு, `மக்களைத் தேடி..’ என்ற மனு வாங்கும் நிகழ்ச்சிகளுக்குப் போய்வருகிறார் தம்பிதுரை. அந்த வகையில், இரண்டு தினங்களுக்கு முன்பு பவித்திரம் ஊராட்சிப் பகுதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது, காலிக் குடங்களோடு அவரை முற்றுகையிட்ட பெண்களில் ஒருவர், ``எங்க ஊர்ல தண்ணீர் பிரச்னை தலைவிரிச்சாடுது. குடிதண்ணிக்காகத் தினமும் ஒரு கிலோமீட்டர் தூரம்வரை இந்த வயசான காலத்துல அலையுறோம். ஒருநாள் நீங்க எங்களோட வந்து தண்ணி தூக்கிப் பாருங்க. எங்க கஷ்டம் தெரியும்’’ என்றார். அதற்குப் பதில் சொல்ல முடியாமல் தவித்த தம்பிதுரை, ஒருவழியாக, ``காவிரி தண்ணி கிடைக்க ஏற்பாடு பண்றேன்’’ என்று சொல்லிச் சமாளித்துவிட்டு அங்கிருந்து சென்றார். 

கரூர் பவித்திரம் ஊராட்சியில் தம்பிதுரையை முற்றுகையிட்ட பெண்கள்...

இந்நிலையில், நேற்று கரூர் ரயில்வே நிலையம் அருகே அம்மா சாலை அமைக்கும் பணியைத் தொடங்கிவைக்கும் விழா நடந்தது. அந்த விழாவில் கலந்துகொண்ட தம்பிதுரை, குடிநீர் கேட்டு தனக்குக் குடைச்சல் கொடுத்த பவித்திரம் ஊராட்சிப் பெண்ணைப் பற்றி நக்கலும் நையாண்டியுமாகப் பேசினார். அந்த விழாவில் பேசிய தம்பிதுரை, ``கரூர் மாவட்டத்துல காவிரி, அமராவதி ஆறுகள் ஓடுகின்றன. ஆனா, இந்த மாவட்டத்துல குடிக்கத் தண்ணி இல்லை. இங்கிருந்து ராமநாதபுரம், திண்டுக்கல்னு பல மாவட்டங்களுக்குக் குடிநீர் போவுது. இந்த அவலநிலையை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் சொன்னோம். அதன் விளைவாக, இப்போது குடிநீர்த் திட்டங்கள் கரூருக்குக் கிடைச்சிருக்கு. ஓர் ஊர்ல என்னிடம் ஒரு லேடி, `எங்க ஊருக்குக் காவிரி தண்ணி வரலையே'ன்னாங்க. அதுக்கு நான், `இப்பதான் எல்லாம் ரெடி ஆகிட்டு இருக்கு’னு சொன்னேன்.

ஆனா அந்தம்மா, `இன்னைக்கே எங்களுக்குத் தண்ணி வேணும்'னு ஒத்தக்கால்ல நின்னாங்க. `இப்படிக் கேட்டா, நான் என்ன பண்றது’னு சொன்னதுக்கு, `எனக்கு இப்பவே தண்ணி வேணும்’னு அந்தம்மா அடம்பிடிச்சாங்க. அதனால, `ஒரு குடத்துல தண்ணியை நானே பிடிச்சுக்கொண்டு வந்து தர்றே’னு சொன்னேன். அந்தம்மா ஈஸியா கேட்டுட்டாங்க. `என் தொகுதியில் எனக்கு 10,000 கிராமங்கள் இருக்கு. அப்படி 10,000 கிராமங்களுக்கும் இப்படிக் குடத்துல தண்ணி எடுத்துட்டுப் போனா என் நிலைமை என்ன ஆகும்? எல்லாக் கிராமத்துக்கும் தண்ணீர் கொடுக்கணும்னா 5 லிருந்து 10 வருஷங்கள் ஆகும். எல்லாக் கிராமத்துக்கும் தண்ணீர் கொண்டுபோய்க் கொடுக்க முடியாது’னு சொல்லிட்டு வந்தேன். இதுக்கு ஒரே தீர்வு திட்டங்கள்தான். அதனாலதான் முதல்வர், குடிநீர்த் திட்டத்துக்கு 250 கோடி ரூபாய் ஒதுக்கியிருக்கிறார். கரூர் மாவட்டத்தில் அரவக்குறிச்சி, க.பரமத்தி, தாந்தோணிக்கெல்லாம் குடிநீர்த் திட்டத்தை முதல்வர் அறிவிச்சிருக்கார்.

இப்படித் திட்டங்களைச் செயல்படுத்தத்தான் நாங்க இருக்கிறோம். எங்களைப் பார்த்து, `என்னா செஞ்சீங்க’னு கேட்டா எப்படி? அதே பெண்மணி, `எங்க ஊர்ல தண்ணி வரலையே பார்த்தியா’னு கேட்டாங்க. நான் அதுக்கு, `ஆமாம், தண்ணி வரலை’ன்னேன். `என்ன செய்ய போறே’னு கேட்டாங்க. `தண்ணி கொடுக்க ஏற்பாடு பண்ணுறேன்’னு அதுக்குப் பதில் சொன்னேன். ஆனா அதுக்கு அந்தம்மா, `எப்படித் தண்ணி கொடுக்கப் போறே’னு கேட்டாங்க. `எங்கேயாவது போர் போடலாமே’னு சொன்னேன். ஆனா, அதோடு விடாத அந்த லேடி, `சரி, எங்கே போர் போடுறது’னு கேட்டாங்க. `ஊர்க்காரங்க உங்களுக்குத்தானே தெரியும். எந்த இடத்துல போர் போடலாம்’னு கேட்டேன். ஆனா, நக்கலாகச் சிரித்த அந்தம்மா, `நீயெல்லாம் ஒரு எம்.பி. போர் போடுற இடம்கூடத் தெரியாத நீயெல்லாம் ஒரு எம்.பி-யா? நீ போய் சென்னையில, இல்லைன்னா டெல்லியில இருந்துக்குற. நான் இங்க தண்ணியில்லாம கஷ்டத்தோட உட்கார்ந்திருக்கிறதா'னு கேட்டாங்க. இதுக்கு நான் எப்படிப் பதில் சொல்றது? 

தம்பிதுரை

`இது ஜனநாயக நாடு. கேள்வி கேட்க எல்லோருக்கும் உரிமை இருக்கு'னு அதைச் சாதாரணமா விட்டுட்டேன். அதோட அந்தம்மாகிட்ட, `சரிம்மா... நான் இனிமே தெரிஞ்சுக்குறேன். நான் படிச்சது பொருளாதாரம்தான். போர்வெல் எங்கே போடலாம்னு சொல்றதுக்காக, இனிமேல் மண்ணியல் படிச்சுட்டு வர்றேன். அதைப் படிக்கக் கொஞ்சம் டைம் கொடுங்க’னு சொன்னேன். கரூர்ல வறட்சி அதிகமா இருக்கு; மழையே பெய்யலை. அப்புறம், குடிநீர்ப் பிரச்னை வராமல் என்ன செய்யும்? குடிநீர்ப் பிரச்னையைத் தீர்க்கத்தான் ஜெயலலிதா அமைத்த இந்த ஆட்சியின் முதல்வரும் துணை முதல்வரும் பல திட்டங்களை அறிவிச்சுருக்காங்க. அந்தத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்குள் பிரச்னை பண்ணினால் நான் என்ன பண்ண முடியும்?’’ என்று முடித்தார்.

இந்நிலையில், குடிநீர் கேட்ட பெண்களிடம் பதில் சொல்ல முடியாமல் தப்பித்து வந்த தம்பிதுரை, இன்னொரு கூட்டத்தில் அந்தப் பெண்களைக் கேலிசெய்து பேசியிருப்பது அவ்வூரில் தம்பிதுரைக்கு எதிராகப் பிரச்னையைக் கிளப்பியிருக்கிறது. இதுகுறித்து அந்த ஊர்ப் பெண்கள், ``இது எரியிற நெருப்பில் எண்ணெய் ஊற்றிய செயல். குடிநீருக்காக அல்லாடும் பெண்கள் தங்கள் கஷ்டத்தைச் சொன்னா, அதற்குப் பதில் சொல்றதுதான் முறை. அதைவிடுத்து, அந்தப் பெண்களை நக்கல் செய்த தம்பிதுரையின் பேச்சு கண்டிக்கத்தக்கது. உடனே, அவர் மன்னிப்புக் கேட்கணும். இல்லைன்னா, அவருக்கு எதிராகப் போராட்டம் வெடிக்கும்’’ என்றனர். 


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close