`தமிழிசைக்கு சீட் கொடுக்கக் கூடாது!' - பா.ஜ.க-வில் வலுக்கும் எதிர்ப்பு | don't allocate seat to tamilisai, urges bjp leaders

வெளியிடப்பட்ட நேரம்: 15:24 (20/02/2019)

கடைசி தொடர்பு:17:05 (20/02/2019)

`தமிழிசைக்கு சீட் கொடுக்கக் கூடாது!' - பா.ஜ.க-வில் வலுக்கும் எதிர்ப்பு

தமிழக பா.ஜ.க.வுக்காக நாள்தோறும் சொல்லடியும், மீம்ஸ் அடியையும் வாங்கி கொண்டிருப்பவர் தமிழிசை சவுந்தரராஜன். அவருக்கே சீட் கொடுக்க வேண்டாம் என்று பா.ஜ.க.வுக்குள் கண்டன குரல்கள் எழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழிசை

அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க.வுக்கு ஐந்து தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கன்னியாகுமரி, திருச்சி, தென்சென்னை, நீலகிரி ஆகிய தொகுதிகள் பேச்சுவார்த்தையில் உள்ளன. திருப்பூரை தந்தால் கோயம்புத்தூர் கிடையாது என்று அ.தி.மு.க. முரண்டுப் பிடிக்கிறது. இதனிடையே, தென்சென்னை  தொகுதியில் போட்டியிடலாம் என்று பா.ஜ.க. தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கருதுகிறாராம். அதற்குக் கட்சிக்குள்ளேயே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து நம்மிடையே பேசிய பா.ஜ.க. மூத்த தலைவர்கள் சிலர், "மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும், தமிழிசை செளந்தரராஜனும் நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். கன்னியாகுமரி தொகுதியை பொன்னாருக்கு ஒதுக்குவது என்று முடிவாகியுள்ளது. இந்நிலையில், அதே நாடார் சமூகத்திலிருந்து மற்றொருவருக்கும் சீட் கொடுக்க மற்ற பா.ஜ.க. தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இன்னபிற சமூகத்தவருக்கும் வாய்ப்பளிக்க வேண்டியிருப்பதால், தமிழிசைக்கு சீட் ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது" என்றனர்.

பொன் ராதாகிருஷ்ணன்

கடந்த ஆறு மாதங்களாக தென்சென்னை தொகுதிக்குள் நடைபெறும் திருமணம், கோயில் விஷேசங்கள் என்று எதையும் 'மிஸ்' செய்யாமல், அத்தொகுதியை குறிவைத்து தமிழிசை தேர்தல் பணியாற்றி வருகிறார். சிவகங்கை கிடைக்காத அதிருப்தியில் உள்ள ஹெச்.ராஜா, தென்சென்னை தொகுதிக்கு குறிவைத்து காய் நகர்த்தி வந்தார். அதே தொகுதியை பா.ஜ.க. மாநில செயலாளர் கே.டி.ராகவனும் கேட்டு வருகிறார். 'ஹெச்.ராஜாவுக்கு மட்டும் சீட் கொடுத்துவிடாதீர்கள், தோற்றுவிடுவோம்' என்று அ.தி.மு.க.வே வேண்டுகோள் விடுக்கும் அளவுக்கு அவரின் தடாலடிகள் அமைந்துவிட, மனிதர் கடும் அப்செட். கூட்டணி அறிவிப்பு நிகழ்ச்சிக்குக் கூட தலை காட்டாமல் பெங்களூரு பறந்துவிட்டார்.

இப்படி பாஜகவின் முக்கியத் தலைகள் பலரும் தென்சென்னையைக் குறிவைத்துக் கொண்டிருந்தநிலையில், அதிமுக தரப்பில் ‘தென்சென்னையைத் தரமுடியாது’ என்று திட்டவட்டமாக மறுத்து, வடசென்னையைக் கொடுத்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. அங்கும் இவர்களில் யாருக்கும் வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகமாகவுள்ளது. அங்கு நாடார் சமுதாய மக்களின் வாக்குகள் அதிகம் இருப்பதால், அதே சமுதாயத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர்,  பாஜக சார்பில் நிறுத்தப்படும் வாய்ப்புள்ளதாக பாஜக வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்நிலையில், பா.ஜ.க.வின் முகமாகப் பார்க்கப்படும் தமிழிசைக்கும் சீட் ஒதுக்கக் கூடாது என்று அவரது கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இவ்விவகாரத்தை அமித் ஷாவிடமே நேரடியாகப் பேசி முடித்துக் கொள்வது என்று தமிழிசை முடிவெடுத்துள்ளாராம்.

 


[X] Close

[X] Close