பஸ் கட்டணத்தை உயர்த்தியது யார்? - மழுப்பும் போக்குவரத்து அதிகாரிகள்; குமுறும் திருவள்ளூர் பயணிகள் | Thiruvallur people worried about hike of bus ticket price

வெளியிடப்பட்ட நேரம்: 17:20 (20/02/2019)

கடைசி தொடர்பு:19:19 (20/02/2019)

பஸ் கட்டணத்தை உயர்த்தியது யார்? - மழுப்பும் போக்குவரத்து அதிகாரிகள்; குமுறும் திருவள்ளூர் பயணிகள்

பல்வேறு தொழிற்சாலைகள், தனியார் நிறுவனங்கள் மற்றும் சிப்காட் போன்ற தொழில் பூங்காக்களைக் கொண்டதுதான் திருவள்ளூர் - செங்கல்பட்டு வழித்தடம். தினமும்  ஆயிரக்கணக்கான சிறு, குறு தொழிலாளர்கள் காலை, மாலை மற்றும் இரவு என பல பிரிவுகளில் உரகடம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வேலை செய்துவருகிறார்கள். தொழிலாளர்களும், விவசாயிகளும் திருவள்ளூர்- செங்கல்பட்டு செல்லும் அரசுப் பேருந்தான 82C ஐத்தான் அதிகமாகப் பயன்படுத்துகின்றனர். திருவள்ளூர் பணிமனையிலிருந்து இயக்கப்படும் இந்தப் பேருந்தில், திருவள்ளூரில் இருந்து செங்கல்பட்டு  வரை பயணிக்க  47 ரூபாய்  கட்டணமும், ஸ்ரீபெரும்புதூரில் இருந்து உரகடம்  வரை பயணிக்க  11 ரூபாய்  கட்டணமும்  வசூலிக்கப்பட்டது.

 

ஆனால்  தற்போது , எந்தவித  முன்னறிவிப்புமின்றி இந்த இரு வழித்தடத்தின் கட்டணங்களும் உயர்த்தப்பட்டுள்ளன. அதாவது, ஸ்ரீபெரும்புதூர்- உரகடம் வரை 11 ரூபாயில் இருந்து 15 ரூபாய்  ஆகவும், திருவள்ளூர் - செங்கல்பட்டு வரை 47 ரூபாயில் இருந்து 50 ரூபாய் ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. திடீரென கட்டணம் உயர்த்தப்பட்டதால், மிகுந்த சிரமத்துக்கு உள்ளான பயணிகள், ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம்  முறையிட்டுள்ளனர். பேருந்து  ஓட்டுநரும், நடத்துநனரும் திருவள்ளூர் பணிமனையில் கூறியதையே  நாங்கள் செய்கிறோம், நீங்கள் எதுவாக  இருந்தாலும் டிப்போ மேலாளரிடம் கேளுங்கள் என்று கறாராகக் கூறினர். சிலர் கோபத்தில் பேருந்தைவிட்டு கீழே  இறங்கியுள்ளனர்.

இதுபற்றி பயணிகள்  கூறுகையில், "தொழிலாளர்கள் அதிகமாகப் பயணம் செய்யும் இந்த வழித்தடத்தில், மொத்தம் 6 பேருந்துகள் (82C) இயக்கப்படுகின்றன. MTC பேருந்துகளின்  கட்டணம் அதிகமாக இருப்பதால், பெரும்பாலானோர் 82C பேருந்தையே பயன்படுத்துவதுண்டு. ஆனால்,  இந்தப் பேருந்துகளில் நடத்துநர்கள் முறையாக  சில்லறை  தருவதில்லை என்ற  குற்றச்சாட்டு எழுவதோடு, அவ்வப்போது வாக்குவாதமும் நடைபெறுகின்றன. இதனால்தான் இந்த இருவழிதடத்துக்கு மட்டும் பேருந்துக்  கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என்ற சந்தேகமும் எழுகிறது" என்றனர் 

இதுபற்றி தினமும் இந்ப்த பேருந்தில் பயணம் செய்யும் தொழிலாளர்  அருணிடம்  பேசியபோது, "கூலித் தொழிலாளிகள் அதிகம் பயணம் செய்யும் இந்தப் பேருந்தில், திடீரென கட்டணம்  உயர்த்துவது  கண்டிக்கத்தக்கது. இதனால்  பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், சில்லறை  பிரச்னைகளுக்காக இந்த பேருந்துக் கட்டணம்  மாற்றி அமைக்கப்பட்டுள்ளது  எனில், இது தவறான  முன்னுதாரமாகிவிடும்’’ என்கிறார். ``கட்டணத்தை  விரைவில் மாற்றி அமைக்க வேண்டும்'' என்றும்  வலியுறுத்துகிறார்.

இதுபற்றி பேருந்து  ஓட்டுநர் கோபியிடம் கேட்டபோது, ``பேருந்துக் கட்டணம் மாற்றி அமைக்கப்பட்ட செய்தி எங்களுக்கே முதலில் தெரியாதுதான். திடீரென அமல்படுத்தியுள்ளனர். முதல்நாள் பயணிகள்  அனைவரும்  முறையிட்டனர். ஆனால் இரண்டாம், மூன்றாம் நாள்களில் யாரும் கேட்கவில்லை. மறந்துவிட்டனர். மேலும், விவரங்களுக்கு  நீங்கள்  திருவள்ளூர் பணிமனையைத்தான்  அணுக வேண்டும்" என்றார்.

இதுபற்றி திருவள்ளூர் பணிமனை மேலாளர் பாஸ்கரனிடம் பேசியபோது, ``திருவள்ளூர் பணிமனை போக்குவரத்து அலுவலகம் விழுப்புரம்  மண்டலத்தின்  கட்டுப்பாட்டில் உள்ளது. தன்னிச்சையாக எங்களால் எந்த முடிவும் எடுக்க முடியாது. மேலிடத்திலிருந்து வரும் உத்தரவை நாங்கள் நினைவேற்ற மட்டுமே செய்கிறோம் என்று கூறிய அவர், `வேறு  எதையும் பேசவில்லை' என்றார்.

விழுப்புரத்தில் உள்ள போக்குவரத்துக்கு  அலுவலகத்தின் பொதுமேலாளரிடம் பேசினால், கமர்ஷியல் ஆபரேட்டரிடம் (commercial operator) பேசச் சொல்கிறார். கமர்ஷியல் ஆபரேட்டர் குணசேகரனிடம் பேசியபோது, "என்னவென்று  பார்க்கிறேன்'' என கூறினார். இதுவரை எந்தவித பதிலும் இல்லை. நடவடிக்கையும்  இல்லை.

இத்தகைய விலையேற்றத்தால், தொழிலாளர்கள் மிகவும் பாதிப்படைகின்றனர் என்பதைப்  புரிந்துகொண்டு, பேருந்துக்  கட்டணத்தை முன்பு இருந்தது போல மாற்றியமைக்க வேண்டும் என்பது பயணிகள்  அனைவரின்  கோரிக்கையாக  உள்ளது 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close