பணியில் மெத்தனம்: வி.ஏ.ஓ-க்களுக்கு வாட்ஸ் அப் மூலம் எச்சரிக்கை விடுத்த ஆட்சியர்! | Nellai collector issues warning to VAOs for not doing their duty properly thorough whats app

வெளியிடப்பட்ட நேரம்: 18:35 (20/02/2019)

கடைசி தொடர்பு:18:35 (20/02/2019)

பணியில் மெத்தனம்: வி.ஏ.ஓ-க்களுக்கு வாட்ஸ் அப் மூலம் எச்சரிக்கை விடுத்த ஆட்சியர்!

மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட விவசாயிகளுக்கான உதவித் தொகைக்கு விண்ணப்பம் செய்பவர்களை அலட்சியப்படுத்தும் வி.ஏ.ஓ-க்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வாட்ஸ் அப் மூலம் நெல்லை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ள ஆடியோ வைரலாகப் பரவி வருகிறது. 

மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர்சதீஷ்

மத்திய பட்ஜெட் அறிவிக்கப்பட்டபோது, நாடுமுழுவதும் 5 ஏக்கருக்குள் நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் பயனடையும் வகையிலான ``கிஸான் சம்மான் யோஜனா’ என்கிற திட்டம் பற்றிய அறிவிப்பு வெளியானது. அதன்படி விவசாயிகள் நலனுக்காக வருடத்துக்கு ரூ.6,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ரூ.2,000 வீதம் மூன்று தவணைகளாக இந்தத் தொகை வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

அதனால், இந்தத் தொகையைப் பெறுவதற்கான வழிகாட்டு முறைகள் அறிவிக்கப்பட்டதுடன் இதற்குத் தகுதியான நபர்களைத் தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கிராமங்களில் வி.ஏ.ஓ அலுவலகங்களில் இதற்கான விண்ணப்பங்களை விவசாயிகள் வழங்கி வருகிறார்கள். இந்த நிலையில் சில கிராம நிர்வாக அலுவலர்கள் இந்தப் பணியில் மெத்தனப் போக்குடன் செயல்படுவதாக நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷூக்குத் தகவல் தெரிய வந்ததால் அவர் வி.ஏ.ஓ-க்களை எச்சரித்து ஆடியோ வெளியிட்டுள்ளார்.

அதில், ``நான் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலேயே கிஸான் சம்மான் யோஜனா திட்டத்தின் கீழ் தினமும் நிறைய மனுக்களைப் பெறுகிறேன். இப்போது கூட இரண்டு வயதானவர்கள் மனுக்களுடன் வந்தார்கள். அவர்கள் மனுவை எழுதி வைத்திருக்கிறார்கள். ஆனால் அதைப் பெற வேண்டிய வி.ஏ.ஓ அவர்களிடமிருந்து அதைப் பெறவில்லை. வி.ஏ.ஓ அலுவலகம் போனால் இரண்டு நாள்களாக வி.ஏ.ஓ இல்லை எனச் சொல்லி இருக்கிறார்கள். 

விண்ணப்பங்களைப் பெற வேண்டியது வி.ஏ.ஓ-க்களின் பணி. அதைச் செய்யாதது ஏற்றுக்கொள்ள முடியாதது. எந்தச் சமாதானத்தையும் ஏற்க முடியாது. அந்த வயதானவர்கள் ஆர்.ஐ அலுவலகம், தாசில்தார் அலுவலகம் என எல்லாப் பக்கமும் போய்விட்டு கடைசியாக என்னிடம் வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு 80 வயது இருக்கும். இந்த ஒரு சின்ன வேலையைக் கூட செய்ய முடியாமல் இருப்பது மோசமானது.

ஆட்சியர் ஷில்பா பிரபாகர்சதீஷ்

அனைத்து வி.ஏ.ஓ-க்களும் அவர்களுக்கான பணியிடத்தில் இருக்க வேண்டியது அவசியம். அதை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும். காலை முதல் மாலை வரை அனைத்து வி.ஏ.ஓ-க்களும் அலுவலகத்திலிருந்து விண்ணப்பங்களைப் பெற வேண்டும். வி.ஏ.ஓ-க்கள் சரியாகச் செயல்பட்டு இருந்தால், அங்கேயே பல வருடங்களாகக் குடியிருக்கும் அந்த நபர்கள் அவரிடமே விண்ணப்பத்தைக் கொடுத்திருக்க முடியும். 

நான் இனிமேல் கிராமங்களில் அதிரடி சோதனை நடத்த இருக்கிறேன். நான் வரும்போது அலுவலகத்தில் வி.ஏ.ஓ இருக்கவில்லை என்றால் உடனடியாக அவர்களை அந்த இடத்திலேயே சஸ்பெண்டு செய்து விடுவேன். அப்படி சஸ்பெண்டு ஆகிறவர்கள் பற்றி நான் கவலைப்பட மாட்டேன்’’ என எச்சரித்துள்ளார். இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. 
 


[X] Close

[X] Close