``சொல்லப்படுகிறது; பேசப்படுகிறது; நம்பப்படுகிறது’’ - பா.ம.க பலம் குறித்து முத்தரசன் | ''It is said; Spoken; Believed to be" - Comrade Era. Mutharasan teases PMK

வெளியிடப்பட்ட நேரம்: 19:40 (20/02/2019)

கடைசி தொடர்பு:11:51 (16/03/2019)

``சொல்லப்படுகிறது; பேசப்படுகிறது; நம்பப்படுகிறது’’ - பா.ம.க பலம் குறித்து முத்தரசன்

``சொல்லப்படுகிறது; பேசப்படுகிறது; நம்பப்படுகிறது’’ - பா.ம.க பலம் குறித்து முத்தரசன்

துவரையிலும் எதிரெதிர் களத்தில் நின்று திட்டித் தீர்த்து முட்டி மோதிக்கொண்ட கட்சிகளெல்லாம் கூட்டணியாக கைகோத்துக் கொள்ளும் காலமிது. ஆம்... வரவிருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள பா.ம.க., அ.தி.மு.க., பி.ஜே.பி ஆகிய கட்சிகள், ஒரே கூட்டணியாக இணைந்திருக்கின்றன. இதில், தே.மு.தி.க உடனான தொகுதிப் பங்கீட்டில் மட்டும் இன்னும் இழுபறி நிலை நீடித்து வருகிறது. 

எதிர் முகாமான தி.மு.க., கூட்டணிக்குள் இடம் பெற்றிருக்கும் முக்கியக் கட்சிகளுக்கிடையேயும் தொகுதிப் பங்கீடு குறித்த சலசலப்புகள் எதிரொலிக்க ஆரம்பித்திருக்கின்றன. காங்கிரஸ் உடனான தொகுதிப் பங்கீடு கிட்டத்தட்ட முடிவடைந்துவிட்ட சூழ்நிலையில், இன்று மாலை இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்படுகிறது. அதேநேரம் கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்தியக் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், ம.தி.மு.க. ஆகிய கட்சிகள் எதிர்பார்த்த எண்ணிக்கையில் தொகுதிகள் கிடைக்காத நிலை நீடிப்பதாகச் செய்திகள் வெளியாகி வருகின்றன.

இரா.முத்தரசன்

இந்நிலையில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசனிடம் பேசினோம்....

முதலில் அ.தி.மு.க தலைமையிலான கூட்டணி குறித்துப் பேச ஆரம்பித்தவர், ``நீட், காவிரி, மேகதாது, பேரிடர்கால நிதிஒதுக்கீடு... என்று ஒவ்வொரு பிரச்னையிலும் மத்திய பி.ஜே.பி அரசு, தொடர்ந்து தமிழ்நாட்டுக்கு எதிரான வகையிலேயே செயல்பட்டு வந்திருக்கிறது. இது அனைவருக்குமே தெரியும். குறிப்பாக இப்போது கூட்டு சேர்ந்துள்ள அ.தி.மு.க-வைச் சேர்ந்த தம்பிதுரையே நாடாளுமன்றத்தில், பி.ஜே.பி அரசின் செயல்பாடுகள் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்துப் பேசியிருக்கிறார். 

இதற்கிடையில், திராவிடக் கட்சிகளோடு இனி கூட்டணி கிடையாது என்று ஏற்கெனவே அறிவித்திருந்த பா.ம.க., இப்போது 10 கோரிக்கைகளை முன்வைத்து அ.தி.மு.க-வோடு கூட்டு சேர்ந்திருக்கிறது. கோரிக்கைகளில் குறிப்பிடப்பட்டிருக்கும் பிரச்னைகள் அனைத்துக்கும் காரணமாக இருப்பவர்களே அ.தி.மு.க-வினரும், பி.ஜே.பி-யினரும்தான். ஆக, பிரச்னைக்குக் காரணமாக இருப்பவர்களிடமே கோரிக்கைகளை வைத்து யாரை ஏமாற்றப் பார்க்கிறார்கள்? 

கட்சியின் பொதுக்குழு கூடி முடிவெடுத்துத்தான் அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியில் இணைந்திருக்கிறோம் என்று அறிவித்திருக்கிறது பா.ம.க. இவர்கள் சொல்வது உண்மையென்றால், கூட்டணி குறித்த பொதுக்குழுவின் முடிவை இதுவரையிலும் வெளியில் அறிவிக்காமல், ரகசியமாக வைத்திருந்தது ஏன்? 

கூட்டணியை முடிவு செய்துவிட்டு, `இது பொதுக்குழுவின் முடிவு' என்றெல்லாம் சொல்வது எத்தகைய ஏமாற்றுவேலை. ஆக, முழுக்க முழுக்க பச்சை சந்தர்ப்பவாத கூட்டணி இது. மக்களும் இவர்களது நாடகங்களைப் பற்றித் தெளிவாகத் தெரிந்துவைத்திருக்கிறார்கள். `மத ஓடத்தில் ஏறிய மாந்தரே, பலி பீடத்தில் சாய்ந்தீரே' என்று புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் எழுதிய கவிதை வரிகளுக்கு உதாரணமாக அ.தி.மு.க-வும் பா.ம.க-வும் பலி பீடத்தில் சாய்ந்திருக்கின்றன. எனவே, தமிழ்நாட்டு மக்கள் இவர்களுக்கு உரிய பாடம் புகட்டுவார்கள்!'' என்று ஆவேசமானவரிடம் நமது கேள்விகளை முன்வைத்தோம்.

ஸ்டாலின் - ராமதாஸ் - எடப்பாடி பழனிசாமி

``தி.மு.க-வோடும் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்திவந்த பா.ம.க., இறுதியில் அ.தி.மு.க கூட்டணியோடு இணைந்துவிட்டதால்தான் கோபப்படுகிறீர்களா?''

``தி.மு.க-வோடு பா.ம.க கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தியதென்பதெல்லாம் அதிகாரபூர்வமற்ற தகவல்கள்; அதுபோன்ற எந்தத் தகவலும் எனக்கு வரவில்லை.''

``வட மாவட்டங்களில், பலமாக உள்ள பா.ம.க., அ.தி.மு.க கூட்டணியில் இணைந்திருப்பது, தி.மு.க கூட்டணிக்குப் பின்னடைவுதானே...?''

``அப்படியெல்லாம் சொல்லப்படுகிறது; பேசப்படுகிறது; நம்பப்படுகிறது.... அவ்வளவுதான். மற்றபடி அதே வட மாவட்டங்களில் இடதுசாரிகளும்தான் பலமாக இருக்கிறார்கள். எங்கள் கூட்டணியைச் சேர்ந்த மற்றக் கட்சிகளும்தான் வலுவாக இருக்கின்றன. எனவே எங்களுக்கு எந்தப் பின்னடைவும் கிடையாது. மாறாக அ.தி.மு.க தலைமையிலான கூட்டணிதான், 40 தொகுதிகளில் ஒன்றில்கூட வெற்றிபெற முடியாத அளவில் பலத்த தோல்வியைச் சந்திக்கும்.''

``தி.மு.க கூட்டணியில், 3 தொகுதிகளைக் கேட்டு வரும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒரு தொகுதி மட்டுமே ஒதுக்கப்படுவதால், அக்கட்சியினர் அதிருப்தியில் உள்ளனர் எனச் செய்திகள் வெளியாகின்றனவே...?''

``இதுவரையிலும் நானோ அல்லது எங்கள் கட்சியைச் சேர்ந்த மற்ற தோழர்களோ, தலைவர்களோ இதுமாதிரி எந்தவிதமான அதிருப்தி கருத்துகளையும் வெளியிடவில்லையே...! இப்படியிருக்கும்போது, ஊடகத்தில் இதுபோன்ற செய்திகள் வெளியாகிறது என்றால், அது யூகத்தின் அடிப்படையில் அவர்களாகவே போட்டுக்கொண்ட செய்திகளாக இருக்கும். மற்றபடி நாங்கள் இதுவரையில் எந்தவிதமான அதிருப்தியையும் தெரிவிக்கவில்லை!''


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close