`விமான நிலையம் வந்தும் எங்களை விடவில்லை’ - மலேசியாவிலிருந்து மீண்ட தமிழர்கள் கண்ணீர் | nellai people Tears who survived from Malaysia

வெளியிடப்பட்ட நேரம்: 18:03 (20/02/2019)

கடைசி தொடர்பு:18:03 (20/02/2019)

`விமான நிலையம் வந்தும் எங்களை விடவில்லை’ - மலேசியாவிலிருந்து மீண்ட தமிழர்கள் கண்ணீர்

திருநெல்வேலி மாவட்டம் தலைவன் கோட்டையைச் சேர்ந்த 49 பேர் மின்சார டவர் அமைக்கும் பணிக்காக கடந்த வருடம் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அங்கு முறையான வசதி, பாஸ்போர்ட் இல்லாததால் அவர்கள் அந்நாட்டு அரசிடம் சிக்கியுள்ளனர்.  

கனிமொழி

இது தொடர்பாக அந்த ஊர் மக்கள் நெல்லை சென்றிருந்த தி.மு.க எம்.பி கனிமொழியிடம் முறையிட்டுள்ளனர். அவரும் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார். இதனையடுத்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுக்கு தகவல் தெரிவித்த கனிமொழி மலேசியாவில் சிக்கியவர்களை மீட்க ஏற்பாடு செய்துள்ளார். இதனையடுத்து இன்று காலை அவர்கள் அனைவரும் சென்னை விமான நிலையம் வந்துள்ளனர்.

சென்னையிலிருந்து நெல்லைக்குப் பயணித்துக்கொண்டிருக்கும் போது மலேசியாவில் சிக்கி மீட்கப்பட்ட வெள்ளைத்துறை என்பவரின் உறவினர் சுப்பையாவிடம் பேசினோம். அவர் கூறும் போது, ``நெல்லையிலிருந்து அனைவரும் புறப்படுவதற்கு முன்னர் மின்சார டவர் அமைக்கும் பணிக்காக நல்ல சம்பளம், உணவு, தங்குமிடம் போன்ற அனைத்து வசதிகளும் செய்து தருவதாகச் சொல்லித்தான் அழைத்துச் சென்றார்கள். அழைத்துச் சென்றவர் மீது எந்தத் தவறும் இல்லை. அங்குச் சென்ற பிறகு, நிறுவனம் தரப்பிலிருந்து எந்த உதவியும் முறையாக வழங்கப்படவில்லை. உணவு, தங்குமிடம், போக்குவரத்து போன்ற வசதிகள் எதுவும் ஏற்பாடு செய்துதரவில்லை. மாறாக ஒரு அட்டையைக் கொடுத்து காட்டில் தங்கவைத்துள்ளனர். இந்த 49 பேரின் பாஸ்போர்டையும் நிறுவனம் வாங்கிவைத்துள்ளது. உணவு, போக்குவரத்து இல்லாமல் இவர்கள் அனைவரும் சிரமப்படவே இது பெரும் பிரச்னையாகியுள்ளது. 

பிறகு மலேசியாவில் சிக்கியவர்கள் எங்களுக்குத் தகவல் தெரிவித்தனர். நாங்களும் இது தொடர்பாக பல அதிகாரிகளைப் பார்த்து முறையிட்டோம். மலேசிய தமிழ்ச் சங்கத்தினர், எம்.எல்.ஏ கருணாஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் எங்களுக்கு உதவி செய்தனர். பின்னர் தி.மு.க எம்.பி கனிமொழிக்கு இந்தத் தகவல் சென்றது. அவர் மத்திய வெளியுறத்துறை அமைச்சருக்குத் தெரிவித்து அவர்களை மீட்க ஏற்பாடுகளைச் செய்துள்ளார். 49 பேரும் மலேசியாவில் இருக்கும் போது அவர்களுக்கு உணவு, போக்குவரத்து போன்ற வசதிகளைக் கனிமொழி தரப்பினர் செய்துள்ளார். பிறகு இன்று காலை 7 மணிக்கு மலேசியாவிலிருந்து புறப்பட்ட விமானம் காலை 11:30 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைந்தது. அவர்களை வரவேற்க அரசு தரப்பிலிருந்து அமைச்சரும், சில அதிகாரிகளும் வந்திருந்தனர்.

விமான நிலையம் வந்து நீண்ட நேரமாகியும் யாரும் வெளியில் வரவில்லை நிறைய கட்டுப்பாடுகள் செய்வதாக எங்கள் மகன்கள் எனக்கு போன் செய்து கூறினார். பின்னர் நாங்கள் கனிமொழி அலுவலகத்துக்கு போன் செய்து இந்தத் தகவலை தெரிவித்தோம். பின்னரே அனைவரும் வெளியில் வந்தனர். விமானநிலையத்தில் வந்து இறங்கியவர்களை உள்ளேயே வைத்து `நாங்கள்தான் உங்களை மீட்டோம்’ எனக் கூறும் படி அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதை நிராகரித்த எங்கள் ஊர் மக்கள் அரசு ஏற்பாடு செய்திருந்த வாகனத்தை விடுத்து, கனிமொழி ஏற்பாடு செய்திருந்த வாகனத்தில் ஏறி ஊருக்குப் புறப்பட்டோம். இன்று காலை உணவும் கனிமொழி தரப்பிலிருந்துதான் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது'  எனக் கூறினார்.
 


[X] Close

[X] Close